
இந்தியாவில் இளைஞர்கள் சிறு கடன் வாங்கும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் முறையில் மிக எளிதாக கடன் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடன் பெற்ற பிறகு தவணையை திருப்பிச் செலுத்த தாமதிப்பது, இந்திய இளைஞர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்குவதற்கு காரணமாக அமைகிறது. இதுகுறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. இந்நிலையில் கடன் சிக்கலில் இருந்து இளைஞர்கள் மீள்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
1. மாதந்தோறும் அவசரத் தேவைக்கு என ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கினாலே, சிறு கடன்கள் பெறுவதை நம்மால் தவிர்க்க முடியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் இதைச் செய்வதே இல்லை. தேவை என்றால் உடனே கடன் பெற்று விடுகின்றனர். இவர்களுக்கு ஏற்பவே ஆன்லைன் கடன் செயலிகள் மிக விரைவில் கடனை வழங்கி விடுகின்றன. இதனால் மாற்று வழியைக் கூட இளைஞர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்.
2. கடன் பெற்றால், அதனைச் சரியாக திருப்பிச் செலுத்துவது அவசியம். கடன் வாங்குவதில் இருக்கும் அவசரம், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அதிலும் 50,000 ரூபாய்க்கும் குறைவான தனிநபர் கடன்களில் தான் இந்தப் போக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளைஞர்கள் மத்தியில் நான்கு கடன்களில் ஒரு சிறு கடன் திருப்பி செலுத்தப்படுவதில்லை என இந்திய டிஜிட்டல் கடன் சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
3. மாதத் தவணையை செலுத்துவதில் மெத்தனமாக செயல்படும் இளைஞர்கள், கடன் நிர்வாகத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 10,000 ரூபாய்க்கும் குறைவான தனிநபர் கடன்களைக் கூட இளைஞர்கள் ஆன்லைனில் பெறுகின்றனர். சேமிப்புப் பழக்கம் இல்லாததால் தான் இம்மாதிரியான சிறு கடன்கள் அதிகரித்துள்ளன. சிறு கடன்களை திருப்பி செலுத்தாமல் இருப்பது 2019 இல் 14% ஆக இருந்தது. இந்த விகிதம் 2023 இல் 26% ஆக உயர்ந்தது.
4. நிதி நெருக்கடி மற்றும் கடன் மேலாண்மை இல்லாது இருத்தல் போன்ற காரணங்களால் தான் இளைஞர்கள் தவணையைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கலை சந்திக்கின்றனர். நிலையான வருமானம் இல்லாததும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடன் நிர்வாகத்தில் இளைஞர்கள் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டியது அவசியம். தேவைக்கேற்ப கடன் பெறுவதும், அதனைத் திருப்பிச் செலுத்துவதும் கடன் நிர்வாகத்தின் முக்கிய அம்சம்.
5. சிறு கடனாக இருந்தாலும் எங்கு வட்டி குறைவு என்பதை ஆராய்ந்து கடன் பெற வேண்டும். ஆன்லைன் வழியாகவும், வங்கி சாரா நிதி நிறுவனங்களிலும் கடன் பெறுவதை இளைஞர்கள் முதலில் குறைத்துக் கொள்ள வேண்டும். அவசரத் தேவைக்கு கடன் பெறுவதைக் காட்டிலும் முன்பே திட்டமிட்டு மாதந்தோறும் ஒரு தொகையை சேமிப்பது நல்லது.
இன்றைய டிஜிட்டல் உலகில் நிதிக்கல்வியில் இளைஞர்கள் விழிப்புணர்வு பெற வேண்டியதும் அவசியமாகிறது. சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த விழிப்புணர்வுகள் இளைஞர்களை கடன் வாங்குவதில் இருந்து தடுக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான், வருங்காலத்தில் இதுபோன்ற சிறு கடன்களைக் குறைப்பதற்கான ஒரே வழி.