கடன் தொல்லையில் இருந்து விடுதலை! விவசாயிகளுக்கான ஒரு புதிய பாதை!

Kisan Credit Card
Kisan Credit Card
Published on

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு என்பார்கள். காரணம் உணவின்றி நம்மால் உயிர் வாழ முடியாது. அந்த உணவை உருவாக்கும் மகத்தான பணியில் உள்ளவர்கள் விவசாயிகள். சேற்றில் இறங்கி பசி மறந்து மற்றவர்கள் பசி தீர்க்கப் பாடுபடும் விவசாயம் வளரவும் விவசாயிகள் மகிழவும் சில சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) திட்டம்.

இதன் மூலம் விவசாயிகள் பெறும் நன்மைகள் மற்றும் பல தகவல்களை இங்கு காண்போம்.

கிசான் கிரெடிட் கார்டு என்றால் என்ன? (What is a Kisan Credit Card?)

தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியின் (நபார்டு) பரிந்துரையில் உருவாக்கப்பட்டு விவசாயிகளின் குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய 1998 இல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு வங்கிகள் மூலம் வழங்கும் ஒரு கடன் திட்டம்தான் கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card). விவசாய இடுபொருட்களை வாங்கவும், உற்பத்திச் செலவுகளுக்கு நிதியுதவி பெறவும் இந்த அட்டை உதவுகிறது.

குறிப்பாக விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதைத் தவிர்ப்பது மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்பு அல்லது மோசமான விளைச்சல் காலங்களில் அவர்கள் இடுபொருட்களை வாங்கவும், உற்பத்திச் செலவுகளுக்கு பணம் பெறவும் பயன்படுகிறது. தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் இந்த திட்டத்தின் கீழ் கடன்களை வழங்குகின்றன. பயிர் காப்பீடு, விபத்து காப்பீடு இவைகளுடன் உடல்நலக் காப்பீடு உள்ளிட்ட பாதுகாப்புகளை இது வழங்குவது சிறப்பு.

கிசான் கிரெடிட் கார்டின் நன்மைகள் (Benefits of the Kisan Credit Card)

வட்டி மானியம் மூலம் அரசு விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடிகளை வழங்குவதால் தங்கள் தேவைக்கேற்ப மலிவான (Affordable) கடன்களை பெறலாம். காப்பீடுடன் பயிர் சாகுபடிக்கான குறுகிய கால கடன்கள், அறுவடைக்குப் பிந்தைய செலவுகள், சந்தைப்படுத்தல், நுகர்வுத் தேவைகள், பணி மூலதனம் மற்றும் விவசாய தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான முதலீட்டு கடன்கள் தகுதியாக இருக்கும் பட்சத்தில் இதன் மூலம் எளிதாக கிடைக்கும்.

இது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகிய இரண்டு வகைகளிலும் செயல்படுவதால் விவசாயிகள் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் அவசரத்துக்கு ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கவும் முடியும். குறிப்பாக விவசாயத்துடன் தொடர்புடைய பிற செலவுகள் மற்றும் நுகர்வுத் தேவைகள் போன்ற பல்வேறு தேவைகளுக்கு இது ஒரே சாளரக் கடன் வசதியை வழங்குவது, விவசாயிகளுக்கு பெரும் வசதி எனலாம். அதேபோல் கடன் வாங்குபவர்களுக்கு கடன் வரம்பை நீட்டிக்கவும், திருப்பிச் செலுத்தும் வசதிகளும் இத்திட்டத்தின் சிறப்பாக குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் கடன் ஆவணங்களை சமர்பித்து விரைவாக கடன் பெறும் வாய்ப்புள்ளது.

கிசான் கிரெடிட் கார்டுக்கான தகுதிகள் (Eligibility for a Kisan Credit Card)

கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) தகுதி பெற நீங்கள் நிலத்தின் உரிமையாளர்-பயிரிடுபவர், குத்தகைதாரர் அல்லது பங்குதாரர் என எந்த வகையிலும் விவசாயியாக இருக்கலாம். பால் பண்ணை அல்லது கோழி வளர்ப்பு போன்ற விவசாயம் தொடர்புடைய தொழில்களிலும் ஈடுபட்டிருக்கலாம். விவசாயிகளின் சுய உதவிக்குழுக்கள் (SHGகள்) மற்றும் கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (JLGகள்) தகுதியுடையவை.

இதையும் படியுங்கள்:
மரப்பயிர்கள் காப்பீட்டு திட்டத்தால் ஏற்படும் நன்மைகள்!
Kisan Credit Card

விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் என்றாலும், கடன் காலத்தின் முடிவில் அதிகபட்ச வயது 65 ஆண்டுகள் வரை இருக்கலாம். 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இணை கடன் வாங்குபவராக அவர்களின் சட்டப்பூர்வ வாரிசு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களாக ஆதார் அட்டை, PAN அட்டை, நில ஆவணங்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவை உள்ளன.

கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? (How to apply for a Kisan Credit Card?

கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது மிக எளிது. அருகில் உள்ள வங்கி கிளையை அணுகி விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, KYC ஆவணங்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடன் வாங்க விரும்பும் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
வேளாண் காடு வளர்ப்பும் விவசாயப் பலன்களும்!
Kisan Credit Card

வலைத்தளத்தில் கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) தொடர்பான பகுதியைக் கண்டறிந்து, Apply என்பதை கிளிக் செய்யவும். கேட்கப்படும் தகவல்களை கவனமாகப் பூர்த்தி செய்து, Submit (சமர்ப்பிக்கவும்) என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

அரசின் இந்த திட்டம் விவசாயிகளின் சுமையைக் குறைக்கிறது என்றால் மிகையல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com