
இந்த நவீன உலகத்தில் எல்லா நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் குறைகளைக் களைய வாடிக்கையாளர் சேவை மையத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இதில் தக்க திறமைமிக்க பணியாளர்களை நியமித்துள்ளனர்.
அவர்களுக்கு வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளுதல், பழகுதல், வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வகையில் நிறுவனத்தின் சேவையை நிறைவேற்றல் என்று அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
நல்ல வாடிக்கையாளர்களை தக்க வைக்க,
டெலிவரி உறுதி, நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பு ஆகியவற்றை திருப்திகரமாக நிறைவு செய்தல்,
வாடிக்கையாளர்கள் தேவைகளை புரிந்து கொள்ளுதல்,
அவர்களின் உரையாடல்களை கூர்ந்து கவனித்தல் மற்றும்
இந்திய மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை தெரிந்து வைத்திருத்தல்
வாடிக்கையாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி (FAQ) களுக்கு உரிய பதில் அளித்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்தல்
போன்றவை முக்கியமாகும்.
இன்றைய சந்தை உலகில் வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் பிரதானமானதாகும். ஒரு நிறுவனத்தில் ஒரு சேவையை அல்லது பொருளை வாடிக்கையாளருக்கு அனுப்ப வாடிக்கையாளர் சேவை மையத்தின் உறுதியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
எந்த தேதியில் டெலிவரி செய்வோம் என்று சொன்னால், அந்த தேதியில் கட்டாயம் டெலிவரி செய்தாக வேண்டும். சில நேரங்களில் எதிர்பாராத விதமாக அனுப்ப இயலாவிட்டால், தக்க காரணங்களைக் கூறி வாடிக்கையாளரை திருப்தி படுத்த வேண்டும். இது அந்த நிறுவனத்தின் மீதுள்ள நம்பகத்தன்மையை உறுதிப் படுத்துவதாகும்.
வாடிக்கையாளர் சேவை வெற்றிகரமாக இருக்க...
1. வாடிக்கையாளர் தேவையை புரிந்து கொள்ளுதல்
வாடிக்கையாளர் சேவை வெற்றிகரமாக இருக்க வேண்டுமென்றால், முதலில் வாடிக்கையாளரின் தேவையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளருடன் நட்புறவுடன் இருத்தல் வேண்டும். அத்தோடு பொறுப்புணர்வும் அவசியமாகும்.
2. அடிக்கடி வினா எழுப்புதல் தொடர்பான பதிலளித்தல்
சில தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடையே சில சந்தேகங்கள் எழலாம். அதனையொட்டி அவர்கள் வினா எழுப்பலாம். அவை அடிக்கடி அனைத்து வாடிக்கையாளர்களும் எழுப்பக்கூடிய வினாக்களாக இருக்கும். அவற்றிற்குத் தக்க முறையில் பதிலளிக்க வேண்டியது வாடிக்கையாளர் சேவை மையத்தின் பொறுப்பாகும்.
3. உறுதியளித்ததை விட விரைவான சேவை
வாடிக்கையாளர் சேவை மையம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்தால், அதை தக்க முறையில் நிறைவேற்ற வேண்டும். மேலும் அதை விட வேகமாகவும், உரிய காலத்திற்கு முன்பே சேவையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் வாடிக்கையாளர் சேவை மையம் சிறப்பாக செயல்படுகிறது என நிறைய வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு வருவார்கள்.
4. உரிய விளக்கம்
ஒரு நிறுவனத்தில் ஒரு பொருளை ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்தால், அதற்கான உரிய விளக்கம் மற்றும் விலை அந்த பொருளின் நீடித்த ஆயுள் ஆகியவற்றை சிறப்பான முறையில் எடுத்தியம்ப வேண்டும்.
அந்த பொருளுக்கான விலை அதை செலுத்தும் முறைகள் உதாரணமாக யுபிஐ நேரடி ரொக்கம் அல்லது வங்கி வாயிலாக செலுத்துதல் ஆகியவற்றை தெளிவாக வாடிக்கையாளர் சேவை மையம் தெரிவித்தல் சிறப்பாகும்.
5. உடனடி பதில்
ஒரு வாடிக்கையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உடனடியாக பதிலளிக்க வேண்டும். அவ்வாறு செய்யலாமல் முன்னரே பதிவு செய்யப்பட்ட பதில் அவர்களுக்கு ஒலிக்க செய்தால், வாடிக்கையாளர்களுக்கு எரிச்சல் ஏற்படும்.
எனவே, வாடிக்கையாளர்களுக்கு அன்பான பணிவான பதில்கள் வாடிக்கையாளர் சேவை மைய பணியாளர்கள் அளித்தால், அந்த நிறுவனம் நிச்சயம் வெற்றிப் பாதையில் பயணிக்கும் என்பது நிச்சயம்.