தனிநபர் கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்தாவிட்டால் என்னவாகும்?

EMI
Personal Loan
Published on

அவசரத் தேவைக்கு வங்கிகளில் உடனடியாக கடன் பெற தனிநபர் கடன் உதவுகிறது. எந்தவித அடமானமும் இன்றி கடன் கொடுப்பதால் என்னவோ இதற்கான வட்டி விகிதம், மற்ற கடன்களைக் காட்டிலும் அதிகம். சிலருக்கு சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், அதிக வட்டியில் தனிநபர் கடன் கொடுக்கப்படுகிறது‌. இப்படியான சூழலில் தனிநபர் கடனுக்கான மாதத் தவணையை வாடிக்கையாளர் செலுத்தத் தவறினால், என்னென்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

எந்தவித கடனாக இருந்தாலும் மாதத் தவணையைச் செலுத்தத் தவறும் போது, முதலில் பாதிக்கப்படுவது நம்முடைய சிபில் ஸ்கோர் தான். ஒரே ஒரு மாதத் தவணையைத் தவற விட்டால் கூட சிபில் ஸ்கோர் 50 முதல் 70 மதிப்பெண்கள் வரை குறைந்து விடும். ஆகையால் எப்போதும் சிபில் ஸ்கோரை நல்ல நிலையில் வைத்துக் கொள்வது நல்லது. அடுத்த முறை நீங்கள் கடன் வாங்கச் செல்லும் போது சிபில் ஸ்கோரை அடிப்படையாக வைத்து தான், கடன் கொடுப்பதா வேண்டாமா என்பதை வங்கிகள் முடிவு செய்யும். அப்படியே கடன் கொடுத்தாலும், குறைவான சிபில் ஸ்கோரைக் காரணம் காட்டி வட்டியை உயர்த்தி விடுவார்கள்.

கூடுதல் வட்டி மற்றும் தாமதக் கட்டணம்:

மாதத் தவணையைச் செலுத்தத் தவறினால் 1% முதல் 2% வரையிலான தாமதக் கட்டணத்தை வங்கிகள் வசூலிக்கும். அதோடு தவறிய தொகைக்கு கூடுதல் வட்டியும் வசூலிக்கப்படும். இது உங்கள் நிதிச் சுமையை அதிகரிப்பதோடு, மாதத் தவணை காலத்தையும் நீட்டித்து விடும்.

சட்ட ரீதியான நடவடிக்கை:

மாதத் தவணையை 60 நாட்களுக்கும் மேல் செலுத்தாமல் இருந்தால், வசூல்துறை பணியாளர்கள் வங்கியின் மூலம் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். இதுதவிர Negotiable Instruments விதி 1881 இன் படி, வங்கிகள் வாடிக்கையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கும். வங்கிகள் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பே நாம் மாதத் தவணையைச் சரியாக செலுத்துவது நல்லது.

NPA வகை:

தனிநபர் கடனுக்கான மாதத் தவணையை நீங்கள் 90 நாட்களுக்கும் மேல் செலுத்தாமல் இருந்தால், அது Non-Performing Asset (NPA) என்று வகைப்படுத்தப்படும். இதனால் கிரெடிட் நிறுவனமும், வங்கியும் உங்கள் கடனை ‘முக்கிய தவறு’ என பதிவு செய்து விடும். இந்த நடவடிக்கை உங்களின் வருங்கால கடன் தேவைகளுக்கு இடையூறாக அமைந்து விடும்.

இதையும் படியுங்கள்:
தனிநபர் கடனை முன்கூட்டியே அடைப்பதால் பலன் கிடைக்குமா? அது நல்லதா?
EMI

வருங்கால கடன் தேவையில் பாதிப்பு:

கடன் நிர்வாகத்தில் சிறந்து விளங்காததை உங்களின் சிபில் ஸ்கோர் காட்டிக் கொடுத்து விடும். ஆகையால் வருங்காலத்தில் கடன் தேவைப்படும் போது விண்ணப்பித்தால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

அவசரத் தேவைக்கே இங்கு பலரும் கடன் வாங்குகின்றனர். மாத வருமானத்திற்கு ஏற்ப மாதத் தவணையைத் தேர்வு செய்த பின், அதனைச் செலுத்தாமல் இருப்பது நமக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் மாத வருமானத்தில் முதல் முக்கியத்துவத்தை மாதத் தவணைக்கு கொடுப்பது நல்லது.

உங்கள் மாதத் தவணையை செலுத்த முடியாத காலத்தில், ஏற்கனவே சேமிக்கப்பட்ட அவசர நிதி கைக்கொடுக்கும். ஆகையால் மாதந்தோறும் ஒரு சிறு தொகையை சேமிக்கவும் செய்யுங்கள். இது பல நேரங்களில் உங்களின் அத்தியாவசிய செலவுகளுக்கு உதவும்.

இதையும் படியுங்கள்:
சிறு கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள்... மீள்வது எப்படி?
EMI

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com