
'இந்தியர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் ஜெர்மெனி'!
அமெரிக்காவின் H1B விசா தடுமாறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியர்களை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது ஜெர்மெனி. 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற அவ்வையாரின் கொன்றை வேந்தன் வரிகளை உங்களுக்கு பிடிக்குமானால் இன்றைய நிலவரப்படி ஜெர்மெனி தான் அதற்கு சரியான நாடு.
H1B விசாவுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 1,00,000 டாலர் கட்டணம் விதித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அது இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மன், "திறமையான மற்றும் தகுதியான இந்திய நிபுணர்கள் ஜெர்மெனிக்கு இடம்பெயர்வது குறித்து பரிசீலியுங்கள்" என்று சொன்னது தான்.
ஜெர்மெனியை பணக்கார நாடு என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. இது உலகில் நான்காவது பெரிய பொருளாதாரம் மட்டுமல்ல 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் பொருளாதார இயந்திரமும் இதுதான். 2016-ல் பிரிட்டன் ஐரோப்பிய யூனியன் விட்டு வெளியேறிய பிறகு பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக செயற்பாடுகளை தொடர ஜெர்மெனியை தான் Hub-ஆக தேர்ந்தெடுத்திருக்கின்றன.
வேலை நேரத்தை பொறுத்தவரையில் நிறைய கம்பெனிகளில் வாரம் 36 மணி நேரங்கள் தான். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் பட்சத்தில் அரை மணி நேரம் கண்டிப்பாக பிரேக் எடுத்தே ஆக வேண்டும். அதுபோல 9 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய நேர்ந்தால் கூடுதலாக இன்னொரு கால் மணி நேரம் பிரேக் எடுக்க வேண்டும். சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை என்றாலும் அதிகபட்சமாக 10 மணி நேரம் தான் வேலை செய்ய பெரும்பாலான கம்பெனிகள் ஒத்துக் கொள்கின்றன.
அமெரிக்கா மாதிரி காலை அலுவலகம் போனவுடன் 'இன்று முதல் உங்களுக்கு வேலை இல்லை' என்று தடாலடியாக ஜெர்மெனியில் சொல்லி விட முடியாது. வேலைக்கு சேர்ந்த ஆறு மாத Probationary Period முடிந்த பிறகு உங்களை வேலையில் இருந்து அவ்வளவு எளிதாக தூக்க முடியாது. Work council அப்ரூவல் வேண்டும். மேலும் பத்துக்கும் அதிகமான பேர் ஒரு கம்பெனியில் வேலை செய்யும் பட்சத்தில் அவர்களுக்காக 'Protection Against Dismissal Act' சட்டமும் உள்ளது.
பெண்களுக்காக இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. அது என்ன தெரியுமா! வேலை செய்யும் பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் பண உதவி மட்டுமல்லாமல் மூன்று வருட காலம் அந்த கம்பெனியில் அந்தப் பெண்ணுக்கான வேலையை அவர்கள் ஒதுக்கி வைக்க வேண்டும். மூன்று வருடம் கழித்து அந்த பெண் அதே கம்பெனியில் அதே பதவியில் வேலையை தொடர முடியும்.
ஒருவேளை வேலை பறிபோகுமானால் அரசாங்கத்தில் இருந்து, நீங்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தின் 60 சதவீதம் மாதந்தோறும் உங்களுக்கு சம்பளமாக வரும். குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் 67% கிடைக்கும். அது மட்டுமில்லாமல் வேலையையும் அவர்களே தேடித் தருவார்கள். வேலை சம்பந்தமாக நீங்கள் ஏதாவது படிக்க விரும்பினாலும் அதற்கு பண உதவி செய்து படிக்க வைப்பார்கள்.
'கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பது போல ஜெர்மெனிக்கு வந்தவுடன் அமெரிக்காவின் கிரீன் கார்டு மாதிரி ஜெர்மெனியின் ப்ளூ கார்டும் உங்கள் கை வந்து சேரும். என்ன! ஜெர்மெனிக்கு வறீங்களா!