
நிதித் திட்டமிடலைப் பொறுத்தவரை அவசர கால நிதி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவர் நிதி நிர்வாகத்தை திறம்பட கையாள்கிறார் என்பதை அவசர கால நிதியை வைத்தே தெரிந்து கொள்ளலாம். எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத சூழலில், அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய அவசரகால நிதி தான் உதவுகிறது. அவ்வகையில் இந்த அவசர கால நிதியை விரைவாக எப்படி சேமிப்பது என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
இன்றைய பொருளாதார சூழலில், மாதச் சம்பளம் வாங்கும் பலபேர் சேமிப்பதே இல்லை என்ற தரவுகளும் ஆராய்ச்சி மூலம் வெளிவந்துள்ளன. வாங்கும் சம்பளத்தை முழுமையாக செலவு செய்வதால் தான், சேமிக்கும் பழக்கமே இவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது. இருப்பினும் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தினால், சேமிக்கும் பழக்கம் தானாகவே வந்து விடும். மாதந்தோறும் பட்ஜெட் போட்டு குடும்பத் தேவைகளை நிறுவேற்றும் போது, நிச்சயமாக ஒரு சிறு தொகையாவது மிச்சம் இருக்கும். இந்தத் தொகையை அவசரகால நிதிக்கு சேமித்து வைக்கலாம்.
எதிர்பாராத செலவுகளை சமாளிக்க இன்று பலரும் கடன் வாங்குகின்றனர். ஆனால் முன்னரே திட்டமிட்டு சேமித்து வந்தால், கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியும். இருப்பினும் இந்தியாவில் கிட்டத்தட்ட 75% பேர் அவசரகால நிதியை சேமிப்பதில்லை என பொருளாதார ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 6 மாதங்களுக்கு அடிப்படைத் தேவைகளைச் சமாளிக்க உதவும் நிதியை அவசர கால நிதியாக கருதலாம். அதாவது திடீர் வேலையிழப்பு ஏற்பட்டால், அடுத்த ஆறு மாதங்களுக்கு குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும் நிதியை நீங்கள் எப்போதும் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
மாதாந்திர செலவுகள்:
மாதந்தோறும் எதற்கெல்லாம் எவ்வளவு தொகை செலவாகிறது என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தாலே, சேமிப்பிற்கான இலக்கை நம்மால் நிர்ணயிக்க முடியும். இதில் எந்தச் செலவைக் குறைக்க முடியும் மற்றும் தவிர்க்க முடியும் என்பதை அறிந்து, அந்தத் தொகையை அவசர கால நிதிக்காக சேமிக்கலாம்.
தனி சேமிப்புக் கணக்கு:
அவசர கால நிதியை சேமிக்கத் தொடங்கியதும், அதற்கென ஒரு சேமிப்புக் கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்போது தான் அடிக்கடி இந்தத் தொகையை எடுத்து செலவு செய்யும் எண்ணம் உங்களுக்கு வராது. இது ஒரு அத்தியாவசிய மற்றும் அவசியமான தேவை என்பதை உணர முடியும்.
வருமானத்தை அதிகரித்தல்:
ஒரே வேலையை மட்டும் நம்பியிருக்காமல், பகுதி நேர வேலை அல்லது தொழில் மூலம் உங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள். இதன்மூலம் அதிக தொகையை சேமிக்க முடியும்.
கட்டுப்பாடு:
சம்பளம் வாங்கிய உடனேயே சிலர் அந்தத் தொகையை செலவழித்து விடுவார்கள். ஆனால், முன்னரே செலவுகளைத் திட்டமிட்டு கட்ப்பாட்டுடன் செலவு செய்தால், வீண் செலவுகளைத் தவிர்த்து விடலாம். இதன்மூலம் மிச்சமாகும் தொகையையும் அவசர கால நிதிக்காக சேமிக்கலாம்.
சேமிப்பை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் வழிகளை தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியம். அப்போது தான் உங்களின் நிதி நிர்வாகம் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். செலவுகளைத் திட்டமிடுவதும், அதற்கேற்றவாறு சேமிப்பதும் உங்களுக்கு ஒரு நற்பழக்கமாக மாறிய பிறகு, நிதி நிர்வாகம் மிகவும் எளிதாகி விடும்.