
இந்தியா முழுக்க ஒரு ஸ்கேம் டிரண்டிங்கில் இருக்கிறது. இது ஒரு அறுதை பழைய ஸ்கேம் தான் என்றாலும் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. இதில் பெரும்பாலும் ஏமாறுவது படித்த, மிகவும் படித்த மக்கள் தான். இது இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. பொதுவாக ஒருவருக்கு சென்னை, கோவை, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து அழைப்பு வரலாம்.
அழைப்பின் படி உங்கள் மாநிலத்தை சேர்ந்த ஒருத்தர் தான் உங்களிடம் பேசுவார். 'உங்களுக்கு லோன் எதுவும் தேவைப்படுகிறதா?' என்று கேட்பார். அதன் பின்னர் உங்களின் விவரங்களை தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல உங்களிடம் பேசுவார். பொதுவாக உங்களுக்கு சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கலாம். உங்களுக்கு லோன் தேவை என்றால் உடனடியாக இப்போதே இன்சூரன்ஸ் ஒன்று போட்டு கொள்ளுங்கள் என்று வலியுறுத்துவார்.
நீங்கள் உங்களின் தகுதிக்கு எந்த பேங்கிற்கு சென்றாலும் உடனடியாக லோன் கிடைக்கும் என்று பெருமை பேசுவீர்கள். அப்போது அவர்கள் உங்களுக்கு குறைந்த கிளைகளைக் கொண்ட பெரிய சர்வதேச தனியார் வங்கியின் பெயரைச் சொல்லி 7% (pa) வட்டியில் 10 லட்ச ரூபாய் தனி நபர் கடன் வாங்கி தருவதாக சொல்லுவார். இவ்வளவு குறைவான வட்டியில் உங்களுக்கு லோன் வேண்டும் என்றால் இன்சூரன்ஸ் போடுவது கட்டாயம் என்று அந்த நபர் உங்களை சலவை செய்வார்.
"பேங்க் வட்டியை கணக்கில் பாருங்க சார்? ₹30,000 க்கு இன்சூரன்ஸ் போடுவதால் 1-2 லட்சம் ரூபாய்க்கு வட்டி குறையும். லோன் கிடைச்சதும் இந்த பாலிசியை கேன்சல் பன்னிக்கோங்க, உங்க இன்சூரன்ஸ் பணமும் முழுவதும் திரும்ப கிடைச்சிடும். நீங்க படிச்சவர் உங்களுக்கே எல்லா நடைமுறையும் தெரியுமே!" என்பார்.
இவ்வளவு பெரிய வங்கியில், இவ்வளவு குறைவான வட்டியில் கடன் கிடைக்கிறதா என்று நீங்களும் வாயை பிளந்து இன்சூரன்ஸ் போட ஒத்துக் கொள்வீர்.
இதே அழைப்பு வேறு ஒருவருக்கு வரும் போது அவருக்கு நல்ல சிபில் ஸ்கோர் இருந்தாலும், வங்கியில் அவரை உரிய முறையில் நடத்தி இருக்க மாட்டார்கள். அல்லது அவருக்கு நல்ல சம்பளம் இருந்தாலும், அவரது நிறுவனம் வங்கியின் தனிநபர் கடன் வழங்கக் கூடிய நிறுவனங்களில் பட்டியலில் இருக்காது. பட்டியலில் இல்லாத நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு தனிநபர் கடன் கிடைக்காது . அவர்கள் வங்கிக்கு அலைந்து, ஆன்லைனில் அப்ளை செய்து ஓய்ந்து இருப்பார்கள் . இவர்கள் இன்சூரன்ஸ் ஸ்கேம் வலையில் எளிதில் சிக்கி விடுகிறார்கள். இன்சூரன்ஸ் போடுபவர்களுக்கு பட்டியலில் இல்லாத நிறுவனங்களில் பணிபுரிந்தாலும் வங்கி தலைமை அலுவலகத்தில் இருந்து கடன் வாங்கி தருகிறோம், நீங்கள் உள்ளூர் கிளைகளுக்கு செல்ல வேண்டாம். அங்கு உங்களுக்கு கடன் தரும் தகுதி கிடையாது என்று மடைமற்றுவார்கள்.
இதே அழைப்பு அடுத்து சிபில் ஸ்கோர் அடி வாங்கியவர்களுக்கு வரும். அவர்களுக்கு சிபில் ஸ்கோர் 500-680 வரை இருக்கும். இந்த இன்சூரன்ஸ் மட்டும் போடுங்க சார். உங்களுக்கு ஒரு மாதம் கழித்து கடன் கட்டாயம் தருகிறோம் என்று வலை விரிப்பார்கள். இவர்கள் உடனேயே எதையும் கேட்காமல் வலையில் விழுந்து விடுகிறார்கள். இன்சூரன்ஸ் போட்டு 1 மாதம் ஆன பின் அந்த ஸ்கேமர் உங்கள் அழைப்பை ஏற்க மாட்டார்.
உண்மையில் இன்சூரன்ஸ் வைத்திருப்பது, கடன் பெற ஒரு தகுதியாக பார்ப்பதில்லை. அதனால் உங்கள் சிபில் ஸ்கோர் 1 புள்ளி கூட உயராது. இது முழுக்கவும் ஒரு ஏமாற்று வேலை தான். எந்த வங்கியிலும் கடன் வாங்க, முன் கூட்டியே இன்சூரன்ஸ் போட சொல்லும் நடைமுறை இல்லை. யாரும் ஏமாற வேண்டாம்.