

தங்க நகைகளில் "தரம் அதிகம், விலை குறைவு" என்பது பெரும்பாலும் விளம்பர உத்தியாகவும், சில நேரங்களில் குறைந்த சேதாரம், நேரடி உற்பத்தி விற்பனை அல்லது குறைந்த காரட் (Karat) பயன்பாடு போன்ற வணிக முறைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 'தரம் அதிகம், விலை குறைவு' என்பது சந்தைப்படுத்தலில் (Marketing) வாடிக்கையாளர்களை ஈர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு வணிக உத்தியாகும். தங்கத்தின் அடிப்படைச் சந்தை விலை எங்கும் ஒன்றாகவே இருக்கும் என்றாலும், இந்த வாசகத்திற்கான காரணங்கள் பலவகைப்படும்.
‘தரம் அதிகம், விலை குறைவு’ என்ற விளம்பரம் வெளியாகும் நிலையில், மற்ற நகை கடைகளில் விற்கப்படும், தங்க நகைகளின் தரம் குறைவானதா என்ற கேள்வி எழுகிறது.
பொதுவாகத் தங்க நகைகள் அல்லது இதர பொருட்களில் இத்தகைய விளம்பரங்கள் வரும்போது, மற்ற கடைகளைக் காட்டிலும் தங்களுடைய சேதாரக் குறைவு, நேரடி உற்பத்தி, அல்லது லாப விளிம்பைக் குறைத்தல் போன்ற காரணங்களால் விலையைக் குறைக்க முடியும் என்று நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தங்கத்தின் மீதான மோகம் எக்காலத்திலும் குறைவதில்லை. ஆனால், சமீபகாலமாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகும் நகைக்கடைகளின் அதிரடி விளம்பரங்கள் நுகர்வோர் மத்தியில் பெரும் குழப்பத்தையும், பல நியாயமான கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
தங்க நகைகளுக்கான தரநிலைகளை அரசு நிர்ணயித்துள்ள நிலையில், நிறுவனங்களுக்கு இடையே தரம் மற்றும் சேதாரத்தில் இவ்வளவு வித்தியாசம் எப்படி இருக்க முடியும்?
"தரம் அதிகம், விலை குறைவு" என்று போட்டிப் போட்டுக்கொண்டு வெளியாகும் விளம்பரங்களைப் பார்க்கும் போது, சாமானிய மக்களின் மனதில், பல்வேறு கேள்வி எழுகிறது.
தரமும் விளம்பரமும்:
இந்தியாவில் விற்கப்படும் தங்க நகைகளுக்கு பி.ஐ.எஸ் ஹால்மார்க் (BIS Hallmark) எனப்படும் அரசு நிர்ணயித்த தரநிலைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டும் தங்களுடைய நகைகள் 'அதிக தரம்' வாய்ந்தது என விளம்பரப்படுத்துவது எப்படி? அப்படியானால் மற்ற கடைகளில் விற்கப்படும் 916 நகைகளின் தரம் குறைவானதா? என்ற சந்தேகம் சாமானிய மக்களுக்கு எழுகிறது.
அரசு ஒரே தரத்தை நிர்ணயித்துள்ள நிலையில், நிறுவனங்களுக்கு இடையே தரத்தில் எப்படி வித்தியாசம் இருக்க முடியும்.
கடைக்கு கடை மாறும் 'சேதாரம்' (Wastage) :
தங்க நகை வாங்கும் போது மக்களை அதிகம் பாதிக்கும் வார்த்தை 'சேதாரம்'.ஒரே எடை, ஒரே வடிவமைப்பு கொண்ட தங்க நகைக்கு ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விதமான சேதாரம் வசூலிக்கப்படுகிறது. சில கடைகளில் 10%, சிலவற்றில் 20% அல்லது 30%, சில முன்னணி கடைகளில் 35% வரை கூட சேதாரம் வசூலிக்கப்படுகிறது.
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான நகைகள் நவீன இயந்திரங்கள் மூலமே துல்லியமாக வடிவமைக்கப்படுகின்றன. அப்படியிருக்கையில் சேதாரம் என்ற பெயரில் நம்மிடமிருந்து ஆயிரக்கணக்கான ரூபாயை கடைக்காரர்கள் மனம்போன போக்கில் வசூலிப்பது வெளிப்படையான பகல் கொள்ளை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதிப்பை குறைப்பது :
பொதுவாக நாம் தங்க நகையை வாங்கும் போது அதற்கு சேதாரம், செய்கூலி, ஜிஎஸ்டி என அனைத்தையும் சேர்த்து பெரிய தொகையை செலுத்துகிறோம்.
ஆனால், அவசரத் தேவைக்காக அதே நகையை மீண்டும் அதே கடையில் விற்கச் சென்றாலோ அல்லது மாற்றிப் புதிய நகை வாங்கச் சென்றாலோ, வாங்கும் போது வசூலித்த சேதாரத் தொகையை கழித்துவிட்டு, வெறும் தங்கத்தின் எடைக்கு மட்டுமே (அதிலும் சில கழிவுகள் போக) விலை நிர்ணயம் செய்கின்றனர்.
சேதாரம் என்ற பெயரில் கூடுதல் தொகையை முதலில் வசூலித்து விட்டு, மீண்டும் நகை வாங்கும் போது அந்த நகையின் மதிப்பை அதலபாதாளத்திற்கு குறைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்ற கேள்வி எழுகிறது.
அரசின் தலையீடு?
தங்கம் என்பது இந்திய மக்களை பொறுத்தவரை வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, அது அவர்களின் பாரம்பரியம் மற்றும் எதிர்காலச் சேமிப்பு. எனவே, இதில் நடக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
* ஹால்மார்க் முத்திரை தவிர்த்து, தரத்தை (Quality) வைத்து மக்களை குழப்பும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்.
* நகைகளின் வடிவமைப்பிற்கு ஏற்ப, அதிகபட்ச சேதாரம் (Wastage) இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்ற வரம்பை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.
* விற்கும்போதும், வாங்கும்போதும் நுகர்வோர் பாதிக்கப்படாதவாறு ஒரு சீரான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
"ஒரே நாடு, ஒரே வரி" என்று கொண்டு வந்த அரசு, தங்க நகைகள் விற்பனையிலும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பொதுவான ஒரு விதிமுறையை அமல்படுத்த வேண்டும் என்பது தான் சாமானிய மக்களின் கோரிக்கையாக உள்ளது.