
ஆமைகள் நிலத்திலும் நீரிலும் வாழும் தகவமைப்பைப் பெற்றுள்ள குளிர் ரத்த ஊர்வன இனமாகும். டைனோசர் காலத்தில் இருந்தே ஆமைகளின் இனமானது தோன்றியிருக்கக்கூடும் என்ற கருத்து பரவலாகப் பார்க்கப்படுகிறது. வாழும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆமைகளை, கடல் ஆமைகள் மற்றும் நிலத்தில் வாழும் ஆமைகள் என்று பிரிக்கப்படுகிறது. மேற்புறத்தில் ஆமைகள் கடினமான ஓடுகளைக் கொண்டுள்ளன. ஆமைகள் சூழலுக்கு ஏற்ப உடல் வெப்பநிலையை மாற்றிக் கொள்கின்றன.
பொதுவாக, இதன் வாழ்நாளானது 70 முதல் 150 ஆண்டுகள் வரை நீடிக்கிறது. ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை. இயற்கை சமநிலையை சமநிலையில் வைப்பதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட இந்த ஆமை இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது அழிந்துகொண்டே வருகின்றன. நில வாழ் ஆமைகளை விட, கடல் வாழ் ஆமைகளின் எண்ணிக்கைதான் வெகுவாகக் குறைந்துகொண்டே வருகின்றன. இதற்குக் காரணம், மனிதன்தான்! கடலில் கொட்டப்படும் நெகிழியால் ஆமைகள் மட்டுமல்லாமல், பல கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்படுகின்றன. நெகிழிகளை உட்கொள்வதன் மூலம் இவற்றின் செரிமான மண்டலம் பாதிப்படைந்து இறுதியில் உயிரிழக்கும் அளவிற்கு ஆமைகள் தள்ளப்படுகின்றன.
அதேபோல், கடலில் கலக்கப்படும் ரசாயன கழிவுகள் போன்றவற்றால் ஆமைகள் தங்களின் வழித்தடங்களை அறிவதற்கும், ரசாயனங்களால் ஆமைகளுக்கு உடல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. ஆயிரம் மைல்கள் தாண்டி தான் தேர்ந்தெடுத்த, தனக்கு விருப்பமான கடற்கரையை நோக்கி மட்டுமே ஆமைகள் முட்டையிட வருகின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் ஒரு சில ஆமைக்குஞ்சுகள் வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றன. அதையும் கடந்து கடலுக்குள் வரும் ஆமை குஞ்சுகளே உயிர் பிழைக்கின்றன. ஆமையோட்டில் சீப்புகள், நகைகள் மற்றும் பல்வேறு அலங்காரப் பொருட்கள் செய்யப்படுகின்றன. இது ‘Tortoiseshell’ என அழைக்கப்படுகிறது. இது போன்று ஆமை ஓட்டிலிருந்து பல்வேறு கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன.
மற்றொரு புறம் ‘டெர்ராரியா’ போன்ற வீடியோ கேம்களில், ஆமை ஓடுகள் ஆமைக் கவசத்தை உருவாக்க உதவுகின்றன. இதனால் ஆமைகள் மனிதர்களாலும் ஓட்டிற்காக வேட்டையாடப்படுகின்றன. சாலையில் வாகன ஓட்டிகளின் கவனக் குறைவால் பல ஆமைகள் அடிபட்டு உயிரிழக்கின்றன. இப்படிப் பல சிக்கலான, சவால்களை ஆமைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் ஆமை இனம் அழிவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ முக்கியக் காரணமாக மனிதன்தான் விளங்குகிறான். இதனால்தான் ஆமைகளின் இனமானது அழியும் பட்டியலில் தற்போது சேர்ந்துள்ளது.
அழிவது ஒரு பக்கம் இருந்தாலும், ஆமைகளைப் பாதுகாப்பதிலும், அந்த இனத்தைப் பெருக்குவதிலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் இன்று வரை ஆமைகளின் பாதுகாப்புக்காக இருந்து வருகிறார்கள். ஆமைகளுக்கென தனி பாதுகாப்பு இயக்கம் உலகளவில் இன்று வரை செயல்பட்டு வருகின்றன. அதேபோல், இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திற்கு கீழ், கடல் ஆமைகளின் பாதுகாப்பிற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல், தமிழ்நாட்டிலும் கடற்கரையை ஒட்டியுள்ள அனைத்து கிராமங்களிலும் ஆமைகளுக்கென பாதுகாப்பு அமைப்பும் அவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. ஆமை இனங்களைப் பாதுகாப்பது நமது தலையாய கடமை! சுற்றுச்சூழலில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் இயற்கை சமநிலையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்!