

கடன்களை எந்த வடிவத்திலும் தவிர்க்கவேண்டும். வீட்டுக் கடன் போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கு கடன் வாங்குவது நல்ல கடன் என்று கூறப்பட்டாலும் கூட, அவற்றை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அடைக்க பார்க்கவேண்டும். கடனட்டை கடன், சுற்றுலா கடன் போன்ற கெட்ட கடன்களைத் தவிர்க்க வேண்டும். கெட்ட கடன்களில் மற்றொரு வகை, முதலீடு செய்வதற்காக கடன் வாங்குவது. இது மிகவும் அபாயகரமானது. இதனை ஆங்கிலத்தில் லீவரேஜ் (Leverage) என்று கூறுவர். இதனைப் பற்றி பிரபல நிதி நிபுணர் வாரன் பஃபெட் பல முறைகள் எச்சரித்துள்ளார்கள். அவரது எச்சரிக்கைகளைப் பின்வறுமாறு பார்ப்போம்.
நாங்கள் எங்களது கணக்குப் புத்தகத்தில் கடன் வாங்கி முதலீடு செய்வதற்கு பதிலாக, சுவாரசியமான வாய்ப்புகளை நிராகரித்து விடுவோம். - வாரன் பஃபெட்
எப்போது அறியாமையையும், கடன் வாங்கி முதலீடு செய்வதையும் இணைக்கிறீர்களோ, அப்போது அழகான சுவாரசியமான விளைவுகளைப் பெறுவீர்கள். - வாரன் பஃபெட்
எனவே, கடன் வாங்கி முதலீடு செய்யாமல், சொந்தப் பணத்தில் முதலீடு செய்ய வேண்டும். வந்தால் பணம், இல்லையேல் அனுபவம் (Either Money or Experience). கடன் வாங்கினால், நாம் இன்னொருவருக்கு பதில் சொல்ல நேரிடும்.
உதாரணமாக, ஒருவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு 1 இலட்சம் ரூபாய் கடன் வாங்குவதாகக் கொள்வோம். அதனால் ஏற்படும் பிரச்னைகள் பின்வருமாறு.
கடன் வட்டித் தொகையினால், பங்குச் சந்தை இலாபம் கேள்விக் குறி ஆகிறது; கடன் வாங்குவதன் மூலம், ஒருவர் பங்குச் சந்தையில் லாபம் ஈட்டினாலும் கூட, அது நஷ்டம் ஆகவே முடியும். உதாரணமாக, அவர் தனிநபர் கடன் வாங்குவதாகக் கொள்வோம். அது சராசரியாக 14% முதல் 18% வட்டி விகிதம் உடையது. நாம் அதிகபட்சமான 18% கடன்வட்டி விகிதத்தை எடுத்துக்கொள்வோம்.
எனவே அவர் பங்குச் சந்தையில் இலாபம் பார்க்க வேண்டுமெனில் 18% ஐ விட , அதிகமான இலாபத்தைப் பங்குச் சந்தையில் ஈட்டவேண்டும். அது எளிதான காரியமல்ல. பிரத்யேக மென்பொருள், பிரத்யேக உதவிக் குழுவினைக் கொண்ட, பல்வேறு நிதி நிபுணர்களே பங்குச் சந்தையில் அத்தகைய இலாபத்தை ஈட்ட முடிவதில்லை. அவருக்கு ஒரு விஷயம் தெரியவருவதற்கு முன்னரே, அவருக்கு முன்பே பல ஜாம்பவான்களுக்குத் தெரிந்து, அவர்கள் வாங்கப்போய், விலையேறிய பின்பே அவர் பொதுவாக வாங்க முடியும். எனவே, அதிக இலாபத்தினை குறுகிய காலத்தில் ஈட்டுவதென்பது மிகவும் கடினமாக விஷயம்.
கடன் காலவரையறை உடையது. பங்குச் சந்தை காலவரையறையற்றது; நடிகர் சத்யராஜ் கூறுவதைப் போல், பங்குச் சந்தை கேரக்டரை புரிந்துக் கொள்வது கடினம். எப்போது திடீரென்று அதள பாதாளத்திற்கு செல்லும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, ஒருவர் பங்குச் சந்தையில் கடன் வாங்கி ஒரு இலட்சம் முதலீடு செய்கிறார் என்றால், அந்தக் கடனை அவர் குறிப்பிட்ட காலத்தில் அடைக்க வேண்டி வரும். உதாரணமாக, ஓர் ஆண்டு என்று கணக்கில் எடுத்துக் கொள்வோம். ஆனால் அந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை இறங்குமுகமாக இருப்பின் கடன் மட்டுமல்ல, கடனுக்கான வட்டியும் சேர்ந்து கொண்டு பெரும் படுகுழியில் அவரைத் தள்ளிவிடும். கடனுக்கு மேல் கடன் என்று வாழ்க்கை போராட்டமாகிவிடும். 1 இலட்சம் ரூபாய்க்கு 18% வட்டி விகிதப்படி, ஆண்டு முடிவில், ரூபாய் 1,18,000 செலுத்தி அவர் கடனை அடைக்கவேண்டும். ஆனால், அந்தச் சமயத்தில், பங்குச் சந்தை இறங்கு முகமாக இருப்பதால், அவரால் பங்குகளை அதிக நஷ்டத்தில் விற்று விட்டு வெளியே வர இயலாது. எனவே, அவரது கடன் சுமை பெருகிவிடும். மேலும் கடன்களில் மாட்டிக்கொள்ள நேரலாம்.
