

நடிகர் ஜெய் முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகர். ஜெய் முதல்வர் மீது உள்ள அன்பை காட்டும் விதமாக தனது நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள 'சட்டென்று மாறுது வானிலை ' படத்தின் ப்ரோமோஷன் களில் ' தளபதி தம்பி கம்மிங் ' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். இனி சட்டென்று மாறுது வானிலை படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். இப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து மீனாட்சி கோவிந்தராஜன், கருடா ராம், யோகி பாபு நடித்துள்ளார்கள். பாபு விஜய் இப்படத்தை இயக்கி உள்ளார்.
ஆதரவற்றவரான ஜெய் ஒரு ஐ டி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அமைச்சர் மகளான மீனாட்சி கோவிந்தராஜனை முதல் நாள் சந்தித்து மூன்றாம் நாள் திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் தேனிலவுக்கு கொடைக்கானல் செல்கிறார்கள். அங்கே இவர்கள் தங்கியுள்ள விடுதியின் உரிமையாளர் கருடா ராம் சில மர்மமான விஷயங்களை செய்கிறார். ஒரு சில நாட்கள் சென்ற பின்பு ஜெய்க்கு வேலை பறி போய் விடுகிறது. மீனாட்சியின் அமைச்சர் அப்பா தன் மகளுக்கு வேறொருவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். ஒரு பணக்கார இளைஞன் மீனாட்சியை ஒரு தலையாக காதலித்து சில விரும்பத்தகாத விஷயங்களை செய்கிறார். இந்த பிரச்சனைகள் எப்படி தீர்ந்தது என்று சொல்கிறது படம்.
இந்த நான்கு கதைகளும் சொல்லிய விதத்தில் குழப்பத்தை தர வில்லை. இருந்தாலும் நான்கு கதைகளில் கருடா ராம் வரும் பகுதி மட்டுமே சுவாரஸ்யம் இருக்கிறது. மற்ற மூன்று கதைகள் சொல்லப்பட்ட விதத்தில் ஆழமான திரைக்கதை மிஸ்ஸிங். ஜெய் நன்றாகவே நடித்துள்ளார். காதலி தன்னை நம்பவில்லை எனும் போதும், ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். இருந்தாலும் நடிப்பில் சில இடங்களில் விஜய்யை இமிடேட் செய்வதை தவிர்த்து இருக்கலாம். மீனாட்சி கோவிந்தராஜன் அன்புக்கு ஏங்கும் இடத்தில் நன்றாக நடித்துள்ளார். யோகிபாபு வில்லத்தனம் செய்ய முயற்சி செய்துள்ளார்.ஆனால் ஒர்க் அவுட் ஆகவில்லை. கருடா ராம் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். அதிக முக பாவனைகள் இல்லாமல் குரலின் ஏற்ற இறக்கத்தில் டெரர் காட்டுகிறார் மனிதர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்கள் ஓரளவு ரசிக்கும்படி உள்ளது.
லாஜிக் மீறல்கள், வலுவில்லாத திரைக்கதை போன்ற நெகட்டிவ் அம்சங்கள் படத்தில் இருந்தாலும், மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்லும் இடத்தில் நாம் தங்கும் விடுதிகளில் உள்ள ஆபத்துகளை பற்றி விழிப்புணர்வு தந்ததற்காக இப்படத்தை பாராட்டலாம். 'சட்டென்று மாறுது வானிலை- ' தலைப்பு கவித்துவம், திரைக்கதை பலவீனம்.