
நடிகை சினேகாவும், பிரசன்னாவும் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கிரிவலம் சென்ற போது செருப்பு அணிந்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் 2001-ல் ‘என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அழகு, குடும்பப் பாங்கான முகத்தோற்றம், நடிப்புத் திறனுக்காக அறியப்படும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். ‘புன்னகை அரசி’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் சினேகா.
ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் விஜய், அஜித், விக்ரம், கமல், சூர்யா, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
2009-ல் வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ எந்த படத்தில் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். நடிகர் பிரசன்னா 2002-ல் மணிரத்தினம் தயாரிப்பில் வெளிவந்த ‘பைவ் ஸ்டார்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார். ‘பைவ் ஸ்டார்’ படத்தில் சாக்லெட் பாயாக அறிமுகமான இவர் தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர், நடிகைகள் படத்தில் சேர்ந்து நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். பாக்யராஜ்-பூர்ணிமா, ரஜினி-லதா, பொன்வண்ணன்-சரண்யா, சரத்குமார்-ராதிகா, ராம்கி-நிரோஷா, அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம்.
அந்தவகையில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடித்த போதே இருவரும் காதலித்தாலும் யாருக்கும் தெரியாமல் மறைந்து வைத்தனர். 2011-ல் பிரசன்னா காதலை உறுதி செய்த நிலையில் 2012-ல் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விகான் என்ற ஆண் குழந்தையும், ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
தற்போது இவர் டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும், சிறந்த படங்களை தேர்ந்தெடுத்தும் நடித்து வருகிறார். நடிகை சினேகா, விஜய்க்கு ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கோட்’ படத்திலும், சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.
கடந்தாண்டு சென்னை தி.நகரில் ‘சினேகாலயா சில்க்ஸ்’ என்ற பட்டுப்புடவை கடையைத் திறந்த சினேகா அதை வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறார்.
நடிப்பு, குடும்பம், தொழில் என பிஸியாக வலம் வரும் சினேகா, தனது கணவர் பிரசன்னாவுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செய்து இருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாகி இருக்கிறது.
சினேகா, பிரசன்னாவும் திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு பூஜை செய்து அண்ணாமலையாரை தரிசனம் செய்த பின்னர் கிரிவலம் பாதையில் நடைப்பயணத்தை மேற்கொண்டனர். கிரிவலப்பாதையில் நடைப்பயணம் செய்தது தவறில்லை. ஆனால் அவர்கள் இருவரும் செருப்பு அணிந்து கொண்டு கிரிவலப்பாதையில் நடைப்பயணம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் பக்தர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புனிதம் நிறைந்த கிரிவலப்பாதையும் செருப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டது பெரும் பாவம் என்று பக்தர்கள் கூறுகின்றனர். கிரிவலப்பாதையில் செருப்புடன் நடந்து சென்று தேங்காய் உடைத்து, பிரார்த்தனை செய்தது சரியா என சினேகா, பிரசன்னாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.