
ஹோண்டா நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தியில், உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2001-ல் இருசக்கர வாகன உற்பத்தியை தொடங்கிய ஹோண்டா நிறுவனம் கடந்த இரண்டு தசாப்தங்களில் 60 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த நிறுவனம் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய வடிவமைப்பில் Activa Std, Activa Dlx மற்றும் Activa H-Smart போன்ற மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. 2024ம் ஆண்டு இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன. அந்த வகையில் ஹோண்டா நிறுவனமும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கால் பதிக்க தொடங்கியுள்ளது.
தற்போது இந்த நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ’ஹோண்டா ஆக்டிவா இ’ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு இந்தாண்டு ஜனவரி 1-ம்தேதி தொடங்கியது. வாடிக்கையாளர்கள் ரூ.1,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பிப்ரவரி மாதம் டெலிவரி தொடங்கும் என்றும் ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ’ஹோண்டா ஆக்டிவா இ’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 1.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுக விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.1.52 லட்சம் வரை விலை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ’ஹோண்டா ஆக்டிவா இ’ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன மாதிரியான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
’ஹோண்டா ஆக்டிவா இ’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எளிமையான மற்றும் வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட் மற்றும் ஹேண்டில் பாரில் எல்இடி டே டைம் ரன்னிங் லைட் ஆகியவை பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு அம்சங்களாகும். ’ஹோண்டா ஆக்டிவா இ’ யில் புளூடூத் இணைப்பு, போன் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
’ஹோண்டா ஆக்டிவா இ’ எலெட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு மாற்றக் கூடிய ஹோண்டா மொபைல் பவர் பேக் இ பேட்டரிகளை கொண்டுள்ளது. இந்த இரண்டு பேட்டரிகளும் 1.5 kWh திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 102 கிமீ தூரம் பயணம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ’எலெட்ரிக் ஸ்கூட்டர் 7 விநாடிகளில் மணிக்கு 0-60 கி.மீட்டர் வேகத்தை எட்டும் வகையிலும், இதிலுள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எக்கோ, ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று ரைட்டிங் மோட்கள் உள்ளன.
மேலும் கூடுதலாக ’ஹோண்டா ஆக்டிவா இ’ எலெட்ரிக் ஸ்கூட்டரில், ஸ்மார்ட் ஃபைன்ட், ஸ்மார்ட் சேஃப், ஸ்மார்ட் அன்லாக் மற்றும் ஸ்மார்ட் ஸ்டார்ட், எச்-ஸ்மார்ட் கீ போன்ற அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ’ஹோண்டா ஆக்டிவா இ’ எலெட்ரிக் ஸ்கூட்டர்கள் ஐந்து நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளன. அவை பேர்ல் செரினிட்டி ப்ளூ (Pearl Serenity Blue), பேர்ல் மிஸ்டி ஒயிட் (Pearl Misty White), மேட் ஃபோகி சில்வர் மெட்டாலிக் (Matt Foggy Silver Metallic), பேர்ல் இக்னியஸ் பிளாக் (Pearl Igneous Black) மற்றும் பேர்ல் ஷாலோ ப்ளூ (Pearl Shallow Blue) ஆகும்.
’ஹோண்டா ஆக்டிவா இ’ எலெட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 3 ஆண்டுகள் வாரண்டியும், வாங்கிய ஒரு வருடத்திற்குள் மூன்று முறை இலவசமாக சர்வீஸ் செய்யும் வசதியையும் ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே வாங்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது.