

மிருகங்கள் என்றால் யார்? ஒரு பொய்யைக் கதையாகச் சொல்லும் மனிதர்கள். சந்தர்ப்பங்கள் வரும் வரைதான் அவர்கள் மனிதர்கள். அனைவருக்கும் அவர்களுக்குத் தகுதியானவை கிடைப்பதில்லை; தங்களுக்குக் கிடைப்பதைக் காதலிக்கக் கற்றுக்கொள்கிறார்கள்; அதை வைத்து வாழப் பழகிக்கொள்கிறார்கள். சுயநலத்தால் ஆனவன்தான் மனிதன்.
இதுதான் ‘அனிமல்ஸ்’ படத்தின் அடிநாதம். பென் அஃப்லெக் இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்து நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள படம்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயராகப் போட்டியிடும் நாயகன் மார்க் கிம்பல், வெற்றிக்காகத் தன்னுடைய சொத்துகள், பணம் அனைத்தையும் செலவழிக்கிறார். ஆனாலும் போட்டியில் வெற்றிபெறச் சில புள்ளிகள் பின்தங்கிய நிலையில் இருக்கிறார். இவருக்கு ஒரு மகன். மனைவி கெர்ரி வாஷிங்டன் ஒரு உளவியலாளர் (Psychologist). இவருக்கு இன்னொரு நபருடன் தொடர்பு இருக்கிறது; இந்தத் தேர்தல் முடிந்த பிறகு விவாகரத்து கேட்கலாம் என்று நினைக்கிறார்.
ஒரு போட்டிக்காக மகன் அந்த வீட்டின் பணிப்பெண் மற்றும் அவருடைய மகனுடன் செல்கிறான். நாயகன் அன்று இரவு ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பேசவிருக்கிறார். இந்நிலையில் தான் இவருடைய ஒரே மகன் கடத்தப்படுகிறான். கடத்தியவன் ஏழு மில்லியன் டாலரைப் பணமாகக் கேட்கிறான். பணம் அனைத்தும் செலவாகிவிட்ட சூழலில், நாயகன் ஒரு பெண்ணிடம் அதைக் கடனாகக் கேட்கிறார். சமூகத்தில் பெரிய மனிதர்களிடம் தொடர்புள்ளவர் அந்தப் பெண். பணத்துக்காக எதையும் செய்யும் வலிமை கொண்டவர்; கிட்டத்தட்ட ஒரு பெண் தாதா. இவரிடம் பேசிவிட்டால் பணம் தயார். ஆனால், அதற்கு வட்டியாக 20 சதவீதம் தர வேண்டும். பணம் தேவைப்பட்டாலும் படாவிட்டாலும் இந்த வட்டியைக் கொடுத்தே ஆக வேண்டும்; அப்படியொரு நிபந்தனை.
அந்தப் பணம் கைமாறியதா? கடத்தியவர்கள் யார்? மகன் திரும்பி வந்தானா? தேர்தலில் ஜெயித்தாரா? ஆகிய அனைத்துக் கேள்விகளுக்கும் விடைதான் ‘அனிமல்ஸ்’.
மனித மனம் எவ்வளவு விசித்திரமானது! தனக்குத் தேவையானது கிடைத்ததும் எப்படி மாறுகிறது? ‘நமக்கு என்றால் ஒன்று, மற்றவர்களுக்கு என்றால் வேறு’ என்று நொடிப் பொழுதில் எப்படி மாற்ற முடிகிறது? தேர்தலில் போட்டியிடும் ஒருவருக்கு எப்படி ஒவ்வொரு செயலும் சந்தர்ப்பமாக மாறுகிறது? இதையெல்லாம் கண்முன்னே காட்டியிருக்கிறார்கள்.
ஒரு சண்டைக் காட்சி கிடையாது; சேஸிங் கிடையாது. ஆனாலும் ஏதோவொன்று நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பிலேயே படம் நகர்கிறது. அதிலும் பணம் கொடுக்கும் அந்தப் பெண்ணின் பாத்திரத்தில் நடித்துள்ள கில்லியன் ஆண்டர்சன், அதை வெகு லாவகமாகச் செய்துள்ளார். பாதிக்கப்பட்டது குடும்பம் மட்டுமே; அவர்கள் எடுக்கும் முடிவில் அவசரம் இருக்கும், ஆத்திரம் இருக்கும். எனவே, அதை நிதானமாகப் பேசிப் புரியவைப்பது, தன்னை ஏமாற்ற முடியாது என்று ஆணித்தரமாக வலியுறுத்துவது, சிரிக்காமல், முகபாவனையை மாற்றாமல் மிரட்டுவது எனத் தனது நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மனைவியைப் பற்றிய தகவல் தெரியவந்ததும் பென் நடந்துகொள்ளும் விதமும் இயல்பாக இருக்கிறது. “உன்னோடு தனியாக நான் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்னை அநாதையாகவே உணர்கிறேன்” என்று மனைவி சொன்னதும் அவர் காட்டும் அதிர்ச்சி நிஜம். ஆனால், மனைவியாக வரும் கெர்ரி வாஷிங்டனின் நடிப்பு சற்றே மிகையாகத் தெரிகிறது. சிக்கலில் மாட்டியிருக்கும் சிறுவனை மீட்க நாயகன் எடுக்கும் முடிவுகளும், இறுதியில் எதிர்பாராத திருப்பமாக ஒரு விஷயம் நடக்கும்போது அதைத் தனக்குச் சாதகமாக மாற்றுவதும் கச்சிதமாக அமைந்திருக்கின்றன.
இவ்வளவு பரபரப்பைக் கொண்டு வந்தவர்கள் ஒரு முக்கிய இடத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள். அதுதான் வில்லன்கள். அவர்கள் எதற்குக் கடத்துகிறார்கள்? ஒரு மேயர் வேட்பாளரின் மகனைக் கடத்தும்போது இப்படியா நடந்துகொள்வார்கள்? அவர்களின் உண்மையான நோக்கம் என்ன? மேயருக்குப் பாடம் புகட்டுவதா அல்லது பணம் மட்டும்தானா? இதற்கெல்லாம் சரியான விளக்கமே இல்லை. படத்தின் இறுதிக்காட்சி தான் (Climax) மிகப்பெரிய சறுக்கல் என்று சொல்ல வேண்டும்; ‘இதற்குத்தானா இவ்வளவு பாடு?’ என்று தான் தோன்றுகிறது.
இது ஒரு திரில்லர் திரைப்படம். ஒரே இரவில் நடக்கும் கதை. சண்டைக் காட்சிகள் இல்லை; வசனங்களால் மட்டுமே நம்மை உட்கார வைத்திருக்கிறார்கள். அரசியல் சார்ந்த நிகழ்வுகள் மெதுவாகப் போனாலும் பரவாயில்லை, திரைக்கதை நேர்த்தியாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். சண்டை, சேஸிங், அடிதடி, ரத்தக் களறிதான் எங்கள் தேர்வு என்பவர்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் ஒருமுறை பார்த்து வைக்கலாம்.
அனிமல்ஸ் படம் உளவியல் மற்றும் கதைக்களத்தின் தரம் குறித்த ஆழமான புரிதலை வாசகர் பெறுவார்.