

சில நாடுகள் பொருளாதாரத்தில் முன்னணியில் நிற்பதற்கு எந்தெந்த தொழில் முதன்மை பெற்றதாக இருக்கிறது? பொருளாதாரம் பற்றி வள்ளுவர் குறிப்பிடும் செல்வம் எதெல்லாம்? என்பதை இப்பகுதியில் காண்போம்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் சிறக்க எத்தனையோ வாய்ப்புகளும், வழிகளும் உள்ளன. வள்ளுவர் பலவற்றையும் நாட்டின் செல்வம் என்று சொல்லுகின்றார். செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்றும், கேடில் விழுச்செல்வம் கல்வி என்றும், அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் என்றும், பணிதல் செல்வம் என்றும், வேண்டாமை அன்னவிழுச் செல்வம் என்றும் இன்னும் பல வகையிலும் வள்ளுவர் செல்வம் பற்றி குறிப்பிடுகின்றார்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று பொருட்செல்வத்தையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
வள்ளுவர் இவ்வாறெல்லாம் வெவ்வேறு வகைப்பட்ட செல்வங்களை குறித்தார் எனும்போது, அனைத்தையும் ஆராய்ந்தால் அவை அனைத்தும் மக்கள் மாறுபாடற்று, நிறைவுற்று, வஞ்சனை அற்று, பகையற்று, சூதற்று, பண்பட்ட நல்வாழ்வினிலே சிறக்க வாழச் சிறந்த சாதனங்களாகவே முடிவதோடு, இவை ஒன்றை ஒன்று பற்றிப் படரும் தன்மையனவாக உள்ளன என்பதும் நன்கு புலப்படும். இந்த அடிப்படையில் மக்கள் வாழ்வுக்கு இயைந்த செல்வம் அனைத்தும் பொருளாதார வாழ்வின் அடிப்படைச் செல்வங்களே (Basic assets).
இன்று உலகில் உள்ள பல்வேறு நாடுகள் பல்வேறு துறைகளால் தத்தம் நாட்டு பொருளாதார நிலையை பெருக்கிக் கொள்ளுகின்றன. பெரும் பயிர் தொழிலால் நாட்டு செல்வ வளத்தை பெருக்கிக் கொண்ட நாடுகள் பல. இன்று அவையும் பிற வகைகளில் பொருள் பெருக்க வழிவகைகளை நாடுகின்றன. இன்றும் உழவுத் தொழிலாலும், பிற விளைபொருள்களாலும் நாட்டு வளத்தையும், பொருளாதார அமைப்பையும் பெருக்கிக் கொள்ளும் நாடுகள் இல்லாமல் இல்லை.
நாட்டு இயற்கை வளம், சூழல், பிற பருவநிலைகள் இவற்றின் காரணமாக சில நாடுகள் உழவு முதலியவற்றாலும், பிற உயிர்ப் பொருள் தாவரம் முதலியவற்றாலும் சிறந்து விளங்குவதை அறிகிறோம். எடுத்துக்காட்டாக கூற வேண்டுமென்றால் ஆஸ்திரேலியாவின் இயற்கை வளமே அந்நாட்டு பொருளாதார வளமாக அமைகின்றது.
காயும், கனியும், பிற உணவுப் பொருட்களும் பெருகி விளையும் அந்நாட்டிலே கால்நடைகள் எனும் ஆடும் சிறந்த பொருளாதாரமாக அமைவதை அறிகிறோம்.
மலேசியா நாட்டின் வானோங்கிய ரப்பர் மரங்கள் தன் கண்ணீர் வடித்த பாலால் நாட்டை செல்வ வளம் உள்ள நாடாக மாற்றுகின்றன. இதுபோல் டென்மார்க் இன்னும் சில நாடுகள் இயற்கை விலை பொருட்களாக வள்ளுவர் குறித்த மாடு போன்ற செல்வம் வழங்கினாலும் பிற நாடுகளுடன் தத்தம் பொருளாதார உயர்வை பெருக்கி ஓங்குகின்றன.
வேறு சில நாடுகள் வாணிபத்தால் வளம் கொழிக்கும் நாடுகளாகி பொருளாதார ஏற்றம் பெருகின்றன. வாணிபத்தின் உயர்வை உணர்ந்த பழந்தமிழ்நாட்டினர் திரைகடலோடியும் திரவியம் தேடு என்று கூறி வந்தனர். மணிமேகலை, சிலம்பு காலந் தொடங்கி கடல் மேல் கலம் செலுத்தி வாணிப வளம் பெருக்கினர்.
இன்றும் இந்திய நாடு வந்து வாணிபத்தால் வளம் பெற்ற மேலை நாட்டவரை காண்கின்றோம். போர்ச்சுக் கல்லும், பிரான்சும், டச்சும், பிரிட்டனும் வாணிப வளனைப் பெருக்கத்தானே இந்திய மண்ணில் காலடி வைத்தனர்.
அவர்தம் வாணிபத்தை எல்லையற்று பெருக்கி, நம் நாட்டை அடிமையாக்கி, வாணிப வளனுக்கு பாரதத்தை பெருஞ் சந்தையாக கொண்ட கொடுமை கருதி தானே கதர் கைராட்டை இயக்கமும், அந்நிய துணி பகிஷ்கார இயக்கமும் நாட்டிற்கு தேவையாக இருந்தது. எனவே வாணிபத்தாலும் செல்வ வளம் பெருக்க வாய்ப்பு உண்டு என்பதற்கு நம் நாட்டு வரலாறே நமக்கு சான்று தருகிறது.
இருபதாம் நூற்றாண்டின் பொருளாதாரம் பெரும்பாலும் தொழில் வளத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. நம் நாட்டில் பிற இயற்கை வளமும் வாணிப பொருள் வளமும் ஓரளவு இருந்தபோதிலும் உலக நாடுகளோடு சமமாக வள்ளுவர் காட்டியபடி ஒத்து ஓங்கி உயர வேண்டுமானால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொழில் அடிப்படையில் வளர வேண்டும்.
'எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நலனே'
என்று கூறி நாட்டின் பொருளாதார நிலையை கணக்கிடுவதற்கு சிறந்த வழி தனி மனிதர் வாழ்வில் கணக்கிடுவதே. தனிமனிதனின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் நாட்டு பொருளாதாரம் உயர்ந்தது என்பது பொருள். தனி மனிதன் வருவாய் குறையும்போது நாட்டு பொருளாதார நலனும் சீர்கெடும்.
ஆதலால் எல்லோரும் சோம்பல் இன்றி உழைத்து, பாடுபட்டு, பயனடையுங்கள். வாழுங்கள்; வாழ விடுங்கள்; நாட்டை பலமாக்குங்கள்; பொருளாதாரத்தை பெருக்குங்கள் என்று பல முறைகளில், பல துறைகளில் கூறிவந்துள்ளதை நினைவு கூர்ந்து பொருளாதார மேம்பாடு அடைய நம் பங்கினை அளிப்போமாக.