
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆல்யா மானசா. இவரின் கொள்ளை கொள்ளும் சிரிப்பு மற்றும் துருதுரு நடிப்பின் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருகிறார். இவர் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் கால் ஊன்றி பிரபலமாகினார். அதன் பின்னர் ராஜா ராணி, ராஜா ராணி 2, இனியா என சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இவர் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது நடிகர் சஞ்ஜீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து ராஜா ராணி பாகம் 2 நடித்து வந்த அவர் பின்னர் இந்த தொடரில் இருந்து வெளியேறினார். நீண்ட இடைவெளிக்கு பின் சன் டிவியில் இனியா சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார்.
சன் டிவியில் இவர் நடித்த இனியா சீரியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில் அதன் பிறகு எந்த சீரியலிலும் நடிக்காத ஆல்யா மானசா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழில் புது சீரியல் நடிக்க உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள புதிய சீரியல் ப்ரோமோ ஜீ தமிழில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆலியா மானஸா கதாநாயகியாக நடிக்க உள்ள இந்த சீரியலுக்கு ‘பாரிஜாதம்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘பாரிஜாதம்’ சீரியலில் இசை என்ற காது கேட்காத கதாபாத்திரத்தில் முதல்முறையாக நடிக்க உள்ளார் ஆலியா மானஸா. அதேபோல் கன்னட சீரியல் நடிகர் ரக்ஷித் கோபால் கதாநாயகனாக களம் இறங்குகிறார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் சீரியல் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சீரியலில் இவர் ராக் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த சீரியலில் இவர்களுடன் ஸ்வாதி, ராஜ்காந்த், லதா ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்.
கதாநாயகியின் உலகத்தில் எந்த சத்தமும் கேட்காது. ஆனால் கதாநாயகனின் உலகம் இசையும், ஆர்ப்பாட்டமும் நிறைந்த சத்தமான உலகம். காது கேட்காத நாயகி, இசையுலகில் சாதிக்கும் நாயகன் இந்த ரெண்டு வெவ்வேறு உலகமும் எப்படி ஒன்றுசேரும், அதுஎப்படி நடக்க போகிறது என்ற கதைக்களத்துடன் கால்பதிக்க உள்ளது ‘பாரிஜாதம்’ என்ற புதிய நெடுந்தொடர்.
‘பாரிஜாதம்’ தொடரின் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் பிரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ளதாகவும், ஆனால் எப்போது, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜா ராணி மூலம் புகழ் பெற்ற ஆல்யா மானசா, 17 வயதில் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அவர் 2017-ம் ஆண்டு வெளியான ‘ஜூலியும் 4 பேரும்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
விஜய் டிவியில் நடன ரியாலிட்டி ஷோவான ‘மானாட மயிலாட’ சீசன் 10 மற்றும் ‘Ready Steady போ’ என்ற கேம் ஷோவில் தோன்றினார். தற்போது அவர் ‘சிங்கிள் பசங்க’ என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக வருகிறார். ஆல்யா மானசாவின் ஈர்க்கும் அழகு, வலுவான நடிப்பு மற்றும் உணர்ச்சிபூர்வமான கதைக்களத்துடன், ‘பாரிஜாதம்’ சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்வையாளர்களை ஈர்க்கத் தயாராக உள்ளது.