பங்குச்சந்தையில் பெரும் சரிவு... ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்தது எப்படி?!

கடுமையான சந்தைச் சரிவிலும் முதலீட்டாளர்களுக்கு 73% வரை லாபம் அள்ளிக் கொடுத்த டோன்போ இமேஜிங்!
டோன்போ இமேஜிங் - Tonbo Imaging IPO
டோன்போ இமேஜிங் - Tonbo Imaging IPOImage credit: linkedin.com
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on: 

இந்தியப் பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளால் கடும் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. முன்னணி ப்ளூ சிப் நிறுவனங்களின் பங்குகள் முதற்கொண்டு புதிய ஐபிஓ-க்கள் வரை பலவும் சந்தையில் நிலைநிறுத்த முடியாமல் தள்ளாடி வரும் சூழலில், முதலீட்டாளர்களின் புருவங்களை உயர்த்த வைக்கும் வகையில் ஒரு மாபெரும் வர்த்தகச் சாதனை நிகழ்ந்துள்ளது. அதுதான் ‘டோன்போ இமேஜிங்’ (Tonbo Imaging) நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு!

சந்தையின் பெரும்பகுதியும் சிவப்பு நிறத்தில் ரத்தக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த வேளையில், இந்த ஐபிஓ மட்டும் அலாட்மென்ட் கிடைத்த முதலீட்டாளர்களுக்குக் குபேர யோகத்தைக் கொடுத்துள்ளது. இன்று (23-10-26) பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு 66% லாபத்துடன் தொடங்கி, ஒரு கட்டத்தில் 73% வரை லாபத்தைக் கொடுத்து, பங்குச்சந்தையில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளதோடு, ஐபிஓ-க்கள் மீதான ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

கிரே மார்க்கெட் கணிப்பை நிஜமாக்கிய அபார லிஸ்டிங்!

பொதுவாக பங்குச்சந்தையில் ஒரு ஐபிஓ களமிறங்கு வதற்கு முன்பாக ‘கிரே மார்க்கெட் பிரீமியம்’ (GMP) எனப்படும் அதிகாரப்பூர்வமற்ற வர்த்தகத்தில் அதன் எதிர்பார்ப்பு கணிக்கப்படும். டோன்போ இமேஜிங் ஐபிஓ வெளியிடப்பட்டபோது, இதன் ஜிஎம்பி சுமார் 71 முதல் 75 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், சந்தையின் தற்போதைய கடுமையான சரிவு நிலையைக்கண்டு, “ஜிஎம்பி என்னதான் அதிகமாக இருந்தாலும், லிஸ்டிங் நாளில் சந்தைப் புயலில் சிக்கி இதன் லாபம் குறைந்துவிடுமோ?” என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

டோன்போ இமேஜிங் - Tonbo Imaging IPO
டோன்போ இமேஜிங் - Tonbo Imaging IPOImage credit: Gemini

ஆனால், அந்தச் சந்தேகங்களையெல்லாம் தவிடு பொடியாக்கி, சந்தையில் சாகசம் காட்டியிருக்கிறது டோன்போ இமேஜிங். இந்த ஐபிஓவின் பிரைஸ் பேண்ட் உச்ச விலை ₹700 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், லிஸ்டிங் நாளில் சந்தை திறக்கப்பட்டபோதே என்எஸ்இ-யில் ₹1,160, பிஎஸ்இ-யில் ₹1,162 என்ற அசத்தல் விலையில் பட்டியலிடப்பட்டது. அதாவது, பிரைஸ் பேண்ட் விலையைவிட ஒரே அடியில் ₹460 (65.71%) அதிகரித்துத் தொடங்கியது.

வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்களின் ஆக்ரோஷமான வாங்கும் ஆர்வத்தால் பங்கு விலை மேலும் உயர்ந்து இன்றைய அதிகபட்சமான ₹1,211 எனும் புதிய உச்சத்தைத்தொட்டது. பிரைஸ் பேண்ட் உச்ச விலையான ₹700-லிருந்து கணக்கிட்டால், ஒரு பங்குக்கு ₹511 (73%) வரை நிகர லாபம் கிடைத்தது.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை வீழ்ச்சியா? பயப்படாமல் கோடிகளில் லாபம் பார்க்க இதோ எளிய உத்திகள்!
டோன்போ இமேஜிங் - Tonbo Imaging IPO

இதன் லாட் அளவான 21 பங்குகள் முழுவதையும் அந்த உச்ச விலையில் விற்ற ஒரு சில்லறை முதலீட்டாளருக்கு, ஒரே நாளில் கிடைத்துள்ள நிகர லாபம் மட்டும் ₹10,731 ஆகும்! (லிஸ்டிங் விலையான ₹1,160-லேயே விற்றிருந்தால் லாபம் ₹9,660). முதலீடு செய்த ₹14,700 தொகையில், ஒரே நாளில் ₹10,700-க்கும் மேல் லாபம் என்பது வழக்கமாக நான்கு அல்லது ஐந்து வெற்றி பெற்ற ஐபிஓ-க்களில் சேர வேண்டிய சராசரி லாபத்தை, ஒரே நாளில் அள்ளிக் கொடுத்ததற்குச் சமமாகும்.

