'டி மினிமிஸ்' என்ற லத்தீன் வார்த்தைக்கு அற்பமானது அல்லது முக்கியத்துவம் இல்லாதது என்று பொருள். 1938ஆம் வருடம் அமெரிக்கா, 800 அமெரிக்க டாலருக்கு குறைவான மதிப்புள்ள பொருட்களை சுங்க வரி எதுவுமில்லாமல் மற்ற நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யலாம் என்று அறிவித்தது. இதற்கு 'டி மினிமிஸ் சட்டம்' என்று பெயர்.
தற்போது, ஜூலை 29ஆம் தேதி முதல் இந்த சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் சீனாவிலிருந்து வருகின்ற பொருட்களுக்கு அமெரிக்கா இந்த சலுகையை ரத்து செய்தது. தற்போது இந்த சலுகை உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்தச் சட்டத்தின் மூலமாக அமெரிக்காவிற்கு மற்ற நாடுகளிலிருந்து, 2014 ஆம் வருடம், சுங்கவரி இல்லாமல் 140 மில்லியன் (14 கோடி) பார்சல்கள் வந்தன. அது இப்போது அசுரத்தனமாக வளர்ந்து 2024ஆம் வருடம் 1.36 பில்லியனாக (136 கோடி) உயர்ந்துள்ளது. இவ்வாறு வருகின்ற பார்சல்கள் சுங்க சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. இதனால் போதைப் பொருட்கள், சட்டத்திற்குப் புறம்பான பொருட்கள் அமெரிக்காவில் நுழைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகின்றன.
அடுத்த ஆறு மாதத்திற்கு, அமெரிக்காவிற்கு வரும், அயல் நாட்டுப் பார்சல்களுக்கு, எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து சுங்க வரி 80 டாலர் முதல் 200 டாலர் வரை வசூலிக்கப்படும். ஆறு மாதத்திற்குப் பிறகு, பார்சலின் விலை மதிப்பைப் பொறுத்து சுங்க வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பின் மூலம் அரசுக்கு 10 பில்லியன் (1000 கோடி) டாலர், வருட வருமானமாகக் கிடைக்கும்.
அயல்நாட்டு அஞ்சல் சேவைகள் தவிர, இந்த வரி விதிப்பு FedEx, DHL, UPS என்று பார்சல் சேவைகள் மூலம் வரும் எல்லாப் பொருட்களுக்கும் விதிக்கப்படும். இந்த சேவைகள் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் அயல்நாட்டு அஞ்சல் நிறுவனங்கள், இந்த சுங்கவரியை பொருட்களை அனுப்பவர்களிடமிருந்து பெற்று, அரசுக்கு செலுத்த வேண்டும்.
தற்போது, நாடுகளுக்கான அமெரிக்க அரசு வகுத்துள்ள வரி ஏற்பாட்டின்படி, பார்சலுக்கான வரி வேறுபடும்.
பிரிட்டன், ஐரோப்ப குழுமம் – சுங்கவரி 16 சதவிகிதத்திற்கு கீழே – பார்சல் வரி 80 அமெரிக்கன் டாலர்
இந்தோனேஷியா, வியட்நாம் போன்று 16 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் சுங்கவரி செலுத்தும் நாடுகளுக்கு – பார்சல் வரி 160 அமெரிக்கன் டாலர்.
இந்தியா, ப்ரேசில், சீனா போல 25 சதவிகிதம் சுங்கவரி செலுத்தும் நாடுகளுக்கு பார்சல் வரி 200 அமெரிக்கன் டாலர்.
முன்னரே சொன்னது போல ஆறு மாதத்திற்குப் பிறகு, பொருட்களின் மதிப்பையும், நாட்டையும் பொறுத்து பார்சல் வரி வசூலிக்கப்படும்.
தற்போது இந்தியா, மெக்சிகோ, ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், ஸ்விட்ஸர்லாந்த் ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவைகளை நிறுத்தி உள்ளன.
அமெரிக்காவில் பொருட்களின் விலையை அதிகரிப்பதுடன், ஆன்லைன் வர்த்தகத்தை இது பாதிக்கும்.
தற்போது, அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்கள் பலர் பிரபலமான இந்திய துணிக் கடைகளில் ஆன்லைன் மூலம் விரும்பும் துணிகளை தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர். இதற்கு இந்தியாவில் உதவுவதற்கு பல சிறிய நிறுவனங்கள் உள்ளன. வாங்கின பொருட்கள் பார்சல் சேவை மூலம் அமெரிக்கா அடைகிறது. இதைப் போலவே, இந்தியாவிலிருந்து விசேட நாட்களுக்குப் பட்சணங்களை தருவிப்பவர்கள் உண்டு. அதற்கு அவர்கள் பொருட்களின் விலை மற்றும் பார்சல் சேவை கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தினால் போதும். ஆனால், தற்போது இவற்றுடன் பார்சலுக்கு 200 அமெரிக்க டாலர் (17,632 ரூபாய்) கூடுதலாக செலுத்த வேண்டும்.