
கலைத்துறையில் சாதிக்கும் பல்வேறு கலைஞர்களுக்கு இயல், இசை மற்றும் நாடக மன்றத்தின் மூலம் தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கலைமாமணி விருதுகள் உள்பட பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரஸ்வதி ஆகியோரின் பெயர்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதன்படி 2021, 2022 மற்றும் 2023 ஆகிய 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி, பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரஸ்வதி உள்ளிட்ட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்கவுள்ளார்.
இயல், இசை மற்றும் நாடக மன்றத்திற்கு கலைமாமணி விருதுகள் வழங்க வேண்டுமென பல்வேறு விண்ணப்பங்கள் வரப் பெற்றன. விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து தகுதியான கலைஞர்களைத் தேர்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இதில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களின் பட்டியலுக்கு இயல், இசை மற்றும் நாடக மன்றம் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இன்று விருதுக்குத் தேர்வானவர்களின் பெயரை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் கலைமாமணி விருது பெறுவோருக்கு 3 பவுன் தங்கப் பதக்கமும், பட்டயம் மற்றும் விருது அளிக்கப்படும்.
தமிழ் சினிமாத் துறையைப் பொறுத்தவரை நடிகர்கள் விக்ரம் பிரபு, எஸ்ஜே சூர்யா மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது. இதுதவிர நடிகை சாய் பல்லவி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.
சிறப்பு விருது பெறுவோரின் பட்டியல்:
பாரதியார் விருது (இயல் துறை) - முருகேச பாண்டியன்
எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசைத் துறை)- கே.ஜே.யேசுதாஸ்
பாலசரஸ்வதி விருது (நாட்டியத் துறை)- பத்மஸ்ரீ முத்து கண்ணம்மாள்
சிறந்த கலை நிறுவனம் - தமிழ் இசைச் சங்கம், சென்னை. (இராஜா அண்ணாமவை மன்றம்).
சிறந்த நாடக்குழ - கலைமாமணி எம்.ஆர்.முத்துசாமி நினைவு நாடக மன்றம், மதுரை.