தொடக்க கட்ட உயர் விலைகளுக்குப் பிறகு இப்பங்கு (இன்றைய குறைந்தபட்சம் ₹1,050) ₹1060 – 1080 என்ற அளவில் மூன்று மணி வரை நிலைகொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரிவுச் சூழலிலும் டோன்போ இமேஜிங் சாதித்தது எப்படி?

சந்தையின் பொதுவான வீழ்ச்சிப் போக்கை எதிர்த்து நின்று, டோன்போ இமேஜிங் இந்த அளவுக்கு அசுர லாபத்தைத் தந்ததற்குப் பின்னணியில் ஐந்து முக்கியக் காரணங்கள் உள்ளன:

1. பாதுகாப்புத்துறை ஆதிக்கம் (Defence & Aerospace Play): டோன்போ இமேஜிங் நிறுவனம் சாதாரண உற்பத்தி நிறுவனம் அல்ல. இது ராணுவம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான நவீன எலக்ட்ரோ-ஆப்டிகல், தெர்மல் இமேஜிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த ‘நைட் விஷன்’ கேமரா தொழில்நுட்பங்களை உருவாக்கும் அதிநவீன நிறுவனமாகும். மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையால், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடமிருந்து ஆர்டர்கள் வருகின்றன; 2026 ஜூன் 30 நிலவரப்படி நிறுவனத்தின் ஆர்டர் புத்தகம் ₹314 கோடி.

2. முன்னணி வர்த்தக இடம் (Business Moat): பிற நிறுவனங்களைப் போலன்றி, டோன்போ நிறுவனம் தனது மென்பொருள் மற்றும் வன்பொருள் வடிவமைப்புக்கான சொந்த அறிவுசார் சொத்தை (Intellectual Property) வைத்துள்ளது. இதன் இயக்க லாப வரம்பு (EBITDA Margin) 2026 நிதியாண்டில் சுமார் 29% ஆக உள்ளது.

3. தேவை அதிகம், வழங்கல் குறைவு (Scarcity Factor): இந்த ஐபிஓ-வின் மொத்த அளவு ₹852 கோடி என்ற நடுத்தர வரம்பில்தான் இருந்தது. ஆனால் இதற்கு 135.9 மடங்கு சந்தா வந்தது. சந்தையில் வாங்குவதற்கான தேவை அதிகமாகவும், பங்குகள் குறைவாகவும் இருந்ததால், லிஸ்டிங் நாளில் பங்கை வாங்குவதற்கு நிறுவன முதலீட்டாளர்கள் போட்டி போட்டனர்.

டோன்போ இமேஜிங் - Tonbo Imaging IPO
டோன்போ இமேஜிங் - Tonbo Imaging IPOImage credit: Gemini

4. நிறுவன முதலீட்டாளர்களின் ஆதரவு (QIB Backing): சில்லறை முதலீட்டாளர்களைவிட, 43 ஆங்கர் முதலீட்டாளர்கள் ₹255.36 கோடிக்கு இப்பங்குகளை முன்கூட்டியே வாங்கியிருந்தனர்; QIB பிரிவில் 293.56 மடங்கு சந்தா பெறப்பட்டிருந்தது (என்ஐஐ 170.94 மடங்கு; சில்லறை முதலீட்டாளர்கள் 31.07 மடங்கு). இதனால் சந்தைச் சரிவிலும் இதன் விலை வீழாமல் தப்பியது.

5. அதிக மதிப்பீட்டிலும் குறையாத தேவை: இந்த ஐபிஓ-வின் உச்ச விலையில் நிறுவனத்தின் மதிப்பு ஆண்டு லாபத்தைப் போல் சுமார் 79 மடங்கு. இதை ‘நியாயமான விலை’ என்று பல ஆய்வாளர்கள் கருதவில்லை. இருந்தும், பாதுகாப்புத் துறை மீதான ஆர்வத்தால் தேவை குறையாமல் இருந்ததே இதன் வெற்றிக்கு மற்றொரு காரணம்.

வரலாற்றில் 70% மேல் லிஸ்டிங் லாபம் தந்த பிற ஐபிஓ-க்கள்

டோன்போ இமேஜிங் அடைந்த இந்த வெற்றி அரிதானது என்றாலும், இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றிற்கு இது முற்றிலும் புதியது அல்ல. கடந்த காலங்களிலும் சந்தையின் பல்வேறு சூழல்களில், முதல் நாளிலேயே 70 சதவீதத்திற்கும் அதிகமான அபார லாபத்தை அள்ளிக் கொடுத்த பல முன்னணி ஐபிஓ-க்கள் உள்ளன. அவற்றின் விபரம் பின்வருமாறு:

நிறுவனம் ஐபிஓ வெளியீட்டு விலை லிஸ்டிங் விலை (பிஎஸ்இ; ஐடியா ஃபோர்ஜ்: என்எஸ்இ) லிஸ்டிங் நாள் லாபம் பட்டியலிடப்பட்ட தேதி

Sigachi Industries Limited ₹163 ₹575 252.76% நவம்பர் 15, 2021

Paras Defence and Space Technologies ₹175 ₹475 171.43% அக்டோபர் 01, 2021

Happiest Minds Technologies ₹166 ₹351 111.45% செப்டம்பர் 17, 2020

Tatva Chintan Pharma Chem ₹1,083 ₹2,111 95% ஜூலை 29, 2021

ideaForge Technology Limited ₹672 ₹1,300 93.45% ஜூலை 07, 2023

(இவை லிஸ்டிங் விலையின் அடிப்படையிலான லாபம். எடுத்துக்காட்டாக, சிகாச்சி அன்றைய தினம் ₹603.75 வரை உயர்ந்து 270% லாபத்தில் முடிந்தது).

இதையும் படியுங்கள்:
Jio IPO-வில் விண்ணப்பிக்கலாமா? முதல் நாள் நிலவரமும் எச்சரிக்கையும்!
டோன்போ இமேஜிங் - Tonbo Imaging IPO

இரு வேறு துருவங்கள்: டோன்போ vs போன்ஃபிக்லியோலி!

இன்று 'போன்ஃபிக்லியோலி டிரான்ஸ்மிஷன்ஸ்' (Bonfiglioli Transmissions) நிறுவனத்தின் ஐபிஓ-வும் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஜிஎம்பி சந்தையில் ஓரளவுக்கு நல்ல எதிர்பார்ப்பைக்கொண்டிருந்த இந்த ஐபிஓ, லிஸ்டிங் நேரத்தில் முதலீட்டாளர்களுக்குக் கடும் ஏமாற்றத்தையே கொடுத்தது. பிரைஸ் பேண்ட் துவக்க விலையான ₹558-ஐ விடச் சரிவில், ₹551 என்ற விலையிலேயே பட்டியலிடப்பட்டது.

காலை 10 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதிலிருந்து நீண்ட நேரமாகச் சிவப்பு நிறத்திலேயே தத்தளித்துக் கொண்டிருந்த பங்கு விலை, ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காலை 11:15 மணி அளவில்தான் லேசாக மீண்டு பச்சை நிறத்தையே (Positive Zone) தொட்டது. ஆனால், அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை; ஒட்டுமொத்த லாட் அளவிற்கும் வெறும் ₹150 மட்டுமே லாபத்தைக் காட்டிவிட்டு, மீண்டும் சரிந்து சிவப்பு நிறத்திற்கே சென்றது.

நீண்டகால நோக்கில் நல்ல நிறுவனம் என்றாலும், லிஸ்டிங் நாளன்றே உடனடி லாபத்தை (Listing Gain) எதிர்பார்த்துக் காத்திருந்த சில்லறை முதலீட்டாளர் களுக்கு போன்ஃபிக்லியோலி ஐபிஓ கடும் ஏமாற்றமாகவே அமைந்தது. இனி வரும் நாட்களில் இது மெல்ல மீண்டு அசல் தொகையையோ அல்லது சிறிதளவு லாபத்தையோ தருமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு டோன்போ இமேஜிங் ஐபிஓ அளித்த மகத்தான வெற்றியும், போன்ஃபிக்லியோலி ஐபிஓ அளித்த ஏமாற்றமும் இரு துருவங்களாக அமைந்துள்ளன. டோன்போ இமேஜிங் முதலீட்டாளர்களுக்கு அள்ளிக் கொடுத்த அளப்பரிய லாபம், பங்குச்சந்தையில் அரிதினும் அரிய ஒரு வாய்ப்பாகும். இந்தச் சரிவுச் சூழலிலும் டோன்போ இமேஜிங் அலாட்மென்ட் கிடைக்கப்பெற்று, அதன் உச்ச விலையில் விற்று லாபம் பார்த்த முதலீட்டாளர்களைப் 'பேரதிர்ஷ்டக்காரர்கள்' என்று தாராளமாகச் சொல்லலாம்.

முதலீட்டாளர்களுக்கான பாடம்

இந்த ஐபிஓ வரலாறு நமக்கு உணர்த்தும் முக்கியப் பாடம் என்னவென்றால், சந்தை ஒட்டுமொத்தமாகச் சரிவில் இருந்தாலும், தனித்துவமான தொழில்நுட்பம், கட்டுப்படுத்தக்கூடிய கடன் சுமை, பாதுகாப்புத்துறை சார்ந்த பிரகாசமான எதிர்காலம் மற்றும் பிராண்ட் ஆதிக்கம் கொண்ட நிறுவனங்களைத் தேர்வு செய்தால் லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என்பதே!

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை வீழ்ச்சியா? பயப்படாமல் கோடிகளில் லாபம் பார்க்க இதோ எளிய உத்திகள்!
டோன்போ இமேஜிங் - Tonbo Imaging IPO
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com