
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழில் வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மட்டுமின்றி அனைத்து மொழிகளில் வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக் பிரதர் என்கிற நிகழ்ச்சியைதான், இந்தியாவில் பிக் பாஸ் என்கிற பெயரில் பல மொழிகளில் நடத்தி வருகின்றனர். இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழில் தற்போது விஜய் சேதுபதியும் (இதற்கு முன் கமல்ஹாசன்), இந்தியில் சல்மான் கானும், மலையாளத்தில் மோகன் லாலும், கன்னடத்தில் சுதீப்பும், தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 19 நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. இதில் தற்போது 13 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சீசன் டிஜிட்டல் திருப்பத்துடன் வருகிறது, அதாவது ஒவ்வொரு எபிசோடும் அதன் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு முன்பு ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஹிந்தி பிக் பாஸ் 18-வது சீசனில் முதல் முறையாக தமிழ் நடிகை நடிகை ஸ்ருதிகா பங்கேற்று அதிரடி காட்டியதுடன், இந்தி பிக்பாஸில் கலந்து கொண்ட முதல் தமிழ் நடிகை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அதுமட்டுமின்றி அவர் தனது கவர்ச்சியான ஆளுமை, குறும்புத்தனமான நடத்தை, வெகுளித்தனமான மற்றும் பந்தா இல்லாத இயல்பான பேச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், பிக்பாஸையே தமிழில் பேசவைத்து அசரடித்தார்.
இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் 19-வது சீசனில் கலந்துகொள்ளப்போகும் இரண்டு மாபெரும் நட்சத்திரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 90ஸ் கிட்ஸின் மனதில் இடம்பிடித்த மல்யுத்த ஜாம்பவான்(WWE) வீரர் தி அண்டர்டேக்கர் (The Undertaker) மற்றும் குத்துசண்டை வீரர் மைக் டைசன் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தி அண்டர்டேக்கரை, பிக் பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளதாகவும் நவம்பர் மாதம் வைல்ட் கார்டு போட்டியாளராக அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து ஒரு வாரம் தங்குவார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை என்றாலும், அவரது நுழைவு குறித்த பேச்சு ஏற்கனவே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் 19-ல் இந்த ஜாம்பவானின் வருகை உண்மையாகிவிட்டால், இந்தியாவில் உள்ள ரசிகர்கள் தி அண்டர்டேக்கரை முற்றிலும் புதிய சூழலில் பார்ப்பார்கள். தி அண்டர்டேக்கர் 2020-ல் தொழில்முறை மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் இன்னும் மல்யுத்த உலகத்தை ஆட்சி செய்கிறார்.
இதற்கு முன்பு பிக் பாஸ் சீசன் 4ல் ‘தி கிரேட்’ காளி கலந்து கொண்டுள்ளதால், WWE நட்சத்திரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இது முதல் முறை அல்ல என்றாலும், அவரது அந்தஸ்து மற்றும் புகழைக் கருத்தில் கொண்டு, தி அண்டர்டேக்கர் இந்த சீசனின் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. முன்னாள் WWE சூப்பர் ஸ்டார் ‘தி கிரேட்’ காளி பிக் பாஸ் சீசன் 4ல் ஒரு வாரம் கலந்து கொண்டதற்கு ரூ.50 லட்சம் சம்பளம் பெற்றார். இது, இந்த நிகழ்ச்சியின் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கிய பிரபலங்களில் ஒருவராக அவரை ஆக்கியது. இந்நிலையில் பிக் பாஸில் இந்த சீசனில் தி அண்டர்டேக்கர் இடம்பெறும் பட்சத்தில் அனைத்து காலத்திலும் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர்களில் தி அண்டர்டேக்கர் நிச்சயமாக ஒருவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
தி அண்டர்டேக்கர் மற்றும் மைக் டைசனும் வீட்டிற்குள் நுழைவார்கள் என்ற நம்பத்தகுத்த தகவல்கள் பரவியுள்ளதால், அது உண்மையாகும் பட்சத்தில் இந்தி பிக் பாஸ் 19 எப்போதும் மறக்கமுடியாத சீசன்களில் ஒன்றாக மாறக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.