
கேழ்வரகு மாவில் ஒரு சத்தான பானம் தயார் செய்ய மிகவும் எளிது. இது உடலை குளிர்விக்கவும், பசியை அடக்கவும் உதவுகிறது.
1. கேழ்வரகு கூழ்
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 3 ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
பச்சை மிளகாய் – 1 (நறுக்கவும்)
இஞ்சி – சிறிதளவு (துருவி)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
புளி – சிறிது ( சாறு எடுத்துக் கொள்ளவும்)
உப்பு – தேவையான அளவு
தயிர் – ½ கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைக்கவும். கட்டிகள் இன்றி நன்கு கரைந்துக் கொள்ளவும். கடாயில் 2 கப் தண்ணீர் கொதிக்க விடவும். கொதிக்கும் போது மாவை மெதுவாக ஊற்றி கலக்கவும். நன்கு திரளாகும் வரை நன்றாக கிளறிக்கொண்டு வேகவைக்கவும் (10 நிமிடம் வரை). வெந்த பிறகு அறை வெப்ப நிலைக்கு வரும் வரை குளிர வைக்கவும்.
அதில் புளி சாறு, மஞ்சள் தூள், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும். பிறகு தயிர் அல்லது மோர் ஊற்றி நன்கு கலக்கவும். இப்போது குளிர்விக்கும் கேழ்வரகு கூழ் தயார்!
இதனை குளிர்வித்து பாட்டிலில் ஊற்றி சாப்பாடுக்கு இடையில் அல்லது நேராக பானமாக குடிக்கலாம். தினமும் ஒரு கேழ்வரகு குளிர்பானம் உடலை இயற்கையாகக் குளிர்விக்க உதவுகிறது. வயிற்றில் எரிச்சல் இல்லாமல், நீரிழிவும் தடுப்பதாகும்.
2. பச்சை பயிறு பானம்
பச்சை பயிறு பானம் ஒரு சத்தான, நார்ச்சத்து மிகுந்த, வெப்பத்தைக் குறைக்கும் உணவாகும். இதைப் பயன்படுத்தி சத்து பானம் செய்வது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
பச்சை பயறு – ½ கப்
தண்ணீர் – தேவையான அளவு
இஞ்சி – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
பனை வெல்லம் – சுவைக்கேற்ப
கொத்தமல்லி/புதினா (விருப்பம்)
ஒரு சிட்டிகை மிளகு தூள்
செய்முறை
பச்சைப்பயறை 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதனை நன்றாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். இந்த கரைச்சலில் தண்ணீர் கலந்து கொஞ்சம் சூடாக்கலாம் வெந்து தணிந்த பின் எலுமிச்சை சேர்க்கவும். பின்னர் இஞ்சி, மிளகுதூள், கொத்தமல்லி இலைகள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பின் வடிக்கவும். சற்றே நீர்ப்பற்றாக வைத்து, பனைவெல்லம் சேர்க்கவும். ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி குளிரவைத்து பரிமாறலாம். முந்திரிப்பருப்பு / பாதாம் தூள் மேலே தூவி சுவை கூட்டலாம்.
3. நட்ஸ் பானம்
நட்ஸ் பானம் புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு நிறைந்தது. சக்தி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது. ஹார்மோன் சீராக இருக்கும். குழந்தைகளுக்கான புத்திசாலித்தன பானம்.
தேவையான பொருட்கள்
பாதாம்- 10-12
முந்திரி- 10
பிஸ்தா- 5-6
வால்நட்- 2-3 துண்டுகள்
வறுத்த நிலக்கடலை- 15
பால்- 2 கப்
தேன்- தேவையான அளவு
ஏலக்காய்தூள்- 1 சிட்டிகை
செய்முறை
பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் ஆகியவற்றை 4 மணி நேரம் அல்லது ஒரே இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பாதாமின் தோலை நீக்கி விடவும். ஊறிய நட்ஸ்களை சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துப் பசையாக மாற்றவும். ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, அதில் அரைத்த நட்ஸ் பேஸ்ட்டை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் தேன் சேர்த்து சுவைக்காக ஏலக்காய்தூள் கலந்து சூடாகவும் குடிக்கலாம், அல்லது ஆற வைத்து பின் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ந்தபின் பரிமாறலாம்.