
இந்த அழகான பூமி மனிதர்கள், விலங்குகள் மற்றும் பல ஜீவராசிகள் வாழும் ஒரு அற்புதமான இடமாகும். வரும் தலைமுறையினருக்கு இந்த பூமியை பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். பூமியையும் அதன் இயற்கை வளங்களையும் பராமரித்து சுற்றுச்சூழலை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் கிடைக்கவும் வழி வகை செய்யவேண்டும். அதற்கு பூஜ்ஜிய கழிவு முறையை ஒவ்வொருவரும் கையில் எடுக்க வேண்டியது அவசியம்.
ஒவ்வொருவரும் கழிவுகளை முடிந்தவரை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க உபயோகித்த பொருள்களை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிவது அல்லது அவற்றை எரிப்பது போன்ற செயல்களை செய்யாமல் அவற்றின் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
பூஜ்ஜிய கழிவுகளின் ஐந்து முக்கிய கோட்பாடுகள்;
1. மறுத்தல்;
தேவையில்லாத பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வாங்க மாட்டேன் என்று மறுக்க வேண்டும்.
2. குறைத்தல்;
சிலர் ஆடைகள், உபகரணங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அடிக்கடி வாங்குவார்கள். வாங்கும் தேவையை குறைத்துக்கொள்ள வேண்டும்.
3. மறு பயன்பாடு;
உபயோகித்த பொருட்களை தூக்கி எறிவதற்கு பதிலாக அவற்றை மீண்டும் பயன்படுத்த வேண்டும். பலமுறை பயன்படுத்தக்கூடிய பொருட்களை வாங்கவேண்டும்.
4. மறுசுழற்சி;
பொருட்களை பயன்படுத்திய பிறகு அவற்றை மறுசுழற்சி செய்ய வேண்டும்.
புதிய தயாரிப்புகளை உருவாக்க பொருட்களை சரியாக பாதுகாத்து வைக்கவேண்டும்
5. உரங்கள்;
ஊட்டச்சத்து நிறைந்த மண்ணை உருவாக்க கரிமக் கழிவுகளை பதப்படுத்த வேண்டும்.
நடைமுறை வாழ்க்கையில் கழிவுகளை குறைப்பதற்கான 8 வழிமுறைகள்;
1. எந்த பொருளை அடிக்கடி குப்பையில் வீசி எறிகிறோம் என்பதை அடையாளம் கண்டு கொண்டு அதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக தினமும் பிளாஸ்டிக் பைகளில் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்குவதை அறவே தவிர்த்துவிட்டு துணிப்பை எடுத்துக்கொண்டு அவற்றை வாங்க செல்லலாம்.
2. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருட்களை தவிர்த்து விட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை உபயோகப்படுத்தலாம். வெளியில் செல்லும்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் வாங்கி உபயோகித்து, தூக்கி எறிவதற்கு பதிலாக வீட்டிலிருந்து சில்வர் பாட்டிலில் தண்ணீர் பிடித்து எடுத்துச் செல்லலாம்.
3. வீட்டில் இருக்கும் உடைந்துபோன பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக அவற்றை சரி செய்து மீண்டும் உபயோகப்படுத்தலாம். அல்லது அவற்றை பழுது பார்த்து யாருக்காவது கொடுத்துவிடலாம்.
4. உணவுக்கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை குப்பையில் எறியாமல் உரமாக மாற்றலாம். இதனால் குப்பை கிடங்குகளில் இருந்து மீத்தேன் வாயு வெளியேற்றத்தை குறைக்கலாம். அல்லது சமூக உரமாக்கல் திட்டங்களில் கொடுத்துவிடலாம்.
5. பொருட்களை மொத்தமாக வாங்குவது பேக்கேஜிங் கழிவுகளைக் குறைக்கிறது.
6. தேவையான அளவு மட்டுமே சமைத்து சாப்பிட வேண்டும். அதுபோல ஆர்டர் செய்து உண்ணும் போதும் தேவையான அளவு மட்டுமே வாங்கி உண்ண வேண்டும். இதனால் குப்பையில் கொட்டப்படும் உணவுப் பொருள்கள் குறைக்கப்படுகிறது.
7. பிளாஸ்டிக் போர்க்குகள், கத்திகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்றவற்றை வாங்காமல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கி உபயோகப்படுத்தலாம்.
8. பயன்படுத்திய பழைய ஆடைகளை குப்பையில் எறிவதற்கு பதிலாக அவற்றை சரி செய்து தேவையானவர் களுக்கு தரலாம் அல்லது அவற்றை மறு பயன்பாடுக்கு பயன்படுத்தலாம். குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை குப்பையில் தூக்கி எறியாமல் ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.