
பணத்தால் பொருட்களை விலை கொடுத்து வாங்கலாம். ஆனால், மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க முடியாது என்கிற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், அதிகமாக பணம் சம்பாதிப்பவர்கள் அதிக மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அது ஏன் என்பதற்கான காரணங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
குறைவான கவலை; அதிக மகிழ்ச்சி: அதிகமாக பணம் ஈட்டுபவர்களுக்கு நிதி அழுத்தங்கள் இருக்காது. போதுமான வருமானம் இருந்தால் மளிகை, கரண்ட் பில் வீட்டு செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவுகள், கார் பழுது பார்ப்பது, உணவு, தங்குமிடம் போன்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கலாம். இது மனப்பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இந்த நிதி பாதுகாப்பு ஆழ்ந்த நிம்மதியையும் மன அமைதியையும் உருவாக்குகிறது. இது மகிழ்ச்சியின் முக்கிய அங்கமாகும்.
அதிக தேர்வுகள் (Choices) மற்றும் சுதந்திரம்: அதிகப் பணம் இருக்கும்போது எங்கு வாழலாம், எந்த வகையான உணவு சாப்பிடலாம், நல்ல உடைகள் அணியலாம், ஓய்வு நேரத்தை எப்படி செலவிடலாம் என்று தேர்வு செய்து கொள்ளலாம். அதிகமாக ஃபீஸ் கட்டி குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கலாம். அதிக விலை கொடுத்து எல்லாவிதமான வசதிகளுடன் கூடிய வீட்டை வாங்கலாம் அல்லது கட்டலாம். விடுமுறையின்போது உள்ளூர் மற்றும் வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லலாம். பிடிக்காத வேலையை விட்டுவிட்டு பிடித்த வேலைக்கு செல்லலாம். இவை எல்லாம் மகிழ்ச்சியை அதிகரிக்கும் காரணிகள் ஆகும்.
வசதிகள்: அதிகமாக பணம் இருக்கும்போது வாழ்க்கை மிகவும் எளிதாகவும், வசதியாகும் இருக்கும். நேரத்தை மிச்சப்படுத்தும் பொருட்களும் சேவைகளும் கிடைக்கும். வாழ்க்கையை மிகவும் இனிமையானதாக மாற்றும். தரமான ஓய்வு நடவடிக்கைகள், உணவு போன்றவை கிடைக்கும். இது மனநிறைவிற்கு கணிசமாக பங்களிக்கின்றன.
மகிழ்ச்சியான அனுபவங்கள்: அதிகமாக பணம் இருப்பவர்கள் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். புதிய உணவகம் தேடி உண்ணலாம். வெளிநாடுகளுக்கு பறக்கலாம். பள்ளி, கல்லூரி நண்பர்களை சென்று பார்த்துப் பேசி மகிழலாம். மன அமைதியை தூண்டும் வகையில் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளலாம். இதுபோன்ற அனுபவங்கள் மகிழ்ச்சி தருகின்றன.
பிறருக்கு உதவுதல்: பிறருக்கு உதவுவதற்கு பணம் தேவை. உதவும்போது அது மகிழ்ச்சியை அளிக்கிறது. தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை தருவது, இல்லாதவர்களுக்கு உதவுவது, ஏழை மக்களுக்கு தானம் தருவது போன்றவை மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும்.
திடீர் பிரச்னைகளை சரி செய்கிறது: திடீரென்று ஒரு விபத்து ஏற்பட்டால் அல்லது உடல் நலன் சரியில்லாமல் இருந்தால், பணத்திற்கு என்ன செய்வது என்று கவலைப்படத் தேவையில்லை. மன அழுத்தமும் இருக்காது. விரக்தி மனப்பான்மை இல்லாமல் தாராளமாக செலவு செய்யலாம்.
அந்தஸ்தும் மரியாதையும்: சமுதாயத்தில் அதிகப் பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான அந்தஸ்து அல்லது மரியாதை கிடைக்கும். சிலருக்கு, நிதி வெற்றியுடன் வரும் அங்கீகாரம், பெருமை மற்றும் சாதனை உணர்வுகளுக்கு பங்களிக்கும். இது அவர்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது. ஆனால், பணம் சம்பாதிப்பது என்பது நேர்மறையான முறையில், நேர்மையாக வழியில் இருக்க வேண்டும். தீய வழிகளில் பணம் சம்பாதிப்பது குற்ற உணர்ச்சியில் தள்ளும். எனவே, இது பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.