
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் தமிழ்‘ தனது 9-வது சீசனை நேற்று (5-ம்தேதி) மாலை 6:30 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கியது. தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் 'பிக்பாஸ்' என்ற 'ரியாலிட்டி ஷோ' நடத்தப்பட்டு வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோவில் எப்போதும் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கும் டிராமா, உணர்ச்சிகள், சண்டை, பாசம், சர்ச்சைகளால் நிரம்பியதாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அமைதியான ஸ்டைல், கூர்மையான கேள்விகள் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது என்றே சொல்லலாம். கடந்த சீசன்களை ஒப்பிடும் போது இந்த சீசனின் போட்டியாளர்கள் இடையே புதுப்புது ட்விஸ்ட்கள், சவால்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. விஜய் டிவியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, ஜியோ ஹாட்ஸ்டாரில் 24/7 லைவ் ஸ்ட்ரீமிங் உண்டு.
2017-ம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் தொடங்கியதிலிருந்து, கடந்த 7 ஆண்டுகளாக கமல் ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். 7-வது சீசனுடன் கமல்ஹாசன் விலகியநிலையில், 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது 9-வது சீசன் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே பலவிதமான எதிர்பார்ப்புகளை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் இந்த சீசனில் எப்போது இல்லாத வகையில் அதிகளவு யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பிற்கும், சர்ச்சைகளுக்கும் பட்சம் இருக்காது என்றே சொல்லலாம்.
‘பிக் பாஸ் தமிழ்‘ தனது 9-வது சீசனில் கலந்து கொள்ளும் 20 போட்டியாளர்கள் பற்றிய முழு விவரமும் தற்போது வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
* இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக களம் இறங்கிய வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், சமூக வலைதளங்களில் பிரபலமானவர். இவர் பிசியோதெரபி மருத்துவர்.
* விக்கல்ஸ் விக்ரம் - விக்கல்ஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் பல காமெடி வீடியோக்களைப் பதிவிட்டு வருபவர்.
* சுபிக்ஷாபிக் - மீனவ சமுதாய பிரச்னைகளை வெளி உலகிற்குக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் யூடியூபரானார்.
* பார்வதி - யூடியூப் சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான இவர், தற்போது சின்ன திரையிலும் பிரபலமாகி வருகிறார்.
* அரோரா சின்க்ளேர் - மாடலிங் மற்றும் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
* ராப் மற்றும் பீட் பாக்ஸ் கலைஞர் எப்.ஜே
* கானா - சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கானா இசை கலைஞர்
* துசார் - நடிகனாக வேண்டும் என்ற கனவில், வாய்ப்புகளுக்காக முயற்சித்து வருகிறார்.
* கனி - இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றியாளர். சில படங்களிலும் நடித்துள்ளார்.
* சபரி - விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலைக்காரன், பொன்னி தொடரில் நடித்தவர்.
* ஆதிரை- பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
* பிரவீன் காந்தி- ரட்சகன், ஜோடி, நட்சத்திரம், துள்ளல் ஆகிய படங்களின் இயக்குநர்.
* பிரவீன்- சீரியல் நடிகராக இவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் அதற்கு தயாராகி வருகிறார்.
* கெமி - கூடைப்பந்தாட்ட வீராங்கனையான இவர் இந்தியாவுக்காக வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். குக் வித் கோமாளி சீசனில் பங்கேற்றுள்ளார்.
* கம்ருதின்- சீரியல் தொடர்களில் நடித்து வரும் இவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் அதற்கு தயாராகி வருகிறார்.
* ரம்யா ஜோ - மைசூரைச் சேர்ந்த நடனக் கலைஞர்.
* வியானா - மாடலிங் மற்றும் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ள இவர் நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
* அப்சரா- மாடலிங் துறையில் அசத்தி வரும் திருநங்கையான அப்சரா, தாய்லாந்தில் இந்தியா சார்பாக மிஸ் இன்டர்நேஷ்னல் குயின் பட்டம் வென்றவர்.
* நந்தினி- உடற்பயிற்சியையும் யோகாவையும் வாழ்வில் மிக முக்கியமாகக் கருதும் இவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
* கலையரசன்- இளம் வயதிலேயே குடும்ப வாழ்வின் கடினமான சூழலால் காசிக்குச் சென்று அகோரியானார்.
அகோரி கலையரசன், வாட்டர் மெலன் ஸ்டார், பலூன் அக்கா அரோரா சின்க்ளேர் இவர்கள் எல்லாம் யூடியூப்பில் பல சர்ச்சையான வீடியோக்களை பதிவிட்டு சிக்கலில் சிக்கியவர்கள். இப்படி சர்ச்சையானவர்களை இந்த சீசனில் போட்டியாளராக களமிறக்கி உள்ளதால், இவர்களை தவிர்த்து விஜய் டிவிக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா என்று விளாசிய ரசிகர்கள் இவர் வீட்டிற்குள் எப்படியெல்லாம் கூத்து அடிக்கப்போகிறாரோ என்று பேசி வருகிறார்கள்.
இந்த போட்டியாளர்களை பார்க்கும் போது எந்த சீசனிலும் இல்லாத சர்ச்சைகள் இந்த சீசனில் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 100 நாட்கள் நடக்கும் இந்த சீசனில் போட்டிகள், சண்டைகள், சர்ச்சைகள் என ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்ல வேண்டும்.