
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் அமோக ஆதரவு உண்டு. இதுவரை தமிழில் 8 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது வெளியாக உள்ள பிக் பாஸ் 9-வது சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்தியில் பிக் பாஸ் 19-வது சீசனில் கடந்த மாதம் தொடங்கிய நிலையில், தமிழில் பிக் பாஸ் சீசன் 9 செப்டம்பர் மாதத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக் பிரதர் என்கிற நிகழ்ச்சியைதான், இந்தியாவில் பிக் பாஸ் என்கிற பெயரில் பல மொழிகளில் நடத்தி வருகின்றனர்.
இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியில் சல்மான் கானும், மலையாளத்தில் மோகன் லாலும், கன்னடத்தில் சுதீப்பும், தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ் பிக் பாஸ் முதல் சீசன் தொடங்கியதில் இருந்து ஏழாவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்தாண்டு நடந்த 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் 8-வது சீசனில் முத்துக்குமாரன் டைட்டிலை வென்றார்.
திரையில் பார்த்து நாம் வியந்த பிரபலங்கள் போட்டியாளர்களாக களம் இறங்கும் இந்த நிகழ்ச்சியல் 100 நாட்கள் ஒரே வீட்டில் வெளி உலக தொடர்பிலிருந்து முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிகழ்ச்சியின் முதல் விதிமுறை.
சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 9 செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என பிக் பாஸ் குழு அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தது. இதற்கிடையில், விஜய் டிவி நேற்று மாலை 6 மணியளவில் 9வது சீசனில் டீசரை (புதிய லோகோ) வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதிய லோகோவில் விஜய் சேதுபதி சேரில் அமர்ந்திருப்பது போல் புதிய பரிமாணத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே, மீண்டும் தொகுப்பாளராக களம் இறங்கி உள்ளார் என தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி பிக் பாஸ் 9 சீசனில் போட்டியாளர்களாக களம் இறங்க உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஃபரினா ஆசாத், உமைர் லத்தீஃப், ஷபானா ஷாஜஹான் ஆகியோர் பிக் பாஸில் கலந்து கொள்வதற்காக ஆடிஷனில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் புதிய சீசன் தொடங்க சில நாட்களே உள்ளதால், இனிவரும் நாட்களில் இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் யார், யார் என்பது பற்றி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய களம், புதிய போட்டியாளர்கள், புதுப்புது டாஸ்க்குகளுடன் புதிய பரிமாணத்தில் தொடங்க உள்ள பிக் பாஸ் 9-வது சீசனை இப்போதே எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.