“எங்களை விட்டுட்டுப் போறீங்களா? … அண்ணி.. எங்க வீட்டைப் பிடிக்கலையா? நீங்க வேணும்னா சோழன் அண்ணாவை டைவர்ஸ் பண்ணிடுங்க…. ஆனா, நீங்க எனக்காக இந்த வீட்டிலேயே இருங்க அண்ணி…. ”
இது அய்யனார் துணை தொலைக்காட்சித் தொடரில் பல்லவன் பேசும் வசனம். ஒரு முரட்டுப் பாசக்கார குடிகார அப்பா, தன் தம்பிகளை ஒரு தாயாய் பார்த்துக் கொள்ளும் சேரன் கதாபாத்திரம், அதிகம் பேசாமல், ஆனால், மிக அழுத்தமான பாத்திரமாக பாண்டியன், வாய்க்கு வந்தவாறெல்லாம் பொய்களை அள்ளி வீசிக் காரியங்களை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரமாக சோழன்… இவர்களுக்கிடையில் ஒரு அழகிய கவிதையாக நிலா என்ற பெயர் கொண்ட நாயகி….
வழக்கமான மாமியார் கொடுமை தொலைக்காட்சித் தொடர்களிலிருந்து ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு விஜய் தொலைக்காட்சியில் பிரைம் டைமைப் பிடித்து மக்கள் மனதில் நாளுக்கு நாள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள தொடரே அய்யனார் துணை.
நேர்மறையான கதாபாத்திரங்களைக் கொண்டு மெல்லிய உணர்வுகளைக் கடத்தும் எந்த ஒரு கலை வடிவமானாலும் அது கொண்டாடப்பட வேண்டியதே. வீட்டில் கோலம் போட, விளக்கேற்ற, கண்டிக்க, பாசம் காட்ட ஒரு பெண் கிடைத்து விட்டவுடன் அய்யனார் துணை என்ற இல்லத்தில் வாழ்ந்து வரும் சகோதரர்களிடம் ஏற்படும் மாற்றம்… மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உறவுகளைக் கொண்டாடுகின்ற ஒரு கதாபாத்திரமாய் கல்லூரி இளைஞனாய் வரும் பல்லவன் கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தம். சின்னச் சின்ன கஷ்டமான தருணங்களில் கோழையாய் உடைந்து கண்ணீர் சிந்தி, மனதில் பட்டதைப் பேசும் பாத்திரமாய் எல்லோரையும் கொள்ளை கொள்கிறது இந்தப் பாத்திரப் படைப்பு.
நான்கு இளைஞர்கள் இருக்கும் வீட்டில் சந்தர்ப்பவசமாய் வாழ வரும் பெண்ணாய் நிலா. உடைகளில் கண்ணியம், உடல் மொழியில் கவிதை, விழிகளில் உணர்ச்சிகளைக் கடத்தும் பாங்கு என்று அசத்தலான கதாநாயகி தேர்வு.
தோசை சுட, காபி போட, சாப்பாடு செய்து தர என தம்பிகளுக்காய் அனைத்து வேலைகளையும் தன் தோள்களில் சுமந்து கொண்டு கொத்தனார் வேலை பார்க்கும் பாசக்கார அண்ணனாய் சேரன்…. மற்றுமொரு நல்ல தேர்வு.
ஒரு தொலைக்சாட்சித் தொடர்…. அதுவும் ஒரு மெகா தொடர் ….. தொலைக்காட்சியின் டி. ஆர். பி இலக்கணங்களுக்காக இனி வரும் காலங்களில் எப்படிப் போகுமோ அது யாமறியோம். ஆனால், தொடர் தொடங்கிய நாள் முதல் இது வரையிலும் இது வித்தியாசமான கதைக்களத்தில் பயணிக்கிறது.
இன்று பல இளைஞியர், இல்லத்தரசியர் கொரிய மொழித் தொடர்களை விரும்பிப் பார்த்து வருகிறார்கள். அந்தத் தொடர்களின் பலமே குடும்பத்தில் உள்ள உறவுகளுக்கிடையே மெல்லிய உணர்வுகளின் வெளிப்படும் விதமும் அதற்கேற்ற நடிக நடிகையர் தேர்வுமே எனலாம். அதைப் போல நம் மொழியில் தொடர்களைப் பார்க்க இயலாதா? என்ற ஏக்கத்திற்கிடையே, பல அரைத்த மாவினையே பல சுற்றுகளாக அரைத்துக் கொண்டு, இரசிகர்களின் பொறுமைக்கு சோதனையேற்படுத்தும் தொடர்களுக்கு மத்தியில் அய்யனார் துணை என்ற இந்தத் தொலைக்காட்சித் தொடர் குடும்ப உறவுகளிடையே எழும் மெல்லிய உணர்வுகளைச் சொல்லும் ஒரு கவிதையாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனலாம்.
வழக்கமான கதைகளைப் போலல்லாமல் ஒரு வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து கதையின் பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க நடிக, நடிகையரை மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்து, தொடரை இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குநருக்கு வாழ்த்துகள்.