
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் அடிக்கடி பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. இதனால் குறைந்த நேரத்திலேயே பல இடங்களில் 100மி.மீ மழை பதிவானது.
இந்நிலையில் சென்னையைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மேக வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உட்பட அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் எது நடந்தாலும் தயார் நிலையில் இருந்தால், பேராபத்தைத் தடுக்க முடியும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சென்னைக்கு மிக அருகில் புதுச்சேரி இருப்பதால், இங்கும் மேக வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதோடு மேக வெடிப்பை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருப்பது தான் நல்லது. வட மாநிலங்கள் மேக வெடிப்பால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. பொதுமக்களை காக்கும் பணியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆகையால் மீட்புக் குழுவினர் சார்ந்த அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
எந்நேரத்திலும் மக்களுக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். எதிராபாரா நிகழ்கள் ஏதேனும் நிகழ்ந்தால் காவல் துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகள் அனைத்தும் உடனடி தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுவதோடு, மக்களுக்கு உதவ விரைந்து வர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
கனமழை பெய்து தண்ணீர் தேங்கினால், உடனே அப்புறப்படுத்த மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்க பொதுப்பணித்துறை க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவசரகால சூழல் நிலவி அதிக வாய்ப்புள்ளதால், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தயாராக இருக்க வேண்டும்.
சுகாதார வசதிகளை உடனுக்குடன் வழங்க சுகாதாரத் துறையும் தயாராக இருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல் மற்றும் விளம்பரத் துறை முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
அவசர காலங்களில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், போக்குவரத்தை சீர்படுத்தவும் காவல் துறை தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.