நமது எந்த ஒரு முதலீடும் காப்பீடும் இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடு நிறுவனங்களின் கீழ் வர வேண்டும். வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் போன்றவை பாரத ரிசர்வ் வங்கியின் (RBI - Reserve Bank of India) கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. பங்குச்சந்தை, பரஸ்பர நிதிகள், இடைத்தரகு நிறுவனங்கள் போன்றவை செபியின் (SEBI - Securities and Exchange Board of India) கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு நிறுவனங்கள் போன்றவை ஐஆர்டிஏஐ (IRDAI - Insurance Regulatory and Development Authority of India) கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.
இந்தக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் நமது முதலீடுகள் மற்றும் காப்பீடுகளைக் காக்கின்றன. நிதி மற்றும் காப்பீடு மோசடிகளிலிருந்து முதலீட்டாளர்கள், காப்பீட்டாளர்கள் காக்கப்படுகின்றனர்.
இதனைக் குறித்த ஓர் ஈசாப் கதையைப் பார்ப்போம்.
ஓநாய்கள் ஆடுகளை நோக்கி ஒரு வேண்டுகோள் விடுத்தன.
'ஏன் நாம் இருவரும் நமக்குள் தீராத சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறோம் ? இதற்கு காரணம் நமக்கு நடுவில் இருக்கும் நாய்கள் தான். நாங்கள் உங்களை நோக்கி வந்தாலே, அவை குரைக்கின்றன. நாங்கள் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத போதே எங்களைத் தாக்க வருகின்றன. உங்களைப் பின்தொடரும் வேலையிலிருந்து அந்த நாய்களை நீக்கி விடுங்கள். வெகு சீக்கிரமாக நம்மிடையே அமைதியும் சமாதான உடன்படிக்கைகளும் உருவாகும்.' என்றன ஓநாய்கள்.
ஓநாய்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த ஆடுகள், நாய்களை அதன் பணிகளில் இருந்து விடுவித்தன. காப்பதற்கு நாய்கள் இல்லாத ஆடுகளை ஓநாய்கள் மகிழ்ச்சிகரமாக வேட்டையாடின.
இந்தக் கதையில் நமது முதலீடுகள் என்பவை ஆடுகளைப் போன்றவை. அரசாங்கத்தின் கட்டுப்பாடு நிறுவனங்களான பாரத ரிசர்வ் வங்கி, செபி, ஐஆர்டிஏஐ போன்றவை ஆடுகளைக் காக்கும் நாய்கள் போன்றவை. நமது முதலீடுகள் இத்தகைய அரசாங்க கட்டுப்பாடு நிறுவனங்களின் கீழ் இருக்கும் பொழுது முதலீடுகளின் பாதுகாப்பு அதிகரிக்கும். ஓநாய்களிடம் நமது முதலீடுகள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கும்.
இத்தகைய கட்டுப்பாடு நிறுவனங்கள் முதலீடுகளுக்கு பல்வேறு விதிமுறைகளை வைத்துள்ளன.
ஆடுகள் குறிப்பிட்ட நேரத்தில் மேய்ச்சலுக்கு புறப்படுவது, குறிப்பிட்ட இடத்தில் மேய்வது, குறிப்பிட்ட நேரத்தில் கொட்டகைக்கு திரும்புவது என நாய்கள் ஆடுகளைக் காக்கின்றன. ஆடுகளைத் தொடர்ந்து கண்காணிக்கின்றன. அதனைப் போலவே, செபியில் பங்குச்சந்தையில் ஈடுபட நிறுவனங்களுக்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. பரஸ்பர நிதி நிறுவனங்களைத் தொடங்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அத்தகைய கட்டுப்பாடுகளை நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா என செபி கண்காணிக்கிறது. இத்தகைய விதிமுறைகள் மூலமாக முதலீடுகள் தவறான நபர்களின் கைகளில் சிக்காமல் காக்கப்படுகின்றன.
செபியைப் போலவே, வங்கிகள் குறைந்தபட்சம் தொகையை நீர்ப்புத்தன்மைக்காக வைத்திருப்பது (Cash Reserve Ratio - CRR), நாட்டின் பெரிய வங்கிகள் (Systemically Important Banks) வீழாமல் இருக்க அதிக கட்டுப்பாடுகள் விதிப்பது என வங்கிகளின் பாதுகாப்பிற்காக பாரத ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இத்தகைய கட்டுப்பாடுகளின் மூலம், முதலீட்டாளர்களின் முதலீடுகள் ஏமாற்றப்படாமல் காக்கப்படுகின்றன. உதாரணமாக, கார்வி நிறுவனம் முதலீட்டாளர்களின் பங்குகளைத் தவறான முறையில் கடன் வாங்க அடமானமாகப் பயன்படுத்திய போது, கார்வி நிறுவனத்தினை பங்குச் சந்தையிலிருந்து 2023 இல் செபி விலக்கி, முதலீட்டாளர்களின் பங்குகளைக் காத்தது. முதலீட்டாளர்களின் குறை காணல்களை இத்தகைய கட்டுப்பாடு நிறுவனங்கள் கையாண்டு முதலீட்டாளர்களை காக்கின்றன.
எனவே நாம் எந்த ஒரு முதலீடு செய்யும் பொழுதும், அது இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடு நிறுவனங்களுக்கு கீழ் வருகிறதா என்று பார்த்துவிட்டு செய்ய வேண்டும். உதாரணமாக, மெய் நிகர் தங்கம் (digital gold) போன்ற திட்டங்கள் பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. அதன் காரணமாக அத்தகைய திட்டங்களில் தெள்ளத் தெளிவின்மை கிடையாது. நாம் முதலீடு செய்யும் தொகைக்கு நாமே பொறுப்பாளி. முதலீட்டிற்கு ஏதேனும் பங்கம் விளைந்தால் பாரத ரிசர்வ் வங்கியின் முதலீட்டாளர் குறை தீர்க்கும் தீர்ப்பாயத்தை நாம் தொடர்பு கொள்ள இயலாது.
இந்திய அரசின் கட்டுப்பாடு நிறுவனங்களின் கீழ் வரும் முதலீடுகளை மட்டும் செய்வோம். நாய்கள் எவ்வாறு ஆடுகளைக் காக்கின்றனவோ அதேபோலவே நமது முதலீடுகளும் கட்டுப்பாடு நிறுவனங்களால் காக்கப்படும்.