A Working Man movie
A Working Man movie

விமர்சனம்: A Working Man - சண்டைக் காட்சிகளுக்கென்றே ஒரு படம் - No Logic. Only Action. பிடிக்குமா? அப்போ பாருங்க!

Published on

தனக்கு நெருக்கமானவர்களின் மகளைக் கடத்திச் சென்ற கும்பலைக் கண்டுபிடித்துக் கூண்டோடு அழிக்கும் இன்னொரு ஹாலிவுட் படம். ஜேசன் ஸ்டேதாம் நடிப்பில் டேவிட் ஆயரின் இயக்கத்தில் வந்துள்ள படம் தான் எ ஒர்கிங் மேன்.

கடத்தல், தேடல், கொலையென ஒரே மாதிரிப் படங்கள் எடுப்பது அலுக்கவே அலுக்காது போல ஆங்கிலப் படவுலகத்திற்கு. ஜேசன் ஸ்டேதம் நடிப்பில் வெளியாகியுள்ள ஒர்கிங் மேன் இன்னொரு எடுத்துக்காட்டு. ராணுவத்தில் அதுவும் பிளாக் ஆப் கமாண்டோவாகப் பணியாற்றிப் பின்னர் அது வேண்டாமென்று வெளியில் வந்தவர் ஜேசன். தற்போது ஒரு கட்டுமானப் பொறியாளரிடம் சூப்பர்வைசராகப் பணியாற்றுகிறார். அவருக்கு இவரது கடந்த காலம் தெரிந்திருந்தாலும் வேலை கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களது ஒரே மகளை ஆள்கடத்தல் கும்பல் ஒன்று கடத்துகிறது. பெண்களைக் கடத்தித் தப்பான வழியில் செயல்பட வற்புறுத்துவது அவர்களது குறிக்கோள். இதற்குப் பல பெரிய பணக்காரர்களும், கடத்தல் கூட்டங்களும் உடந்தையாக இருக்கிறார்கள்.

அந்தப் பெண்ணிடம் ஜேசனுக்கு இனம் புரியாத அன்பு உண்டு. ஜேசனுக்கு ஒரே ஒரு செல்ல மகளும் உண்டு. வன்முறையெல்லாம் வேண்டாம் என்ற முடிவில் தனது மகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் இவரிடம் மன்றாடுகிறார்கள். பணம் வேண்டுமெனில் கொடுக்கிறோம், பெண்ணைக் காப்பாற்றிக் கொடு என்று கேட்கிறார்கள். நான் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து விட்டேன். மன்னிக்கவும் என்று சொல்லி விடுகிறார் ஜேசன். இருந்தும் மனது கேட்காமல் அந்த வேலையில் இறங்குகிறார்.

சாதாரணமான ஆள் கடத்தல் என நினைத்து இறங்கும் அவருக்கு இதில் பல நிழலுலகத் தாதாக்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இருந்தும் எடுத்த நடவடிக்கை எடுத்தது தான். தன்னுடன் பணியாற்றிய ஒரு நண்பனிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிக்கொண்டு களத்தில் இறங்குகிறார். கத்தி, ரத்தம், துப்பாக்கி, ரத்தம், வெடிகுண்டு ரத்தம் எனக் கும்பலுக்கு மேல் கும்பலாகக் கொன்று தீர்க்கிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: Exterritorial - தூதரகத்தில் தொலைந்த மகனைத் தேடும் முன்னாள் ராணுவ வீராங்கனை!
A Working Man movie

இதில் கதை என்று என்ன இருக்கிறது மொத்தமும் சொல்லிவிட்டதாக நினைத்தால் பார்க்க வேண்டியதே படத்தின் ஆக்க்ஷன் காட்சிகளைத் தான். ஜேசன் ஸ்டேதம் வழக்கம்போலச் சுறுசுறுப்பாகச் சண்டை போடுகிறார். நாயகனை முன்னாள் கமாண்டோவாகச் சொல்லிவிடுவதால் அதில் நம்பகத் தன்மையும் கூடிவிடுகிறது. ஓடும் வேனுக்குள் நடக்கும் ஒரு சண்டை, வீட்டுக்குள் நடக்கும் ஒரு சண்டை, கடைசியில் நடக்கும் துப்பாக்கிச் சண்டையென மூச்சு முட்ட முட்டச் சண்டைக் காட்சிகள். இவரால் கொல்லப்படுவோர் அனைவரும் கொலைகாரர்கள் என்பதால் போலிஸ் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

கடத்தப்படும் பெண் ஜென்னி கார்ஸியாவாக வரும் அரியானா ரிவாசுக்கும் சில சண்டைக் காட்சிகள் வைத்துள்ளனர். இதில் கதையையோ லாஜிக்கையோ எதிர்பார்க்கக் கூடாது. ரசிகர்களுக்குத் தேவை பத்து நிமிடங்களுக்கு ஒரு பத்து நிமிடச் சண்டைக்காட்சி. பரபரவென்று நகரும் திரைக்கதை. அவ்வளவு தான். எனவே இந்தப் படம் ஆக்க்ஷன் பிரியர்களுக்குப் பிடிக்கும் என்று நிச்சயம் நம்பலாம். சாமானிய ரசிகர்களுக்கு ஒரு டைம் பாஸ் படம். இந்தப்படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இது ஒரு பிரான்சைஸ் படமாக வரவும் வாய்ப்பு உள்ளது என்பது கூடுதல் தகவல்.

இதையும் படியுங்கள்:
இந்த சீரிஸின் ஒரு எபிசோட் பட்ஜெட் 480 கோடியாம்… அப்போ முழு சீரிஸுக்கும்!?
A Working Man movie
logo
Kalki Online
kalkionline.com