

இந்தியாவில் வரி இல்லாத சேமிப்புத் திட்டங்கள் பல உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 80c ன் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகின்றன. டாக்ஸ் இல்லாத சேமிப்புத் திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் மற்றும் ELSS (சமமான வரி சேமிப்புத் திட்டம்) மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவை அடங்கும். இந்த திட்டங்கள் வரிச் சலுகைகள் மற்றும் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன.
முக்கிய டேக்ஸ் இல்லாத சேமிப்புத் திட்டங்கள்:
1) பொது வருங்கால வைப்பு நிதி (PPF):
இது அரசு ஆதரவுடைய பாதுகாப்பான முதலீடாகும். இது சிறு சேமிப்புகளை திரட்டுவதற்கும், உத்தரவாதமான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீட்டை வழங்குவதற்கும், வரிச் சலுகைகளை பெறுவதற்கும் உதவுகிறது. ஆண்டு வட்டி விகிதம் சுமார் 7.1% ஆகும். முதலீடு செய்யப்படும் தொகை, ஈட்டப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய அனைத்தும் வரி விலக்கு பெறும்.
ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். மேலும் 5 ஆண்டுகளுக்கான நீட்டிப்பு வசதியும் உள்ளது. இதில் 3-வது நிதியாண்டில் இருந்து 6-வது நிதியாண்டு வரை கடன் பெற வசதி உள்ளது. 7வது நிதியாண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஸ்திரத்தன்மை மற்றும் நிதி வளர்ச்சியை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டம் என்பதால் முதலீட்டிற்கான பாதுகாப்பை வழங்குகிறது.
2) தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS):
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் என்பது ஒரு பாதுகாப்பான, அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டமாகும். இது மாதந்தோறும் நிலையான வருமானம் மற்றும் பாதுகாப்பான முதலீட்டை வழங்குகிறது. தற்போதைய வட்டி விகிதம் வருடத்திற்கு 7.40% ஆகும். இது நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வழியாகும். ஒரு கணக்கிற்கு அதிகபட்ச முதலீடு 4.5 லட்சம் வரை இருக்கலாம். கூட்டு கணக்குகள் மூலம் 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத் திட்டம் 5 வருட காலத்திற்கு முதலீட்டை அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தின் வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு.
3) ELSS (சமமான வரி சேமிப்புத் திட்டம்) மியூச்சுவல் ஃபண்டுகள்:
ELSS மியூச்சுவல் ஃபண்டுகள் (Equity Linked Savings Scheme) என்பவை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளாகும். இவை வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80C ன் கீழ் வரி விலக்குகளை வழங்குகின்றன. இது ஒரு குறுகிய கால (3 ஆண்டுகள்) லாக்-இன் காலத்துடன் கூடிய முதலீடாகும். ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் வரை கிடைக்கும் வருமானத்திற்கு வரி இல்லை. இந்த வரம்பை மீறினால், 10% Long Term Capital Gains (LTCG) வரி விதிக்கப்படும். இந்த ஃபண்டுகள் குறைந்தபட்சம் 80% தொகையை பங்கு மற்றும் பங்கு தொடர்பான கருவிகளில் முதலீடு செய்கின்றன.
(சில வகை அரசு நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்கள் வரி இல்லாத அல்லது வரி சேமிப்பு விருப்பங்களை வழங்குகிறது. தேசிய சேமிப்புத் திட்டம் (NSS) பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான முதலீட்டு விருப்பங்களை வழங்குகிறது.)
4) செல்வமகள் சேமிப்பு திட்டம் (Sukanya samriddhi Yojana - SSY):
பெண் குழந்தைகளுக்கான இந்தத் திட்டம் PPF போலவே வரி விலக்கு பெறுகிறது. ஒரு நிதி ஆண்டில் அதிக பட்சம் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். 2015ல் பிரதமரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது அடையும் வரை அவளது பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை மட்டுமே பணம் செலுத்த வேண்டும். கணக்கு முதிர்ச்சி அடையும் காலம் 21 ஆண்டுகளாகும். கிடைக்கும் வட்டிக்கும், முதிர்ச்சியின் போது கிடைக்கும் மொத்த தொகைக்கும் வரி விலக்கு உண்டு.