விமர்சனம்: Exterritorial - தூதரகத்தில் தொலைந்த மகனைத் தேடும் முன்னாள் ராணுவ வீராங்கனை!

Exterritorial Movie Review
Exterritorial Movie
Published on

ஒரு படம் பார்க்கும் போதே இது நன்றாக இருக்கிறதா. இல்லை மொக்கையா என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கும். இந்த எண்ணம் மாறி மாறி வந்தால் படத்தில் நிச்சயம் ஏதோ பிரச்சனை என்பது உண்மை. அப்படிச் சமீபத்தில் பார்த்த ஒரு படம் தான் எக்ஸ் டெரிடோரியல்.

ப்ராங்பர்ட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு விசா விஷயமாகத் தன் மகனுடன் செல்கிறார் கதாநாயகி உல்ப். சென்ற இடத்தில் மகனைக் காணவில்லை. சில சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் நடப்பதைக் கவனிக்கிறார். மகனைத் தேடும் இவருக்கு உதவி செய்வது போல் தோன்றினாலும் ஒரு கட்டத்தில் காட்சிகள் மாறுகின்றன. இவரது மனநிலையையே சந்தேகிக்கிறார். சொல்ல மறந்து விட்டேனே. நாயகி சாதாரணமான ஆள் அல்ல. ஒரு முன்னாள் போர் வீரர். போர்க்களத்தில் ஒரு வீரருடன் காதலாகிக் கசிந்துருகிப் பெற்ற பிள்ளையைத் தான் காணாமலாக்கி விடுகிறார். முன்னாள் நடந்த சம்பவத்தின் காரணமாகச் சில சமயம் அவருக்குப் பானிக் அட்டாக் எனப்படும் சைக்கலாஜிக்கல் தொந்தரவுகள் இருக்கின்றன.

ஒரு கட்டத்தில் தூதரக அதிகாரிகள் எதையோ மறைக்கிறார்கள் என்பதை உணர்ந்த இவர் தானாகத் தேட ஆரம்பிக்கிறார். அவருக்கு மகன் கிடைத்தானா. தூதரகத்தில் நடப்பது என்ன. அவரது வியாதி என்னவானது. விசா கிடைத்து அமெரிக்கா சென்றாரா என்பது தான் மீதிக் கதை.

இது போன்ற கதைகள் வீசை என்ன விலை என்று கேட்குமளவு ஹாலிவுட்டில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. லியம் நீசனின் டேக்கன் படங்கள் (TAKEN) இதைச் சுற்றி அமைக்கப்பட்டவை தான். என்ன இதில் தூதரகம் தான் கதைக்களன். அமெரிக்கத் தூதரகத்தைத் தான் எக்ஸ் டெரிடோரியல் என்கிறார்கள். அங்கு அமெரிக்காவின் ஆதிக்கம் தான் முதன்மையானது. அது எந்த நாட்டில் இருந்தாலும். அப்படியொரு ஏற்பாடு.

வேலை கிடைத்து அமெரிக்கா செல்ல நினைத்தவருக்கு அங்கு இனிமேல் செல்ல முடியுமா என்று நினைக்கும் அளவுப் பிரச்சினைகள். அதே தூதரகத்தில் உள்ள மற்றொரு பெண்ணின் உதவியோடு சூழ்நிலையை எதிர்கொள்கிறார். இறுதியில் அரதப்பழசான ஓர் யோசனையோடு குற்றவாளியைச் சட்டத்தின் வசம் ஒப்படைக்கிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: டூரிஸ்ட் ஃபேமிலி - குடும்பங்கள் கொண்டாட ஒரு ஃபீல் குட் படம்...
Exterritorial Movie Review

ஏதாவது நடக்கும். பெரிய சண்டை வந்துவிடும் என்று காத்துக் கொண்டே இருக்கிறோம். அவ்வளவு பாதுகாப்பான அமெரிக்கத் தூதரகத்தில் அவர் இஷ்டத்திற்கு உள்ளே செல்கிறார். மேற்கூரையில் காவல் என்ற ஒன்று இருக்கவே இருக்காது போல அங்கே இருந்து சௌகரியத்திற்கு உள்ளே செல்கிறார். வெளியே வருகிறார். ராணுவ வீரர் என்று காட்டி விட்டதால் சாஸ்திரத்திற்கு இரண்டு சண்டைக்காட்சிகள். அதுவும் சப்பென்று படமாக்கப்பட்டது தான் இன்னும் சோகம். அவருக்கும் சக வீரருக்குமான காதல், பாசம் போன்றவை எல்லாம் எஸ்டாபிளிஷ் செய்யப்படாமல் இரண்டொரு காட்சிகளில் கடந்து செல்கிறது. அதனால் அவரது மகனைக் காணோம் என்ற பரபரப்பே நம்மை எட்டவில்லை.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அரங்க அமைப்புகளும், நாயகியின் பாஸ் மார்க் நடிப்பும் மட்டுமே. அவ்வப்போது வரும் போர்க்காட்சிகள் கூடப் பெரிதாகக் காட்டப்படவில்லை. பட்ஜெட் பிரச்சனைபோல. இப்படித் தான் நடக்கும் என்று ஒவ்வொரு காட்சியும் ஊகிக்கும்படி இருப்பது இன்னுமொரு கடுப்பு. ஒரு கட்டத்தில் வசனங்கள் கூட அவர்களோடு சேர்ந்து ஆரம்பித்து விடுமளவு தட்டையான ரைட்டிங். ஒரு விடுமுறை நாளில் பார்ப்பதற்குப் படங்கள் இல்லாமல் அல்லது என்ன செய்யவென்று தெரியாமல் முழிக்கும்போது பார்த்து வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ரெட்ரோ - சூர்யா கச்சிதம். மிச்சம்?
Exterritorial Movie Review

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com