
ஐந்து அறிவு வரை உள்ள ஜீவன்கள், தாவரங்கள் போன்ற இயற்கையின் அங்கங்களாய் திகழும் ஜீவன்களின் அசைவை வைத்து நல்லது, கெட்டதை அனுமானிப்பதே சகுனம் பார்ப்பது ஆகும். ஒவ்வொரு நல்ல செயல்களை தொடங்கும்போதும் நாம் சகுனம் பார்க்கின்றோம். அதேபோல், திருமண விழாவின்போதும் அதிக அளவில் நாம் சகுனங்கள் பார்க்கின்றோம். திருமணம் நடக்கும்போது மழை பெய்வது நல்ல சகுனமா? அல்லது கெட்ட சகுனமா? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
‘திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்’ என்று அனைவரும் கூறக் கேட்டிருப்போம். அத்தகைய திருமணமானது அன்றைய காலத்தில் பிரம்ம முகூர்த்தமான காலை நேரத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் இரவிலும் நடைபெறுகின்றது.
மழை பெய்வது ஒரு இயற்கை நிகழ்வாகும். மழை பொழிவானது அனைவரின் மனதிலும் ஓர் மகிழ்வைக் கொடுக்கும். அந்த மழையானது, வறண்ட நிலத்தில் உள்ள பயிர்களை உயிர்ப்பிக்கிறது. அந்த வகையில் வைத்து பார்க்கும்போது, திருமண நாளன்று மழை பெய்வது அந்த மணமக்களின் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது.
மழையானது, ஆசீர்வாதம், தூய்மை, ஒற்றுமை மற்றும் வளமை ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே, நமது வாழ்க்கையின் முக்கிய நாட்களில் மழை பெய்வது நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. மழை என்பது ஆசீர்வாதத்தை குறிக்கிறது. எனவே, திருமண நாளன்று மழை பெய்தால் அந்த மணமக்கள் மழையினால் ஆசிர்வதிக்கப்படுவார்கள்.
மழை பெய்ததும் நமக்குத் தேவையான நீர் மற்றும் வளமை கிடைக்கும். அதேபோல், திருமணம் நடைபெறும்போது மழை பெய்தால், அந்த மணமக்கள் ஒற்றுமையாகவும், அவர்களின் எதிர்காலத்திற்குத் தேவையான நிறைந்த செல்வத்தைப் பெற்று நல்ல வளமுடன் வாழ்க்கையைத் தொடங்குவார்கள் என்று கருதப்படுகிறது.
மழை பெய்து முடிந்ததும் ஒரு புதிய ஆரம்பத்திற்கான வழி கிடைத்து விட்டது என்று அர்த்தமாகும். எனவே, திருமணம் நாளில் மழை பெய்வதால், திருமணம் முடிந்த புதிய தம்பதிகள், தங்களின் புதிய வாழ்க்கையில் தெளிவான மனநிலையுடன் இருப்பார்கள் என்று பொருள்படும். எனவே, திருமணத்தின்போது மழை பெய்வது மிகவும் நல்ல சகுனமாகும். தம்பதிகளின் மென்மேலும் வளர்ச்சியையும், மகிழ்ச்சிக்கு குறைவில்லை என்பதையும் மழை பெய்வது குறிக்கிறது.