வணிகம் என்பது உண்மையாக செய்வது, ஒரு சிலர் குறுக்கு வழியில் வணிகம் செய்து முன்னேறி விடுவார்கள். அவர்களைப் பார்த்து நாமும் அதையே செய்தால் என்ன? என்று யோசிக்கிறீர்களா?
வேண்டாமே, இப்போது அவர்களின் நிலை நன்றாக இருக்கும். எதிர்காலம் அவர்களுக்கு கேள்விக்குறிதான், சிறைச்சாலை கூட செல்லக்கூடும்.
ஒரு சில இளைஞர்கள் இப்பொழுது டப்பா வணிகத்தில் ஈடுபடுகிறார்கள். அதென்ன டப்பா வணிகம்? நீங்கள் நினைப்பது போல பிளாஸ்டிக் டப்பா இல்லை. இது ஒரு மறைமுக சட்டவிரோத பங்கு சந்தை வணிகமாகும்.
இதை பாக்ஸ் வணிகம் என்றும் பக்கெட் வணிகம் என்றும் அழைக்கிறார்கள். இது பங்கு சந்தை வணிகம் தான். ஆனால் பங்கு சந்தைக்கு வெளியே அதற்கு எதிரான மறைமுகமாக வணிகம் செய்வது ஆகும்.
இவர்கள் பங்கு சந்தை எதையும் விலைக் கொடுத்து வாங்குவதில்லை. விலைகளை யூகித்து பங்கு சந்தைக்கு வெளியே சில சட்ட விரோத தரகர்களின் ஆலோசனைகளின் பேரில் வணிகம் செய்வதாகும். ஒரு வகையில் சூதாட்டம் தான். சூதாட்டம் என்றவுடன் தர்மன் நினைவுக்கு வருவார்.
தருமன் மிக நல்லவன் தான். ஆனால் அவனின் சூதாட்டத்தின் நாட்டத்தை அறிந்த சகுனி அவனை சூதாட்டத்திற்கு அழைக்கிறார்.
எதிரில் விளையாடுவது அவனின் பங்காளி துரியோதணன் இல்லை. துரியோதணன் சாமார்த்தியமாக அவன் மாமன் சகுனியை நீங்கள் விளையாடுங்கள் மாமா நான் வேடிக்கைப் பார்க்கிறேன் என ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தான்.
ஆனால் தர்மனோ, பக்கத்துணையாக இருக்கும் கிருஷ்ணனை துணைக்கு அழைத்து ஆட சொல்லி இருக்கலாம். ஆனால் அவனுக்கு தாம் சூதாட்டத்தில் வெற்றி பெற்று விடுவோம் என்ற அதீத நம்பிக்கை தான், எல்லாவற்றையும் இழந்து கடைசியில் திரௌபதியை விளையாட்டில் பந்தயம் வைத்து தோற்று விட்டான். அதுபோலத் தான் இந்த டப்பா விளையாட்டும்.
இந்த சட்ட விரோத பங்கு சந்தை தரகர்கள் 'டப்பா ஆபரேட்டர்கள்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
வணிகர்களின் கணக்கு விபரங்களை தனிப்பட்ட முறையில் பராமரிப்பார்கள். இந்த பரிவர்த்தனை முழுவதும் ரொக்கமாகவே இருக்கும். இதனால் வரி கட்டுவதிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
கருப்பு பணத்தை மாற்றுபவர்கள் இந்த தவறான வழியில் செல்கிறார்கள். இப்படி வணிகம் செய்து சிக்கி கொண்டால் அபராத தொகையோடு பத்து ஆண்டு சிறைவாசம் தான்.
எப்படி இந்த டப்பா வணிகம் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்… நீங்களும் அப்படி செய்வதற்கல்ல ஒரு எச்சரிக்கைகாகத் தான். உதாரணமாக ஒரு நிறுவனத்திலிருந்து ஐம்பது பங்குகள் ரூபாய் 200 மதிப்புள்ள அவற்றை வாங்க நினைக்கிறீர்கள். அதற்கு டப்பா ஆபரேட்டர் ரகசியமாக விற்பவரிடம் பேசி வாங்கி தருவார்.
இந்த பங்கு விலை உயர்ந்தால் வாங்குபவருக்கு இலாபம். ஆனால் பங்கு விலை வீழ்ச்சி அடைந்தால் நஷ்டம் தான். இன்னொரு நிறுவனத்தின் பங்கு ரூபாய் 300 முதல் ரூபாய் 350 என யூகித்து இந்த வணிகத்தில் ஈடுபட்டால் லாபம் தான். ஆனால் யூகித்தபடி விலை உயராவிட்டால் பணம் நஷ்டமே. இந்த வணிகம் முழுவதும் அரசாங்கத்திற்கு தெரியாமல் மறைவாக நடக்கின்றபடியால் அதிக அளவு ஆபத்து இருக்கிறது. செபியின் கட்டுக்குள் இது இல்லை என்பதால், சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதில் பேராசையோடு ஈடுபடுகிறவர்கள் நஷ்டமடைகிறார்கள். இந்த பங்கு சந்தை அங்கிகரிக்கப்படாத தரகர்கள் தப்பி விடுவார்கள்.
இதில் ஈடுபடுபவர்களை அரசாங்க துறை கண்டுபிடித்து விட்டால் குற்றவியல் சட்டம் பிரிவு 23(1) The Securities Contracts Regulation Act (SCRA) was enacted in 1956 -ன்படி பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதம் ரூபாய் 25 கோடி வரைக்கும் விதிக்கப்படலாம்.
எனவே சட்ட விரோத டப்பா வணிகத்தில் ஈடுபட்டு சிக்கி கொள்ளாமல் நேர்மையான வழியில் பங்கு சந்தையில் ஈடுபட்டு முறையான தகவல்கள் தந்து உரிய இலாபத்தை அடையுங்கள். இன்பமாக இருங்களேன்.
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா “ என்று உங்களைப் பார்த்து மற்றவர்கள் பாடும் படி வைத்து கொள்ளாதீர்கள்.