விலங்குகளைப் போல் நடத்துவதா? பிக் பாஸ் காமன்மேன் முதல் எபிசோடிலேயே வெடித்த சர்ச்சை!

"டி.ஆர்.பி-க்காக வதைப்பதா?": போட்டியாளர்கள் முண்டியடித்து மோதிய வீடியோ வைரல்; பிக் பாஸ் குழுவுக்குக் கண்டனம்!
Bigg Boss common man
Bigg Boss common mansource:jiohotstar
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் முதன்முறையாக சாமானிய ரசிகர்களையும் போட்டியாளர்களாக களம் இறக்கும் முயற்சி தொடங்கியுள்ளது. இதற்கான தேர்வு நிகழ்ச்சியில் நாற்காலி டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் முண்டியடித்து மோதிக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் எபிசோடிலேயே சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் காமன்மேன். இதெல்லாம் ஒரு டாஸ்கா என்று திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள். கடுப்பாகிப் போன ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். டி.ஆர்.பி-க்காக சாமானிய மக்களை பிக் பாஸ் குழுவினர் வதைப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு முன்பு நடத்தப்பட்டு வரும் காமன்மேன் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில் அதன் முதல் டாஸ்கே சர்ச்சையில் சிக்கி உள்ளது. விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 9 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 10வது சீசனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இம்முறை இந்த நிகழ்ச்சியில் புதுமையான முயற்சியாக பொதுமக்களும் போட்டியாளராகும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

சீசன் 10ல் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களைப் பற்றி இரண்டு நிமிட வீடியோவை அனுப்பி ஆடிஷனில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் தேர்வான நபர்களில் தகுதியானவர்களை இறுதியாக தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த தேர்வு நிகழ்ச்சியில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களான ராஜு, ஓவியா மற்றும் ஆரி போன்றவர்கள் நடுவர்களாக இடம்பெற்றுள்ளனர். நிகழ்ச்சியை மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.

பங்கேற்பாளர்கள் தங்களுடைய உடல் திறன்கள், மனவலிமை, முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆளுமை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் வடிவமைக்கபட்ட தொடர்ச்சியான பணிகளை எதிர்கொள்வார்கள். அவர்களுடைய செயல்பாடுகளே பிரதான சீசனில் பெரிதும் வரும்பப்படும் இடத்தை பெறுவதற்கு தீர்மானிக்கும். இந்த பணிகள் போட்டியாளர்களுடைய உடல் மற்றும் மன திறன்களை சோதிக்கும் அதே வேளையில் அவர்களுடைய ஆளுமையும், பொழுதுபோக்கு மதிப்பும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முதல் எபிசோடிலேயே சர்ச்சையில் சிக்கி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் தமிழ் சீசன் 10-க்கானா சாமானியர்களின் முன்-தேர்வு நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் வழங்கப்பட்ட நாற்காலி மற்றும் பஸ் ஏறும் டாஸ்க்குகள் பங்கேற்பாளர்களை அவமதிக்கும் வகையில் உடல் ரீதியாக வதைப்பதாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலானா இருக்கைகள் கொண்ட பேருந்துக்குள் ஏறுவதற்காக போட்டியாளர்கள் காட்டிய வேகம், பெரும் தள்ளுமுள்ளாகவும், மோதலாகவும் மாறியது. நாற்காலியை பிடிப்பதற்கும், பேருந்தில் முண்டியடித்து ஏறுவதற்கும் கொடுக்கப்பட்ட கடினமான உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுகள் குரங்கு வித்தைகளைப் போல இருப்பதாக பார்வையாளர்கள் விமர்சித்துள்ளனர். "இதெல்லாம் ஒரு டாஸ்கா?" என்று நெட்டிசன்கள் முதல் எபிசோடிலேயே இந்நிகழ்ச்சியின் வடிவமைப்புக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

Bigg Boss common man
Bigg Boss common man

ஓவியா, ஆரி அர்ஜுனன் மற்றும் ராஜு ஜெயமோகன் போன்ற நடுவர்கள் பங்கேற்பாளர்களின் திறமைகளை மதிப்பிட்டாலும், ஆரம்ப கட்ட சவால்கள் எதிர்பார்த்ததை விட ஆபத்தானதாகவும் முகம் சுளிக்கும் வகையிலும் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

காமன்மேன் தேர்வு நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள ஒரு டாஸ்க் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஒரு அரங்கில் ஏராளமான போட்டியாளர்கள் நிற்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு முன்பாக பல பிளாஸ்டிக் சேர்கள் தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. பஸர் ஒலித்ததும் போட்டியாளர்கள் வேகமாக சேர்களை நிமிர்த்தி சரி செய்து அதில் அமர வேண்டும் என்பதுதான் டாஸ்க். பஸர் ஒலித்ததும் போட்டியாளர்கள் சேர்களை நோக்கி ஓடி, ஒரு நாற்காலியை பிடிப்பதற்கு பலரும் போட்டி போடுவது, கடுமையான தள்ளுமுள்ளு என்று பார்க்கவே முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. கடுமையான தள்ளுமுள்ளு காரணமாக ஒருவரை ஒருவர் தள்ளியும், முட்டியும், கீழே விழுந்தும் நாற்காலியைப் பிடிக்க முயற்சிக்கின்றனர். இந்த காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ வெளியானதிலிருந்து, பொழுதுபோக்கிற்காக மனிதர்களை இப்படி விலங்கு போல் நடத்தலாமா என்று பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும், கீழே தள்ளிவிட்டும் ரணகளமாக காட்சி தரும் வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பிக்பாஸ் குழுவினரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

எழுந்துள்ள சர்ச்சைக்கு பிக்பாஸ் குழுவினர் தரப்பிலிருந்து விளக்கம் ஏதேனும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. புதிய முயற்சியான பிக்பாஸ் காமன்மேன் சீசன் 10 தொடங்குவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி தங்கம் வாங்குபவரா நீங்கள்? சேதாரம் என்ற பெயரில் நடக்கும் தந்திரங்கள் பற்றி தெரியுமா..?
Bigg Boss common man
logo
Kalki Online
kalkionline.com