
நம்ம ஊரைப் பொறுத்தவரைக்கும், கல்யாணம்னாலும் சரி, ஒரு சேமிப்புனாலும் சரி, முதல்ல கண்ணு போறது தங்கத்து மேலதான். ஆனா, கொஞ்ச வருஷமாவே தங்கம் விலை மட்டும் ஏறுமுகமாவே இருக்கு. நடுத்தர மக்கள் ஒரு கிராம் வாங்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது. "இது இன்னைக்கு ஏறும், நாளைக்கு இறங்கும்"னு நாம நினைச்சிட்டு இருக்கோம். ஆனா, பொருளாதார நிபுணர்கள் சொல்ற கணக்கைக் கேட்டா நமக்கு தலையே சுத்திடும்.
இன்னும் அஞ்சோ, பத்தோ வருஷத்துல தங்கம் விலை எங்க போய் நிக்கப்போகுது தெரியுமா? வாங்க, ஏன் இந்த விலை ஏறுது, இதுக்கு பின்னாடி இருக்கிற உலக அரசியல் என்னன்னு கொஞ்சம் தெரிஞ்சிப்போம்.
அமெரிக்க டாலரின் வீழ்ச்சி!
தங்கத்தோட விலையைத் தீர்மானிக்கிறதுல பெரிய பங்கு அமெரிக்க டாலருக்கு இருக்கு. உலக சந்தையில, எப்போதெல்லாம் அமெரிக்க டாலரோட மதிப்பு சரிவையோ, அல்லது ஒரு பலவீனமான நிலையைச் சந்திக்குதோ, அப்போதெல்லாம் தங்கம் விலை தானாகவே உயர ஆரம்பிக்கும்.
2022-ல் இருந்தே, அமெரிக்க டாலரோட கெத்து நாளுக்கு நாள் குறைஞ்சிட்டே வருது. இதைச் சரிபண்ண, அங்க இருக்கிற மத்திய வங்கியான 'ஃபெடரல் ரிசர்வ்' பலமுறை வட்டி விகிதத்தை ஏத்திப் பார்த்தாங்க. ஆனா, அவங்க நினைச்சதுக்கு நேர்மாறா, டாலர் மதிப்பு உயரவே இல்லை.
சந்தையைக் குழப்பிய ட்ரம்ப் மற்றும் வட்டி குறைப்பு!
இந்த குழப்பமான நேரத்துலதான் ட்ரம்ப் மறுபடியும் அமெரிக்க அதிபரா வந்தார். அவரோட வருகையும் சந்தையில எந்த ஒரு நல்ல மாற்றத்தையும் கொண்டு வரலை. சொல்லப்போனா, டாலரோட மதிப்பு முன்னை விட வேகமா சரிய ஆரம்பிச்சது. டாலர் மதிப்பு குறைந்தால், அமெரிக்காவில் உள்ளூர்ல மக்களோட வாங்கும் சக்தி குறையும், வேலைவாய்ப்பு பாதிக்கும். இதைச் சரிசெய்ய, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் இப்போ ஒரு புது வழியைக் கையாண்டது. அவங்க வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைச்சிட்டாங்க. இது மக்களுக்கு நல்லது செஞ்சாலும், உலக அரங்கில் டாலரோட மதிப்பை இன்னும் அதலபாதாளத்துக்குத் தள்ளிடுச்சு.
தங்கத்தின் பக்கம் திரும்பிய முதலீட்டாளர்கள்!
இப்போ யோசிச்சுப் பாருங்க, கையில இருக்கிற டாலர் மதிப்பு குறையுதுன்னு தெரிஞ்சா, பெரிய பெரிய முதலீட்டாளர்கள் சும்மா இருப்பாங்களா? அவங்க டாலர்ல முதலீடு பண்றதை நிறுத்திட்டு, "பாதுகாப்பான முதலீடு" எதுன்னு தேட ஆரம்பிச்சிட்டாங்க. உலக அளவுல, எல்லா காலத்திலயும் பாதுகாப்பான ஒரே முதலீடு நம்ம தங்கம் மட்டும்தான். அதனால, எல்லா முதலீட்டாளர்களும், ஏன், பல நாடுகளோட மத்திய வங்கிகளும் கூட டாலரைக் கொடுத்துட்டு, தங்கத்தை வாங்கிக் குவிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்படி திடீர்னு தேவை அதிகமாகும்போது, விலை ஏறாம என்ன செய்யும்?
இனி என்னதான் நடக்கும்?
வட்டி விகிதம் குறையும்போது தங்கம் விலை ஏறும்னு உறுதியா சொல்ல முடியாது. ஆனா, இப்போ இருக்கிற நிலைமையே வேற. டாலர் ஏற்கனவே பலவீனமா இருக்கு. இந்த நேரத்துல வட்டியைக் குறைப்பது, தங்கத்தோட மதிப்பை இன்னும் வலுவாக்குது. நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னா, 1970-களில் இதே மாதிரி ஒரு சூழல் வந்தபோது, அமெரிக்கா முதலில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஆனா இப்போ, அவங்க குறுகிய கால வேலைவாய்ப்பை மட்டும் பார்க்குறாங்க.
ஒருவேளை அமெரிக்கா தன்னோட டாலர் மதிப்பைக் காப்பாற்ற எந்தப் பெரிய நடவடிக்கையும் எடுக்காமல், இதே நிலைமை நீடிச்சா என்ன ஆகும்? இன்னும் 5-ல இருந்து 10 வருஷத்துக்குள்ள, ஒரு அவுன்ஸ் தங்கம் 30,000-லிருந்து 40,000 டாலர் வரைக்கும் போகலாமாம். அப்போ நம்ம இந்திய ரூபாய் மதிப்புக்குக் கணக்குப் போட்டா. ஒரு கிராம் தங்கம் விலை கிட்டத்தட்ட ₹1,00,000 தொடுமாம்.