
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் அர்ஜுன் தாஸ். 2012-ம் ஆண்டு பெருமான் என்கிற திரைப்படத்தில் அறிமுகமான இவர், அதன் பின் ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு பெயர் சொல்லும் படியாக அமையவில்லை. அதனை தொடர்ந்து அவர் ரேடியோ ஒன் 94.3 எஃப்எம் உடன் இணைந்து டிரைவ் எனும் வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
பின்னர் 2019-ம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் தான் தமிழ் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ‘மாஸ்டர்', ‘விக்ரம்' போன்ற படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாக படங்கள் நடித்து வருகிறார். இந்தாண்டு வெளிவந்த குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘பாம்' படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
அர்ஜுன் தாஸ் தற்போது பவன் கல்யாண் நடிப்பில் நாளை (செப்டம்பர் 25-ம்தேதி) வெளியாகவுள்ள ‘ஓஜி’ படத்திலும் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபு சாலமனின் ‘கும்கி-2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அவரது தனித்துவமான குரல், தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் தனித்துவமான நடிப்பு பாணி காரணமாக, இன்று யாராலும் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் தனது ஆழமான, கம்பீரமான பேஸ் கொண்ட குரலால் ரசிகர்களை வசீகரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வலுவான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள அர்ஜுன் தாஸ், விரைவில் பாலிவுட்டிலும் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட் நடிகரும் இயக்குனருமான ஃபர்ஹான் அக்தர் இயக்கப்போகும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'டான் 3', முக்கிய வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸுடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.
‘டான் 3’ படத்தில், அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோரைத் தொடர்ந்து, ரன்வீர் சிங் மூன்றாம் பாகத்தில் ‘டான்’ வேடத்தில் நடிக்கிறார்.
முதல் இரண்டு ‘டான்’ படங்களுமே பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு, மாபெரும் வரவேற்பைப் பெற்றன.
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ஸ்டண்ட் குழுக்கள் ‘டான் 3’ படத்துடன் இணைந்துள்ளதாகவும், ஜேம்ஸ் பாண்ட் படங்களில் காணப்படும் சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் போல் ‘டான் 3’ படத்திலும் புதிய ஆக்ஷன் உலகத்தை கொண்டு வருவதே இதன் நோக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'டான் 3' படத்தில் ரன்வீர் சிங்கிற்கு வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்கும் பட்சத்தில் அவரது தனித்துவமான குரல் மற்றும் தீவிரமான நடிப்பு, இப்படத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாலிவுட்டில் நடிகர் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நடிகர்கள் பாலிவுட்டில் வெற்றி பெறுவது புதிய விஷயம் அல்ல. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபுதேவா, மாதவன், டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா, தனுஷ், சமீபத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் அனைவரும் தங்கள் தடத்தை பதித்துள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் இணைய உள்ளர் அர்ஜுன் தாஸ்.