

இந்தியாவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ், செப்டம்பர் 2026 முதல் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் , வங்காளம் ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு சின்னத்திரை மற்றும் ஒடிடி தளங்களில் வெளியாக உள்ளது . இந்தியாவில் 20 ஆண்டுகால வரலாறு கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
2025-ஆம் ஆண்டில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு 50 கோடி பார்வையாளர்கள் இருந்தனர், என்று அதன் தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஹாட்ஸ்டார் தெரிவித்துள்ளது. எப்போதும் சர்ச்சையை கிளப்பி பரபரப்புகளை உண்டாக்கும் இந்த நிகழ்ச்சி அதிக மக்களின் ஈர்த்துள்ளது. ஒவ்வொரு மொழியிலும் அதிக மக்கள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இது சாதனை படைத்து வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அந்த மாநிலத்தின் புகழ்பெற்ற ஒரு நடிகர் தொகுத்து வழங்குவார். இதன்படி தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். தெலுங்கில் நாகார்ஜுனாவும் , கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் , மலையாளத்தில் மோகன்லாலும் , ஹிந்தியில் சல்மான் கானும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பிக் பாஸ் பங்கேற்பாளர்களுடன் காரசாரமாக உரையாடுவதும், ஒரு சில நேரங்களில் கடுமை காட்டுவதும், அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதும், அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களுக்கு பாராட்டுவதும் செய்து ரசிகர்களை கவர்கின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பிக் பாஸை தொகுத்து வழங்கும்போது, வங்கமொழியில் மட்டும் புகழ்பெற்ற சினிமா நடிகர் தொகுத்து வழங்காமல், பிரபலமான முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி தொகுத்து வழங்க உள்ளார் என்பது பலருக்கும் ஆச்சரியமூட்டும் செய்தியாக இருக்கிறது.
எல்லா மாநிலங்களிலும் நடிகர்களை தொகுப்பாளர்களாக சேர்த்துள்ள பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம், மேற்கு வங்கத்தில் மட்டும் எதற்காக ஒரு கிரிக்கெட்டரை தொகுப்பாளராக நியமித்துள்ளது? என்ற கேள்வி மற்ற மாநில ரசிகர்களுக்கு எழலாம். ஆனால் இது போன்ற கேள்விகள் வங்க மொழி பேசும் மக்களுக்குள் ஏற்படப்போவதில்லை.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சினிமா நடிகர்கள் அதிக புகழ் பெற்றிருந்தாலும், மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி நீண்ட காலம் செல்வாக்கு மிக்க பிரபலமாக அங்கு இருக்கிறார். அதே மாநிலத்தில் புகழ்பெற்ற நடிகராக மிதுன் சக்கரவர்த்தி இருந்தாலும் , அவர் பெரும்பாலும் ஹிந்தி திரைப்படங்களின் வழியாகத்தான் அதிக புகழைப் பெற்றார். அந்த மாநிலத்தில் சினிமாத்துறை மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கவில்லை. வங்க மொழி பேசும் மக்கள் தொகை மிக அதிகமாக இருந்தாலும் கூட, அங்கு சினிமாக்களின் வசூல் மிகவும் சொற்பமாகவே இருந்து வருகிறது.
அதே நேரம் சௌரவ் கங்குலிக்கு மிகப்பெரிய செல்வாக்கு அந்த மண்ணில் உள்ளது. மேற்கு வங்கத்தின் தேசிய முகமாக மக்கள் அவரை கருதுகின்றனர். அவருக்குள்ள அபார செல்வாக்கை கண்டு பல்வேறு கட்சிகள் அவரை இழுக்க முயன்றும், அவர் அரசியலை விட்டு ஒதுங்கியே காணப்படுகிறார். ஆனாலும் , சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பொதுவாக கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான வீரராக செயல்பட்ட கங்குலி , பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவ்வாறு செயல்படுவார்? என்பதைக் காண வங்காள ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.