
பயணக் காப்பீடு (Travel insurance) என்றால் என்ன?
பயணக் காப்பீடு என்பது பயணம் செய்யும்போது ஏற்படும் எதிர்பாராத நிதி இழப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். இது மருத்துவச் செலவுகள், விமான தாமதம், விமானங்கள் ரத்து, பாஸ்போர்ட் அல்லது பணம் திருட்டு போவது, லக்கேஜ் இழப்பு அல்லது தாமதம், பயணத்தில் ஏற்பட்ட பிற இழப்புகள் போன்றவற்றை உள்ளடக்கும். பயணக் காப்பீடு என்பது பயணத்திற்கு முன்னரே வாங்கப்பட வேண்டும். வெளிநாட்டு மண்ணில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளில் இருந்து நம்மை பாதுகாக்க சிறந்த வழி பயண காப்பீடு பாலிசிகள் தான்.
பயணக் காப்பீடு (Travel insurance) ஏன் முக்கியமானது?
a) மருத்துவ செலவுகளுக்கு பாதுகாப்பு:
வெளிநாட்டில் இருக்கும் போது ஏற்படும் நோய் அல்லது காயங்களுக்கான மருத்துவச் செலவுகளை இது ஈடு செய்யும்.
b) விமான ரத்து மற்றும் தாமதங்கள்:
எதிர்பாராத காரணங்களால் விமானம் ரத்து செய்யப்பட்டால் அல்லது தாமதமானால் ஏற்படும் செலவுகளை இந்த பயணக் காப்பீடு ஈடுகட்டும்.
c) பொருட்கள் இழப்பு மற்றும் தாமதம்:
விமானத்தில் நம் லக்கேஜ்ஜுகள் தொலைந்து விட்டாலோ அல்லது தாமதமானாலோ இழப்பீடு கிடைக்கும்.
d) பயண ரத்து:
பயணத்திற்கு முன்பே ஏதேனும் காரணங்களால் பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால், முன்பதிவு செய்யப்பட்ட செலவுகளைப் பெறலாம்.
e) சட்ட உதவி:
பயணத்தின் போது ஏற்படும் சட்டச் சிக்கல்களுக்கு உதவித் தொகையை பெற முடியும்.
f) நிதிப் பாதுகாப்பு:
எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் நிதி இழப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதனால் பயணத்தின் பொழுது ஏற்படும் நிதிச் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
g) நிம்மதியான பயணம்:
எந்தவொரு எதிர்பாராத சம்பவத்திற்கும் காப்பீட்டு பாதுகாப்பு இருப்பதால், மன அமைதியுடன் பயணத்தை முழுமையாக, இனிமையாக அனுபவிக்க முடியும்.
பயணக் காப்பீடு (Travel insurance) என்பது யாருக்குத் தேவை?
இந்தக் காப்பீடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள் செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். விடுமுறைக்காக செல்வதாக இருந்தாலும், வணிக ரீதியான பயணமாக இருந்தாலும் எதிர்பாராத மருத்துவ செலவுகள், பயண ரத்து, உடைமைகள் இழப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளில் நிதி பாதுகாப்பை தேடும் அனைவருக்கும் இது ஒரு பாதுகாப்பு வலையாக செயல்படும். குறிப்பாக சர்வதேசப் பயணம் மேற்கொள்பவர்கள், மருத்துவ அவசர நிலைகளில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பரந்த அளவிலான கவரேஜை உறுதி செய்வதால் இது அவசியமாகும்.
வணிக ரீதியான பயணங்களில் ஈடுபடும் நபர்கள், நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கவும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பயணக் காப்பீடு தேவைப்படும்.
பயண காப்பீடு எப்போது வாங்க வேண்டும்?
பயணத்தின் முதல் முன்பதிவை (விமான டிக்கெட் (அ) ஹோட்டல்) செய்த பிறகு, முடிந்தவரை விரைவாக வாங்க வேண்டும். பொதுவாக பயண தேதிக்கு 90 நாட்கள் முன் முதல் விமானம் ஏறும் நேரம் வரை வாங்கலாம். ஆனால் முதல் டெபாசிட் செய்த 15 நாட்களுக்குள் வாங்குவது சிறந்தது. எவ்வளவு சீக்கிரம் வாங்குகிறோமோ அவ்வளவு அதிக கவரேஜ் பெற முடியும். அத்துடன் விசா விண்ணப்பங்கள் போன்ற சில விதிமுறைகளுக்கு காப்பீடு கட்டாயமாக இருக்கும்.