விமர்சனம்: மோகினியாட்டம் - சிரிக்கச் சிரிக்க ஒரு மர்டர் மிஸ்டரி!

Bharathanatyam 2 Mohiniyattam
Bharathanatyam 2 Mohiniyattam
Updated on

சின்ன கிராமம். அதில் இரண்டு வீடுகள். பத்துக் கதாபாத்திரங்கள். இது போதும் மலையாளக் கதாசிரியர்களுக்கு. அந்தக் கதை திரில்லர் பாணியில் அமைந்தால் இன்னும் விசேஷம். அப்படியொரு படம் தான் பரதநாட்டியம் 2 மோகினியாட்டம் (Bharathanatyam 2 Mohiniyattam).

தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற எந்த நிலைக்கு அந்தக் குடும்பத் தலைவன் செல்வான் என்பது திரிஷியம். அப்படி ஒரு குடும்பமே நினைத்தால் அது தான் மோகினியாட்டம். தன்னுடைய அம்மா தம்பியுடன் வாழ்ந்து வருகிறார் சைஜூ குருப். ஒரு கட்டத்தில் தன்னுடைய தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருப்பது தெரிய வருகிறது. தந்தையின் மறைவுக்குப் பிறகு அந்தக் குடும்பமும் இணைந்து அந்திமக்காரியங்கள் செய்ய முடிவு செய்கிறார், அப்பொழுது கோவிந்தராஜ் (சூரஜ் வெஞ்சரமூடு) மூலம் தந்தை சாய் குமாரின் இன்னொரு முகம் தெரிய வருகிறது. மறைக்கப் பட வேண்டிய அந்த ரகசியத்துக்காக ஒரு காரியத்தைச் செய்யப் போய் அந்தக் குடும்பமே சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. அதிலிருந்து எப்படி வெளியில் வருகிறார்கள் என்பது தான் கதை.

இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் அதிலுள்ள நகைச்சுவை தான். பத்து நிமிடங்கள். இதன் மூலத்தை விளக்குவதற்கு எடுத்துக் கொள்கிறார்கள். பரதநாட்டியம் என்ற பெயரில் வந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளி வந்திருப்பதால் சில கதை மாந்தர்கள் நமக்குப் புரியாமல் போக முகாந்தரம் இருக்கிறது. அந்தப் படத்தை நானும் பார்க்கவில்லை. ஆனால் கொஞ்ச நேரத்தில் கதையுடன் ஒன்றிவிட முடிகிறது. அந்தக் குடும்பத்தில் ஒருவாராகப் பயணிக்கத் தொடங்குகிறோம். ஒரு தவற்றைச் செய்து விட்டு அதை மறைக்க இந்தக் குடும்பம் படும் பாடு பல இடங்களில் வாய் விட்டுச் சிரிக்க வைக்கிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஓர் இன்ஸ்பெக்டர் பாதிக்கப்பட்ட நபரின் மனைவியிடம் விசாரணை செய்யுமிடம், குடும்பமே ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் இடம், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு பொருளுக்குக் கடைசி நிமிடத்தில் ஒளித்து வைக்கச் செய்யப்படும் செயல் என்று பலவற்றைச் சொல்லலாம்.

கலா ரஞ்சனி, ஸ்ரீஜா ரவி, வினய் போர்ட், ஜகதீஷ் உள்படப் பலர் நடித்திருக்கிறார்கள். சூரஜ் வெஞ்சரமூடு சிறிது நேரமே வந்தாலும் படத்தின் உயிர் நாடியே அவர் தான். பார்ப்பவர்களை எல்லாம் ஏமாற்றுவது, மிரட்டுவது, மனைவியை அலட்சியப்படுத்துவது எனப் பிரமாதப்படுத்துகிறார். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர் பேசுவதில்லை. ஆனால் அவரைக் காட்டும் இடங்களில் எல்லாம் சிரிப்பு பலமாக வருகிறது.

சைஜூ குருப் இந்தப் படத்தைத் தயாரித்து நாயகனாகவும் நடித்திருக்கிறார். நல்லவர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய அப்பா பரதன் (சாய்குமார்) செய்த சில பித்தலாட்டங்கள் தெரிந்து மொத்தக் குடும்பமும் விழிப்பது நல்ல நகைச்சுவை. அவருடைய முட்டைக் கண்கள் அவருக்கு பலம். தவறே என்றாலும் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியில் முடிவது. கடைசியாக அந்த ஒரு தவற்றில் ஒவ்வொருவராகப் பலரைச் சிக்க வைப்பது அவர்கள் மூலம் காரியத்தைச் சாதித்துக் கொள்வது என்று நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை.

இதையும் படியுங்கள்:
சட்டென்று மாறுது வானிலை திரைவிமர்சனம்!
Bharathanatyam 2 Mohiniyattam

திருஷ்யம் படத்தின் புகழ் பாட எடுக்கப்பட்ட படம் போலத் தோன்றினாலும் அதைப் பல இடங்களில் சுவாரசியமாகப் பயன்படுத்தியுள்ளது ஸ்மார்ட்டான செயல். லாஜீக் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. படத்தில் வரும் எல்லாப் பாத்திரங்களும் ஒரு மாதிரியானவை என்பதால் யார் மீதும் பரிதாபமோ கோபமோ வருவதில்லை.

ஒரே வீடு, வீதி என்று சுற்றி வருவதால் புதிதாகச் சம்பவங்கள் என்று எதையும் யோசிக்கவில்லை இயக்குநர் கிருஷ்ணதாஸ் முரளி. படத்தின் பின்னணி இசை மூடுக்கு ஏற்றவாறு நச்சென்று அமைந்திருக்கிறது. சிரிக்கச் சிரிக்கச் சொன்னாலும் ஒரு குற்றம் செய்து விட்டு அதிலிருந்துதப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பது அதைச் செயல்படுத்துவது போன்ற கதைகள் தவறான முன்னுதாரணங்கள். இப்படியும் செய்யலாமோ என்று மக்கள் நினைத்து விடக்கூடாது.

நல்ல மர்டர் மிஸ்டரி படங்கள் பிடிக்கும். நகைச்சுவை என்றால் இன்னும் சூப்பர் என்று நினைக்கும் ரசிகர்களுக்குக் நெட் பிளிக்ஸில் வெளியாகியுள்ள இந்தப்படம்க ண்டிப்பாகப் பிடிக்கும். கதை அது இது என்றெல்லாம் யோசிக்காமல் இரண்டரை மணி நேரச் சிரிப்புக்கு நான் உத்தரவாதம் என்று சொல்லியடித்ததில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார். 

logo
Kalki Online
kalkionline.com