

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் நாடு முழுக்க ஏராளமான மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி, மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை தனக்கென்று வைத்துள்ளது. ஆரம்ப காலத்தில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். அவர் அரசியலுக்கு சென்ற பின்னர் தற்காலிகமாக சிறிது காலம் சிலம்பரசன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது அந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தமிழில் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்திய அளவில் ஒவ்வொரு மொழியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அந்த மாநிலத்தில் புகழ்பெற்ற நடிகர் ஒருவர் தொகுத்து வழங்குவார். ஆனால், வங்காள மொழியில் மட்டும் இதற்கு மாறாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலி தொகுத்து வழங்குகிறார். மிகப்பெரிய அளவில் டிஆர்பி ரேட்டிங்கை இந்த நிகழ்ச்சி கொண்டிருப்பதால் அதற்கான வருவாயும் அதிகமாக உள்ளது.
இந்திய அளவில் அதிக மக்களை ஈர்த்துள்ள ரியாலிட்டி ஷோவாக பிக் பாஸ் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் தொடங்கப்படும் போது மற்ற சேனல்களின் நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்கள் பெருமளவு குறைந்து போய் உள்ளனர். என்னதான் அதிக ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு இருந்தாலும் இதன் மீது மிகக் கடுமையான விமர்சனமும் வந்து கொண்டுதான் உள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனிநபர்கள் பலரும் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், என்று பலமுறை குரல் எழுப்பி உள்ளனர். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ச்சியாக ரசிகர்கள் ஆதரவுடன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டுதான் உள்ளது.
அதிக பரபரப்பு மிக்க இந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை , தொகுத்து வழங்குவதற்கு பிரபலமான நடிகர்களே நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் சம்பவங்களை விசாரணை செய்து அதன் பரபரப்பை மேலும் அதிகமாக்குகின்றனர். இதற்காக இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் கோடிகளில் சம்பளம் தரப்படுகிறது.
ஒரு சில ஊடகங்களில் வெளியான தகவல்களை அடிப்படையில் , பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சம்பளம் வெளியிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சம்பளத்தை பொருத்தவரையில் , ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானிற்கு இந்தியாவிலேயே மிகப்பெரிய சம்பளம் தரப்பட்டுள்ளது. ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஒரு தொடருக்கு சல்மான்கான் ₹200 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.
சல்மான் கானுக்கு அடுத்த இடத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பெங்காலி பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளருமான சௌரவ் கங்குலி உள்ளார். இவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு ₹125 கோடி வரை ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது.மூன்றாவது இடத்தில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி இருக்கிறார். இவர் ஒரு பிக் பாஸ் தொடரை தொகுத்து வழங்க ₹80 கோடி வரை ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தெலுங்கு மொழியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனா ₹35 கோடி வரை சம்பளம் பெறுகிறார். மலையாளத்தில் பிக் பாஸ் தொகுத்து வழங்கும் மோகன் லாலும் இதே அளவு சம்பளத்தை பெறுகிறார். இந்த பட்டியலில் இறுதியாக கன்னட மொழியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தும் கிச்சா சுதீப் இருக்கிறார், இவருக்கு ₹20 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களின் சம்பளம் அவர்களின் மார்க்கெட் நிலையை வைத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.