

பங்குச்சந்தையில் ஏற்படும் திருத்தங்களையும் (Correction), வீழ்ச்சிகளையும் (Crash) கண்டு பெரும்பாலான முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் பதற்றமடைவது இயல்பு. குறிப்பாக, குறுகிய கால முதலீட்டாளர்கள், Intraday மற்றும் Swing Trading வர்த்தகர்கள் ஆகியோருக்கு இத்தகைய திடீர்ச் சரிவுகள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், சந்தையை அணுகும் கோணத்தைச் சற்றே மாற்றினால், சந்தைச் சரிவுகள் லாபத்துக்கான அருமையான வாய்ப்பு என்பது புரியவரும்.
சரிவுக் காலங்களை நீண்டகால முதலீட்டாளர்களும், 'பொசிஷனல் டிரேடர்களும்' (Positional Traders) தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது தொடர்பான நுட்பங்களைப் பார்ப்போம்.
முதலீட்டு உத்திகள்:
நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது ‘தள்ளுபடி’ விற்பனை!
துணிக்கடையிலோ, பிற கடைகளிலோ, அமேசான் போன்ற ஆன்லைன் வணிகத் தளங்களிலோ நாம் விரும்பிய பொருள்கள் தள்ளுபடியில் கிடைத்தால் மகிழ்ச்சியோடு வாங்குவோம்.
வருடாந்திர ஆடித்தள்ளுபடியில் துணிக்கடைகளில் கூட்டம் முண்டியடிக்கும்; மலிவு விலை என்பதால் ஒன்றுக்குப் பதிலாக மூன்று, ஐந்து என ஆடைகளை வாங்கிக் குவிப்பார்கள்.
பங்குச்சந்தையில் சரிவுகளும் தள்ளுபடி போன்றதுதான். ஆனால், அந்தச் ‘சரிவுத் தள்ளுபடி’யில் மகிழ்வதற்கு பதிலாக முதலீட்டாளர்கள் பெரும்பாலானோர் பதற்றம், கவலை, அச்சம் கொள்கின்றனர்; இது தள்ளுபடி வாய்ப்பு என்பது புரியாமல், மிரண்டுபோய், வாங்காமல் நல்ல வாய்ப்பைத் தவறவிடவும் செய்கின்றனர்.
நீண்டகால நோக்கில் - 5 முதல் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் - முதலீடு செய்பவர்களுக்குச் சந்தையின் ‘திருத்தம்’ (Correction) மற்றும் ‘வீழ்ச்சி’ (Crash) ஆகிய இரண்டுமே மிகச்சிறந்த வாய்ப்புகளாகும். சந்தை உச்சத்தில் இருக்கும்போது அதிக விலைக்கு விற்கப்படும் முன்னணி ப்ளூ சிப் (Blue Chip) நிறுவனங்களின் பங்குகள், சந்தைச் சரிவின்போது மிகக்குறைந்த விலையிலும், சில சமயங்களில் அடிமாட்டு விலையிலும் கிடைக்கின்றன.
சாதாரணமாகச் சந்தை சீராக இயங்கும்போது ஏற்படும் படிப்படியான விலை உயர்வைவிட, இத்தகைய சரிவுக் காலங்களில் 15% முதல் 30% வரை குறைந்த விலையில் வாங்கும் பங்குகள் எதிர்காலத்தில் இரட்டிப்பு லாபத்தைத் தரும். பங்கு தனது பழைய உச்ச விலையை அடையும் போதே உங்களுக்கு 15% முதல் 30% வரை லாபம் கிடைத்துவிடும்; அதையும் தாண்டி விலை உயரும்போது கூடுதல் லாபமும் கிடைக்கும்.
சரிவில் பங்குகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
சந்தை சரிந்து கிடக்கிறது என்பதற்காகக் கண்மூடித்தனமாக அனைத்துப் பங்குகளையும் வாங்கிவிடக் கூடாது. குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காகப் பலவீனமான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது ஆபத்தானது.
1. நிறுவனத்தின் அடிப்படை வலிமை (Fundamentals): குறைந்த கடன், நிலையான நிர்வாகம் மற்றும் சீரான லாபம் ஈட்டுகிற பின்னணி கொண்ட நிறுவனங்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. துறையின் எதிர்காலம்: அடுத்த 5-10 ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ச்சியடையக்கூடிய வங்கி, நுகர்பொருள் (FMCG), தகவல் தொழில்நுட்பம் (IT), மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தலாம்.
