“பெண் பாவம் பொல்லாதது” என்றார்கள் பெரியோர். ஆனால் பாவம் செய்வோரைப் பதைபதைக்கப் பழி வாங்கப் பெண்களே தயாராகி விட்டார்கள் என்பதை உணர்த்தும் விதமாகச் செல்கிறது எதிர் நீச்சல் (Edhirneechal 2) தொடர். நவராத்திரி பூஜா நேரத்தில், அரக்கன் மகிஷாசுரனைப் பலி வாங்கிய துர்கா தேவியின் செயலை ஞாபகப்படுத்துவதாக உள்ளன இந்தக் காட்சிகள்.
‘தானே அனைத்தும்! தன் எண்ணங்களே எப்பொழுதும் செயல்வடிவம் பெற வேண்டுமென்ற, ஆணாதிக்க வக்கிரக் குணம் படைத்த ஆதி குணசேகரனுக்கு எதிராக, பேசா மடந்தையாக இருந்த அவர் பாட்டியே நேரம் பார்த்துத் திரும்ப, அவருக்குத் துணையாக நிற்கிறார்கள் அவ்வீட்டின் நான்கு மருமகள்களும். கடைசி மருமகளான ஜனனி, ஆதியின் அற்பக் குணங்களை நன்கு அறிந்து கொள்வதால், மற்றவர்கள் மற்றும் தன் கணவன் சக்தியுடனும் சேர்ந்து அவரை வலுவாக எதிர்க்க ஆரம்பிக்கிறார்.
இருந்தாலும் மற்ற இரண்டு தம்பிகள் மற்றும் அறிவுக்கரசி துணையுடன் அறிவுக் கரசியின் தங்கையான அன்புக்கரசியைத் தன் மகன் தர்ஷனுக்கு மணமுடிக்க ஆதி திட்டமிடுகிறார். ஆனால், ரகசியமாக ஆதியால் கழுத்து நெறிக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஈஸ்வரி, தன் மகன் தர்ஷனுக்கு அவன் காதலித்த பெண்ணாகிய பார்கவியை மணமுடிக்க ஆசைப்படுகிறார். அந்த ஆசையை நிறைவேற்றுவதைத் தன் கடமையாக எண்ணிக் கோதாவில் இறங்குகிறார் ஜனனி.
காட்டு பங்களாவில் மறைந்திருந்து, பல இன்னல்களைச் சந்தித்து ஜீவானந்தமும், பார்கவியும் திரும்புகையில், குண்டடிபட்ட ஜீவானந்தம் பக்கத்துக் கிராமத்திலுள்ள ஓர் ஓய்வு பெற்ற ராணுவ டாக்டரால் காப்பாற்றப்படுகிறார். அவர்கள் இருக்கும் இடத்தைப் பல சிரமங்களுக்குப் பிறகு கண்டுபிடித்து, அங்கு வருகிறார் ஜனனி.
அதேசமயத்தில், திருமண மண்டபத்தில் காலை நான்கு மணிக்கே திருமணத்தை நடத்திவிட ஆதி திட்டமிட்டு, அதற்காக யாரையும் நம்பாமல் விழித்திருக்கிறார்- தன் மகன் தர்ஷன் படுத்திருக்கும் இடத்திலேயே. ஜனனி, பார்கவியை முடித்துவிட்டதாக அறிவுக்கரசியின் ஆட்கள்கூற, அதை நம்பாத ஆதி வேறொரு குரூப்பை ஏவ, அவர்களோ, அந்த மூவரும் உயிருடன் இருப்பதை வீடியோவில் காட்ட, வேறொரு குழு மூலம் மூவரையும் தீர்த்துக்கட்ட ஆட்களை அனுப்பி விட்டு, ’முடித்து விட்டோம்!’ என்று அவர்கள் அனுப்பும் நற்செய்திக்காகவும் தூங்காமல் விழித்திருக்கிறார் ஆதி!
இந்த நிலையில், ஆதி, ஈஸ்வரியை கழுத்தை நெறிக்கும் வீடியோவை ரகசியமாகப் பார்த்து விட்ட கரிகாலனின் நண்பனான டெக்னீஷியன் அறிவுக்கரசியிடம் ஒரு கோடி கேட்டு மிரட்ட, அவரும் தருவதாகச் சொல்லி விடுகிறார். டெக்னீஷியனும் அவர் நண்பரும், ’ஒரு கோடி கிடைத்ததும் என்னவெல்லாம் செய்யலாம்! எங்கு சென்று செட்டில் ஆகலாம்!’ என்று கனவில், தூங்காமல் விழித்திருக்கின்றனர்.
ஆதியின் ஆட்கள், பார்கவி உள்ளிட்ட மூவரையும் கொல்ல நேரம்பார்த்துக் காத்திருப்பதை ஜனனியும் ஜீவானந்தமும் உணர்ந்து, அவர்களும் தயாராகி, மெல்லத் தப்பிக்க வழி தேடுகிறார்கள். அவர்கள் கிளம்ப எத்தணிக்கையில், ஆதியின் ஆட்கள் அதிரடியாக உள்ளே நுழைய, அவர்களைத் தனியாகவே சந்திக்கிறார் ஜனனி! அப்பப்பா!
என்ன அடி! என்ன வேகம்! அவர்களைப் பந்தாடுகிறார்!அடிபட்டவர்கள் எழும்பவே சிரமப்பட, அவர்கள் வெளியில் இருக்கிறார்களா? என்று பார்த்து வரச் சென்ற பார்கவியும் ஜீவானந்தமும் உள்ளே வருகிறார்கள். மூவரும் உடனடியாகப் புறப்படவும் செய்கிறார்கள். அதே நேரத்தில், தனது கையாட்களைக் கத்தியுடன் வரவழைக்கும் அறிவுக்கரசி, அந்த டெக்னீஷியனைத் தனியறைக்கு அழைத்துத் தன் கையாலேயே, கோபந்தீரக் குத்திக் கொல்கிறாள்!
நேர்மையை வாழ வைக்க நினைக்கும் ஜனனி,எதிரிகளை அடித்து மட்டுமே விரட்டுகிறார்! தீமையிலேயே உழலும் அறிவுக்கரசி அரக்கியாக மாறி, தன்னிடம் பணம் கேட்டவனைப் பரிதாபம் பார்க்காமல் தீர்த்துக் கட்டுகிறாள்! கொலைக்குத் துணை புரிந்த அவளின் அல்லக்கை,”கொலை விழுந்த இந்த மண்டபத்திலா திருமணம் செய்யப் போகிறீர்கள்?பார்த்தும்மா!”என்று எச்சரிக்கை சங்கூத, அந்த நள்ளிரவிலும் சென்று ஆதியிடம், கோயிலில் திருமணம் நடத்தலாம் என்று கூற, அவரோ அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
இந்தக் களேபரங்களின் இடையே, தர்ஷனை, சக்தியும், நந்தினியும் எழுப்பி அழைத்து வர, காருடன் ரேணுகா ரெடியாக இருக்க, காருக்கு அருகில் அவர்கள் வர இருக்கையில், ஆதி தன் இரண்டு தம்பிகள் மற்றும் தன் குரூப் புடைசூழ வாசலுக்கு வந்து விடுகிறார். இக்கட்டான சூழலில் நந்தினி பார்ட்டி விழிக்க, ஆதி நமட்டுச் சிரிப்புடன் நின்றிருக்கிறார்! இனி என்ன நடக்கப் போகிறதோ?அந்த டைரக்டருக்கே வெளிச்சம்!