
கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுக்க பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர முகக் கவசம், ஊரடங்கு உத்தரவு மற்றும் தடுப்பூசி என பல்வேறு வழிகளை உலக நாடுகள் கையாண்டன. ஒரு வழியாக நம்மை விட்டுச் சென்று விட்டது என நிம்மதியாக இருக்கும் போது, மீண்டும் கொரோனாவின் பெயர் அடிபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
அப்படியெனில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் அதிகரிக்குமா என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் மருத்துவக் காப்பீடு கைக்கொடுக்குமா என்பதையும், வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்களையும் நாம் இப்போது காண்போம்.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தான் மருத்துவக் காப்பீடு எடுக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும் இதில் காப்பீட்டு நிறுவனங்கள் சில விதிமுறைகளை வகுத்துள்ளன. இந்த விதிமுறைகள் கொரோனா காலகட்டத்திற்கு சரியாக இருக்குமா என்பதைப் பலரும் கவனிப்பதில்லை. ஏனெனில் மருத்தவமனையில் அறை வாடகை மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான செலவுகள் காப்பீட்டில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மருத்துவக் காப்பீடு எடுத்தவர்களும், இனிமேல் காப்பீட்டை எடுக்கப் போகும் வாடிக்கையாளர்களும் சிலவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மருத்துவ தொலைபேசி ஆலோசனைகள், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள், அறை வாடகை மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தால் அதனைச் சமாளிக்கும் செலவுகள் உள்ளிட்டவற்றிற்கு உங்கள் மருத்துவக் காப்பீடு உதவ வேண்டும். முன்பே இதனைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது. இல்லையேல் உடனே காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, நமக்கு ஏற்றவாறு காப்பீட்டைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
கொரோனா காலகட்டத்தில் வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. பெரும்பாலான காப்பீடுகள் மருத்துவமனையில் சேர்த்தால் மட்டுமே ஓரளவு பலனைக் கொடுக்கும்.
கடமைக்கு மருத்துவக் காப்பீட்டை எடுக்காமல், அது எப்படியெல்லாம் உதவும் என்பதைத் தெரிந்து கொண்டு காப்பீடு எடுங்கள். இல்லையேல் காப்பீடு இருந்தும் அவசர காலத்தில் நிதிச்சுமைக்கு ஆளாக நேரிடும்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு உங்கள் மருத்துவக் காப்பீடு இருக்க வேண்டும். செவிலியர் சேவைகள், மருத்துவ உபகரணங்கள் வாடகை மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மருத்துவக் காப்பீடு இருப்பதை உறுதி செய்யுங்கள்.
கடந்தமுறை பாலிசிதாரர்கள் அவதிக்குள்ளானது போல் இம்முறை யாரும் நெருக்கடியான நிலையை சந்திக்க கூடாது. இதற்குத் தான் தற்போது மருத்துவக் காப்பீட்டை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸின் முதல் மற்றும் இரண்டாவது அலைகள் மருத்துவக் காப்பீடு அவசியம் என்பதை நமக்கு உணர்த்தி விட்டன. இருப்பினும் நாம் விழிப்புடன் இருந்தால் தான் காப்பீடு இலாபகரமானதாக இருக்கும். எப்போதும் எதிராபாராத அவசர மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் கடனில் சிக்கி நிதி சுதந்திரத்தை இழக்க நேரிடும்.
எதிர்காலத்தில் நம் மருத்துவத் தேவைகளைச் சமாளிக்க வலுவான மருத்துவக் காப்பீட்டுக் கொள்கை அவசியம். இதுதான் நமக்கான நிதிப் பாதுகாப்பை வழங்கும். மருத்துவக் காப்பீட்டுக்கு முன்பாக, கொரோனா வைரஸிடம் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்வதும் அவசியம்.