3. தவணை முறை முதலீடு (Staggered Buying): கையில் உள்ள மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யக் கூடாது. சந்தை இன்னும் சரிந்தால் வாங்குவதற்கு ஏற்றவாறு முதலீட்டை 3 அல்லது 4 தவணைகளாகப் பிரித்துச் சிறுகச் சிறுக வாங்க வேண்டும்.
4. பென்னி பங்குகளைத் தவிர்த்தல்: வெறும் 5 ரூபாய், 10 ரூபாய் விலையில் உள்ள பலவீனமான 'பென்னி பங்குகளில்' (Penny Stocks) முதலீடு செய்வதைத் தவிர்த்து, லார்ஜ் கேப் (Large Cap) மற்றும் ப்ளூ சிப் பங்குகளில் முதலீடு செய்வது சிறந்தது. மிட் கேப்பையும் தேர்ந்தெடுத்து வாங்கலாம்.
பொசிஷனல் டிரேடிங் (Positional Trading) என்னும் சமநிலை உத்தி
பொதுவாக நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கிய பங்குகளை 5 முதல் 10 ஆண்டுகள் வரை விற்காமல் வைத்திருப்பார்கள். இதற்கு மாறாக, குறுகிய கால வர்த்தகத்திற்கும் நீண்டகால முதலீட்டிற்கும் இடையே உள்ள ஒரு அருமையான இடைப்பட்ட உத்திதான் 'பொசிஷனல் டிரேடிங்'. இது ஸ்விங் ட்ரேடிங்கின் அடுத்த கட்டம் எனலாம்.
ஒரு பங்கை வாங்கிச் சுமார் 3 முதல் 6 மாதங்கள் அல்லது அதிகபட்சமாக ஓராண்டு காலம் வரை கைவசம் வைத்திருந்து, நல்ல லாபம் வரும்போது விற்பனை செய்வதே 'பொசிஷனல் டிரேடிங்'.
தற்போதைய சந்தைக் கரெக்ஷனைப் பயன்படுத்தி, அதிக வீழ்ச்சியடைந்துள்ள முன்னணி ப்ளூ சிப் பங்குகளைப் பொசிஷனல் டிரேடிங் முறையில் வாங்கி வைப்பது சிறந்த வியாபார உத்தியாகும். சந்தை தனது சரிவிலிருந்து மீண்டெழும்போது முன்னணி நிறுவனப் பங்குகள் 12 முதல் 18 மாதங்களுக்குள் தங்களின் பழைய நிலையை அடையக்கூடும் என்பதோடு, புதிய உயர்வை நோக்கிச் செல்லவும் வாய்ப்புள்ளது.
இதன் மூலம் 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் 25% முதல் 40% வரையிலான லாபத்தைப் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது தேர்ந்தெடுக்கும் பங்கு, சந்தை நிலவரம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
எப்பொழுது லாபத்தைப் பதிவு செய்ய வேண்டும்?
பங்குகளை எப்போது, எப்படி வாங்க வேண்டும் என்பது போலவே எப்போது விற்கவேண்டும் என்பதும் முக்கியமானது. வர்த்தகம் செய்வது லாபத்துக்காகத்தான். அதனால் ஆசைப்படுவது தவறல்ல; பேராசைப்படுவது கூடாது. அது நஷ்டத்துக்கு வழிவகுக்கக்கூடும்.
பொசிஷனல் டிரேடர்கள் தங்கள் இலக்கு விலையை (Target Price - எ.கா: 30% லாபம்) அடைந்தவுடன் லாபத்தைப் பதிவு செய்துவிட்டு (Profit Booking) வெளியேறுவது நல்லது.
நீண்டகால முதலீட்டாளர்களாக இருந்தால், தங்களின் நிதி இலக்குகள் (குழந்தைகள் கல்வி, பிள்ளைகள் திருமணம், ஓய்வுகால நிதி போன்றவை) நிறைவேறும்போதோ, முதலீடு செய்த நிறுவனத்தின் அடிப்படைச் செயல்பாடுகள் அல்லது நிர்வாகத்தில் ஏதேனும் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டாலோ பங்குகளை விற்பனை செய்யலாம்.
மற்றபடி, பத்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக வைத்திருக்கத்தக்க சிறந்த பங்குகள் எனில் அவற்றை அவ்வாறு நீண்ட காலம் வைத்திருப்பதே பல மடங்கு லாபத்துக்கு வழிவகுக்கும்.
சந்தைச் சரிவைக் கண்டு அஞ்சாமல், சரியான விழிப்புணர்வுடனும் தெளிவான திட்டமிடலுடனும் அணுகினால், இத்தகைய கரெக்ஷன் காலங்கள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கும், பொசிஷனல் டிரேடர்களுக்கும் லாபத்தைப் பெருக்கும் நல்வாய்ப்பாக அமையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: