வரி என்பது பொது அரசு சேவைகள், பொருட்கள் மற்றும் செயல்பாடுகளின் செலவுகளை ஈடுகட்ட தனி நபர்கள் அல்லது வணிகங்களிடமிருந்து உள்ளூர், மாநில மற்றும் தேசிய அரசாங்கங்களால் சேகரிக்கப்படும் கட்டணமாகும். வரிவிதிப்பின் நோக்கம் அரசின் செலவினங்களுக்கு நிதி அளிப்பதாகும்.
வீட்டு வரி அல்லது சொத்து வரி என்றால் என்ன?
சொத்து வரி என்பது நில உரிமையாளர் அல்லது சொத்து உரிமையாளர் தன்னுடைய பகுதியின் உள்ளூர் அரசாங்கத்திற்கோ அல்லது நகராட்சிக்கோ செலுத்த வேண்டிய வருடாந்திர தொகையை குறிக்கும். நகராட்சி ஆண்டுதோறும் அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை சொத்து வரியை மதிப்பிட்டு விதிக்கும். இது சொத்தின் அளவு, கட்டிடம், பரப்பளவு போன்ற அளவுகளை அடிப்படையாகக் கொண்டு விதிக்கப்படுகிறது.
நாம் ஏன் வரி செலுத்த வேண்டும்?
வரி என்பது அரசாங்கத்திற்கு, அவர்கள் நமக்கு வழங்கும் பொது சேவைகளுக்காக செலுத்தும் பணமாகும். வரிகள் நம் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் அவை அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக அமைகின்றன.
சாலைகள், பள்ளி கட்டிடங்கள், மின்சாரம், நீர் வழங்குதல் மற்றும் மருத்துவமனைகள் கட்டுதல் உள்ளிட்ட பொது செலவினங்களுக்கு நிதி அளிப்பதற்கும், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது நூலகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் போன்ற அடிப்படைத் தேவைகளை நமக்கு வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு நிதி தேவை. அதற்காக அரசாங்கம் வசூலிப்பதே வரியாகும். இப்படி வசூலிக்கப்படும் வரித் தொகையை பயன்படுத்தி மக்களின் நல் வாழ்விற்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துத் தருகிறது.
வரி செலுத்துவதன் நன்மைகள்:
வரி செலுத்துவதில் பல நன்மைகள் உள்ளன. அவை சாலைகள் போன்ற உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் உதவுகின்றன. மேலும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக செயல்முறையின் செயல்பாட்டிற்குத் தேவையான நிறுவனங்களை நிறுவவோ அல்லது பராமரிக்கவோ உதவுகின்றன.
இந்தியாவில் செலுத்தப்படும் அல்லது வசூலிக்கப்படும் சில பொதுவான வரிகள்:
வருமான வரி, ஜிஎஸ்டி, சாலை வரி, சொத்து வரி, தொழில்முறை வரி, கார்ப்பரேட் வரி, சுங்க வரி, கலால் வரி, பொழுதுபோக்கு வரி எனப் பல வகையான வரிகள் வசூலிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வரியும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வசூலிக்கப்படுகிறது.
வசூலிக்கப்படும் வரிகள் சமூக மேம்பாடு மற்றும் நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. வரிகள் பொது உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளுக்கு நிதி அளிக்கின்றன.
பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கிராமப்புற மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சமூக மேம்பாடு மற்றும் நல திட்டங்களுக்காக கணிசமான தொகையை ஒதுக்குகின்றது.
வரிகள் நாட்டின் எல்லைகளை பாதுகாக்கின்றன. நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க மற்றும் சர்வதேச அமைதி காக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு போதுமான நிதி தேவையை வழங்குகின்றன.
கல்விக்கு வரிகள் நிதி அளிக்கின்றன. தரமான கல்வியை வழங்க அரசாங்கத்திற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. இதில் பள்ளி உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் சம்பளம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற கல்விக்கான செலவுகள் அடங்கும்.
ரயில் மற்றும் சாலை போக்குவரத்து உட்பட அரசாங்கத்தின் பொதுப் போக்குவரத்து அமைப்புக்கு வரிகள் நிதியளிக்கின்றன. இதில் விமானங்கள், கப்பல்கள், பேருந்துகள், ரயில்கள், டிராக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டுமானத்திற்காகவும், பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும் பயன்படுத்துகின்றன.
வரிவிதிப்பு என்பது நாட்டை நடத்துவதற்கு அரசாங்கம் வருவாயை ஈட்டும் ஒரு வழியாகும். நாட்டினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வரிகள் அவசியம். ஒவ்வொரு இந்தியரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரி செலுத்துகிறார்கள். நம்முடைய வருமானம் வருமான வரியை தூண்டும் அளவுக்கு அதிகமாக இல்லாவிட்டாலும், ஜிஎஸ்டிக்கு உட்பட்டவராகவாவது இருப்போம்.
வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு கடுமையான விதிமுறைகள் உள்ளன. வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகையைப் பொறுத்து பண அபராதம் முதல் சிறை தண்டனை வரை தண்டனைகள் விதிக்கப்படலாம்.