
ஜப்பானின் ஐச்சி நகரை தலைமையிடமாகக் கொண்ட டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் (Toyota Motor Corporation) ஒரு பன்னாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாகும். உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளராக உருவெடுத்துள்ள இந்த நிறுவனம் பயணிகள் கார்கள், டிரக்குகள், பேருந்துகள், மற்றும் ஸ்போர்ட்ஸ் வாகனங்கள் போன்ற பல வகையான வாகனங்களை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. நம்பகத்தன்மை மற்றும் உயர்தர கார்களுக்குப் பெயர் பெற்ற டொயோட்டா நிறுவனம், இந்திய சந்தையில் ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது, மேலும் இந்த நிறுவனத்தின் கார்கள் தொடர்ந்து நல்ல விற்பனை எண்ணிக்கையைப் பதிவு செய்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்நிறுவனம், கேம்ரி கார் மாடலில் ஸ்பிரின்ட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல் கேம்ரி சீரிசில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட வேரியண்ட்டை இணைக்கிறது. வாடிக்கையாளரை கவரும் வகையில் காரின் வெளிப்புற தோற்றத்தில், போனெட், ரூஃப் மற்றும் பூட் மூடியில் மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு டூயல் டோன் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது.
டொயோட்டா கேம்ரி ஸ்பிரிண்ட் பதிப்பு செயல்திறனைப் பொறுத்தவரையில், 2.5 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது லிட்டருக்கு 25.49 கிலோ மீட்டர்கள் மைலேஜ் வழங்குகிறது. அதிகபட்சமாக 187 எச்.பி. பவரையும், அதே நேரத்தில் 221 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது eCVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரியின் உதவியுடன், கார் 230 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும்.
எமோஷனல் ரெட் & மேட் பிளாக், பிளாட்டினம் ஒயிட் பேர்ல் & மேட் பிளாக், சிமென்ட் கிரே & மேட் பிளாக், பிரீசியஸ் மெட்டல் & மேட் பிளாக், மற்றும் டார்க் ப்ளூ மெட்டாலிக் & மேட் பிளாக் உள்ளிட்ட ஐந்து டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது.
டொயோட்டா ஸ்பிரிண்ட் காரின் உள்ளே 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜெ.பி.எல். சவுண்ட் சிஸ்டம், 3 மண்டல கிளைமேட் கண்ட்ரோல், ஹெட்-அப் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் 10-வே பவர்-அட்ஜஸ்டபிள் முன் இருக்கைகள் போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், காரின் உட்புறம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ள சுற்றுப்புற விளக்குகள் கேபின் சூழலை மேலும் பிரீமியமாக மாற்றுகிறது.
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், டொயோட்டா சேஃப்ட்டி சென்ஸ் 3.0 தொழில்நுட்பமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மோதல், விபத்து ஏற்படுவதை தவிக்கும் வகையில் எச்சரிக்கை தரும் அம்சம், ஆட்டோமேட்டிக் ஹை பீம், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிபார்ச்சர் அலர்ட் போன்ற உயர்தர வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள, ஒன்பது ஏர்பேக்குகள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவை பயணம் மேற்கொள்பவரின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
இதன் ஹைப்ரிட் பேட்டரிக்கு டொயோட்டா நிறுவனம், 8 ஆண்டுகள் அல்லது 1,60,000 கி.மீ. வரை உத்தரவாதம் அளிக்கிறது. புதிய கேம்ரி மாடலின் விலை ரூ. 48.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது ஆன்லைனிலும், இந்தியா முழுவதும் உள்ள டொயோட்டா டீலர்ஷிப்களிலும் நடைபெற்று வருகிறது.
குடும்பத்துடன் பாதுகாப்பான பயணத்தை விரும்புபவர்கள் உடனே உங்களுக்கான முன்பதிவை இப்பவே தொடங்குங்க...