அடுத்தபடியாக, இறங்கு முகமான பங்குச் சந்தையில் பங்குகள் இறங்கினால், இழப்பு அதிகரிக்கும். 1 இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய பங்குகள், பங்குச் சந்தை இறங்குமுகம் காரணமாக, 1 இலட்ச ரூபாய் பங்குகளின் மதிப்பு, ரூபாய். 50,000 ஆகிறது என்று எடுத்துக் கொள்வோம். இப்போது, இரண்டு வித இழப்பு.
1 இலட்ச ரூபாய் = கடன்
ரூபாய். 50,000 = பங்குகள் பண இழப்பு
கட்ட வேண்டிய வட்டி = ரூபாய். 18,000
இங்கு பணத்தின் இழப்பு = ரூபாய். 50,000 + ரூபாய். 18,000 = ரூபாய். 68,000
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப்போல், பங்குச் சந்தை மதிப்பு இழப்பு மற்றும் வட்டி என்று இரண்டு பக்கமும் பண இழப்பு சேர்ந்து பண இழப்பு அதிகமாகிறது.
பங்குச் சந்தை இறங்கு முகத்தினால், அதிகபட்ச வட்டி விகிதம்; மதிப்பை இழக்கும் சொத்திற்கு, பழைய மதிப்பில் கடன் செலுத்த நேரும் அவலம். பங்குகள் விலை இறங்கும் பட்சத்தில், ஒரு இலட்ச ரூபாய்க்கு வாங்கிய பங்குகளின் விலை, ரூபாய். 50,000 என்று குறைந்த போதிலும், ரூபாய். 50,000 சொத்திற்கு, கொடுக்கும் கடன் ரூபாய். 18,000 வருடத்திற்கு, கிட்டத்தட்ட 36% வட்டி விகிதத்தில், கடன் தவணை அவர் செலுத்துகிறார். எவ்வளவு பெரிய கடனாக இது மாறிவிட்டது. இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான விஷயம்.
பங்குகளின் நீர்ப்புத் தன்மையின் பிரச்னை; கடன் பிரச்னையிலிருந்து வெளியேறி விடலாம் என, பங்கு சந்தை இறங்குமுகமாக இருந்தாலும், ஒருவர் பங்குகளை விற்க நினைத்தால், வாங்குவதற்கு ஆட்கள் இருப்பார்களா என்று சொல்ல முடியாது. பணம் பங்கு சந்தையில் மாட்டிக்கொண்டு தேங்கிவிடும் அபாயம் உண்டு. அல்வா என்று நினைத்து சாப்பிடப்போய், அது கோந்தாக இருந்து முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், வாயில் ஒட்டிக்கொண்டுவிடும்.
பணவீக்கத்தின் காரணமாக, இலாபம் கேள்விக்குறி; பங்குச் சந்தை திரும்ப மேலே வருவதற்கு சில வருடங்கள் ஆகலாம். மேலே வந்து, அவர் பங்குகளை விற்க நினைத்து, இலாபம் அடைந்தாலும், அந்த இலாபம், இதுவரை கடன் தவணைகளுக்கு செலுத்தியதை விட, அதிகமாக இருப்பது என்பது கேள்விக்குறிதான். மேலும், பணவீக்கத்தினைக் கருத்தில் கொண்டால், இலாபம் இல்லாமல், அது நஷ்டமாக கூட ஆக நேரிடலாம்.
இது பங்குச்சந்தை முதலீடு மட்டுமல்ல, வங்கியின் வைப்பு நிதி என எந்த ஒரு முதலீட்டிற்கும் பொருந்தும். உதாரணமாக, கடனின் வட்டி விகிதம் 18%. வங்கி வைப்பு நிதியின் வட்டி விகிதம் 7%. எனவே, கடன் வாங்கி எந்த ஒரு முதலீட்டிலும் ஈடுபட கூடாது.
சொந்தக் காசில் முதலீடு செய்து, பணம் போனால், பணம் மட்டும்தான் போனது. நமது பணம். யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. கடன் பணம் என்றால், கடன் காரனுக்கு பதில் சொல்ல நேரிடும்.
எந்தக் காலத்திலும், கடன் வாங்கி நாம் முதலீடு செய்யக் கூடாது.