

சர்வதேச சந்தையில் பங்குச்சந்தை முடிவைகளைப் பொறுத்தே தங்கத்தின் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. டாலரின் மதிப்பு, உலகாளாவிய போர்ச் சூழல், சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இருப்பினும் தினந்தோறும் தங்கத்தின் விலை மாற்றமடைவதற்கு, மிக முக்கிய காரணம் முதலீடு தான்.
சர்வதேச சந்தையில் தங்கம் டாலரின் மதிப்பிலேயே வர்த்தகம் செய்யப்படுகிறது. ஆகையால் தான் டாலரின் மதிப்புக்கும், தங்கத்தின் விலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. டாலரின் மதிப்பு உயரும் போது தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து, விலையும் குறையும்.
தங்கம் விலை தினமும் மாறுவது ஏன்?
1. சர்வதேச சந்தை நிலவரம்:
லண்டன் மற்றும் அமெரிக்காவின் ‘காமெக்ஸ்’ சந்தைகள், சர்வதேச அளவில் தங்க வர்த்தகத்திற்கான முக்கிய மையங்களாக திகழ்கின்றன. இங்கு தினசரி நடக்கும் தங்க விநியோகம் மற்றும் தேவைக்கு ஏற்ப சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அடிக்கடி மாறும்.
2. டாலரின் மதிப்பு:
டாலரின் மதிப்பு குறையும் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்துவதால், விலை உயரும். டாலரின் மதிப்பு உயர்ந்தால், தங்கத்தின் மீதான முதலீடுகள் பலவும் டாலரின் பக்கம் திரும்பி விடும். இந்த சமயத்தில் தங்கத்தின் விலை குறையும்.
3. ரூபாய் மதிப்பு:
வெளிநாடுகளில் இருந்து தான் இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இதனால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரியும் போது உள்நாட்டுச் சந்தையில் தங்கம் விலை உயரும்.
4. பணவீக்கம்:
பணத்தின் மதிப்பு குறையும் போது, நல்ல வருமானத்தை தரும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வர். இந்த நேரத்தில் தங்கத்தின் விலை உயரும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி மற்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும். வட்டி விகிதம் உயரும் போது தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து, தங்கம் விலை சரியும்.
5. அரசியல் தலையீடு:
சர்வதேச அளவில் போர்கள் நடக்கும் போது, பாதுகாப்பான முதலீட்டில் மக்கள் கவனம் செலுத்துவர். அப்போது தங்கமே சிறந்தத் தேர்வாக இருக்கும் என்பதால், விலை உயரும்.
6. இறக்குமதி வரி:
இந்தியாவில் மத்திய அரசு விதிக்கும் ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி வரிகளைப் பொறுத்தும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும்.
ஒரே நாளில் இரண்டு முறை விலை மாறுவது ஏன்?
1. சந்தை நேரம் மற்றும் நேர மண்டல வேறுபாடு:
இந்தியாவில் தினந்தோறும் காலை 9:30 மணி முதல் 10:00 மணிக்குள் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும். அமெரிக்கச் சந்தையின் முந்தைய நாள் இரவு முடிவுகளின் அடிப்படையில், இந்தியச் சந்தையில் காலையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஐரோப்பிய சந்தைகள் பிற்பகலில் தான் வர்த்தகத்தைத் தொடங்கும். இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் கமாடிட்டி சந்தையான MCX, மாலை நேர வர்த்தக நகர்வுகளைப் பிரதிபலித்து, தங்கம் விலையை மாற்றியமைக்கும். இருப்பினும் மாலையில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுவது எப்போதாவது தான் நிகழும்.
2. MCX சந்தையின் தாக்கம்:
MCX சந்தையில் தினசரி காலை முதல் நள்ளிரவு வரை தங்க வர்த்தகம் நடக்கும். சர்வதேச சந்தையில் பகல் நேரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க மாலையில் தங்கம் விலை மாற்றி அமைக்கப்படும்.
3. ரூபாய் மதிப்பு:
பகலில் அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும், மாலை நேரத்தில் தங்கம் விலையை மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். சர்வதேச சந்தையில் நிகழும் மாற்றங்கள் உடனுக்குடன் பிரதிபலிக்கப்படுவதே காலை மற்றும் மாலை என 2 முறை தங்கம் விலை மாறுவதற்கு முக்கிய காரணம்
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: