53 Sundays திரைப்பட விமர்சனம்!

53 Sundays
53 Sundays
Published on
ரேட்டிங்(3.5 / 5)

செஸ்க் கே (Cesc Gay) என்பவர் எழுதிய 53 SUNDAYS என்ற ஸ்பானிஷ் நாவலைத்தழுவி எழுதப்பட்ட திரைக்கதை இது. நாவல் ஆசிரியரும் இவரே! படத்தின் திரைக்கதை ஆசிரியர் + இயக்குநர் கூட இவர் தான்.

இது ஒரு லோ பட்ஜெட் படம். ஒரே ஒரு வீடு, நான்கே கேரக்டர்கள் வைத்துத் தயாரிக்கப்பட்ட படம். அமரர் விசு அவர்கள் நெட்பிளிக்ஸ் கம்பெனிக்கு ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அதே போன்ற ஒரு குடும்பப்படம். க்ளைமாக்சில் கண் கலங்க வைத்து விடுவார்கள்.

இந்தப் படம் ஆண்களுக்குப் பிடிக்காது. பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். நெட்பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.

ஸ்பாய்லர் அலெர்ட்

ஒரு குடும்பத்தில் 86 வயதான அப்பா தனிமையில் இருக்கிறார். அவருக்கு 3 வாரிசுகள். மூவரும் தனித்தனியே வசிக்கிறார்கள்.

முதல் மகன் விக்டர் ஒரு பணக்கார வீட்டில் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளை ஆக இருப்பவன். அவனை மாமனார் வீட்டில் யாரும் மதிப்பதில்லை. மனைவிக்கு எடுபுடி வேலை செய்யும் வேலைக்காரனாக, மாமனாருக்கு டிரைவராக இருக்கிறான். ஆனால் வெளியில் தான் வசதியாக இருப்பதாகக் காட்டிக்கொள்வான்.

இரண்டாவதாகப் பிறந்த மகள் நடாலியாவுக்கு அமைந்த கணவன் சரி இல்லை. அவனைப் பிரிந்து தனியாக வாழ்கிறாள். வேலைக்குப் போவதால் செலவுக்குப் பிரச்னை இல்லை.

மூன்றாவது மகன் ஜூலியன் டி.வி விளம்பரப்படங்களில் நடிக்கிறான். பெரிய வருமானம் இல்லை. மனைவி வேலைக்குப் போவதால் வண்டி ஓடுகிறது.

மூன்றாவது மகனின் மனைவி கரோல் அம்மா, அப்பா இல்லாத அனாதை என்பதால் குடும்பத்துடன் நெருக்கமாகப்பழக விரும்புபவள்.

வயதான அப்பாவைத்தனி வீட்டில் தங்க வைத்து ஆள் வைத்துப்பராமரிக்கிறார்கள். இதற்கு ஆகும் செலவை மூத்த மகனும், மகளும் தான் கொடுக்கிறார்கள். கடைசி மகன் வறுமையில் இருப்பதால் அவனிடம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.

அப்பா வசிக்கும் அபார்ட்மெண்ட்டில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் அவர் மேல் புகார் கூறுகிறார்கள். அப்பா அவருக்கு இருக்கும் ஒரு பிரச்சனையை சொல்லி அதை சரி செய்ய மூவரையும் அழைக்கிறார். அவர் மேல் பக்கத்து வீட்டுக்காரர்கள் வைத்த புகார் என்ன? அவருக்கு இருக்கும் பிரச்சனை என்ன? இதை எப்படி சரி செய்வது?யார் பொறுப்பேற்பது என்பது பற்றிப்பேச கடைசி மகன் வீட்டில் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் பேசுவதுதான் மொத்தப்படமுமே!

முதல் மகன் விக்டர் ஆக ஜேவியர் கட்டிரேஜ் குறும்புத்தனமாகப் பேசி மனம் கவர்கிறார். தான் எழுதிய நாவலைப்பற்றிய கருத்துக்களைத்தன் தங்கையிடமும், தம்பியிடமும் அறிந்து கொள்ள அவர் காட்டும் ஆர்வம் அருமை.

இரண்டாவது மகளாக, நடாலியாவாக கார்மென் மேக்கி சிரித்த முகத்துடன் தம்பி மனைவியுடன் பேசுவது சிறப்பு. உன் நாவலை எனக்கு சுத்தமாகப்பிடிக்கவில்லை என அண்ணனிடம் ஓப்பனாகப் பேசுவது கலகலப்பு.

கடைசி மகன் ஜூலியன் ஆக ஜேவியர் கமரா கச்சிதமான நடிப்பு. அதிகம் படிக்காத இவர் அண்ணனின் நாவலை ஆர்வமுடன் இரு முறை வாசித்ததாகக்கூறும் காட்சி மனதில் நிற்கிறது.

கடைசி மகனின் மனைவி கரோல் ஆக அலெக்சாண்ட்ரா ஜிமேனேஜ் கலகலப்பாக பழகும் சுபாவம் உள்ளவராக நம் மனதில் இடம் பிடிக்கிறார். இவர் ஆடியன்சைப் பார்த்துக்கதை சொல்வது போல் படம் ஆரம்பித்தாலும் பின் நால்வரும் உரையாடும் டிராமா மாதிரி போகிறது.

ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் எல்லாம் கச்சிதம். ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும் ஒளிப்பதிவாளருக்கு சவாலான வேலை தான்.

தான் எழுதிய நாவலைத் தழுவித் திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் செஸ்க் கே (Cesc Gay).

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: லீடர் - 'அண்ணாச்சியின் அட்ரா சிட்டி'
53 Sundays

சபாஷ் டைரக்டர்

  • படத்தின் மொத்த ரன்னிங்க் டைம் 78 நிமிடஙகள் தான். ஒரு குறு நாவலை வாசித்த அனுபவம் கிடைக்கும். அசோகமித்திரன் பாணியில் திரைக்கதை பயணிக்கிறது.

  • நால்வரின் உரையாடல் மூலமாகவே யார் யார் என்ன செய்கிறார்கள், அவர்கள் ஹாபி என்ன? என்பது உள்பட எல்லா விபரங்களையும் ஆடியன்சுக்கு சொன்ன விதம் அருமை.

  • மூத்த மகன் எழுத்தாளராக இருப்பதும் 53 வாரங்கள் டைம் எடுத்துக் கொண்டு ஒரு நாவலை எழுதி முடித்ததாகவும் கூறும் அவரால் ஒரு வாரம் கூட ஒதுக்கி சொந்த அப்பாவைப்பார்க்க வர முடியவில்லை என்பதைக் குத்திக்காட்டும் விதமாக டைட்டில் 53 சண்டேஸ் என வைத்த ஐடியா செம.

  • எல்லோருக்கும் அப்பா மீது பாசம் இருந்தும் அவரவர் வாழ்க்கையைப் பார்க்க வேண்டி இருப்பதால் அப்பாவுக்கு நேரம் ஒதுக்க முடியாமை பற்றி நமக்கு உணர்த்துவது கச்சிதம்.

  • யாரும் எதிர் பாராத க்ளைமேக்ஸ் நம்மை அப்படியே ஒரு நிமிடம் உறைய வைக்கும். ஒரு சிறுகதை படித்த உணர்வு.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: நீளிரா - இது கதையல்ல, வாழ்க்கை!
53 Sundays

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • படத்தின் மெயின் கேரக்டரே அப்பா தான். அவரைக்காட்டவே இல்லை. பிளாஸ்பேக் சீனில் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டுப் பிள்ளைக்ளை ஆளாக்கினார் என்பதைக்காட்டி இருக்கலாம். வசனமாக மட்டும் வருகிறது.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+

சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்கள் இந்தப் படத்தை மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள். அவர்களைப் போலவே பொறுமை குணம் இருக்கும் ஆண்களும் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com