பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது சரவணனின் வாழ்க்கையில் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. தங்கமயிலின் அப்பா, தங்கள் கடையில் வேலைக்கு வரப்போவதாகக் கூற, சரவணன் மிகவும் கோபப்படுகிறான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் கடந்த சில எபிசோட்களில் பாண்டியன் வயலை விற்று அந்தப் பணத்தை செந்தில் மற்றும் கதிர் ஆகியோருக்கு தருகிறார். இதனால் தங்கமயில் சரவணனிடம் கோபப்படுகிறார். சரவணன் தங்கமயிலை திட்டிவிட்டு 'என் அப்பா செய்ததுதான் சரி' என்று சொல்லிவிட்டு செல்கிறார். மறுபக்கம் அரசிக்கு தோன்றும்போது திருமணம் செய்துக்கொள்ளுமாறு பாண்டியன் கூறிவிட்டார்.
இப்படியான நிலையில், தற்போது சரவணின் மாமனார், பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வந்து, வேலை கேட்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் சரவணன், "இதெல்லாம் சரிப்பட்டு வராது" என்று நேரடியாகச் சொல்கிறான். ஆனால், பாண்டியன், "அவருக்கு வேலை இல்லை, அதான் கஷ்டப்படுறார். கொஞ்ச நாள் கழித்து சொந்தமாக வியாபாரம் தொடங்கப் போகிறாராம், அதுவரைக்கும் இங்க வேலை செய்யட்டும்" என்று கூறி சரவணனை சமாதானப்படுத்த முயல்கிறார். தந்தையின் பேச்சை மீற முடியாமல் சரவணன் அமைதியாக இருந்தாலும், அவனுக்கு இது சரியில்லை என்று தோன்றுகிறது.
வீட்டுக்கு வந்ததும் சரவணன், தங்கமயிலிடம், "நீயும் உன் குடும்பமும் அடுத்தது என்ன திட்டம் போட்டிருக்கீங்க?" என்று கோபமாகக் கேட்கிறான். மயில் எதுவும் தெரியாததுபோல், "என்ன மாமா சொல்றீங்க?" என்று கேட்க, சரவணன், "எதுவும் தெரியாத மாதிரி நடிக்காதே! உன் அப்பா ஏன் எங்க கடைக்கு வேலைக்கு வரணும்னு கேட்கிறார்?" என்று பொங்குகிறான்.
அதற்கு மயில், "என்னங்க உங்க கடை? எங்க கடை? நம்ம கடைதானே!" என்று சொல்ல, சரவணன் மேலும் கோபமடைந்து, "அடுத்தது கடையை ஆட்டையைப் போட திட்டம் போட்டுட்டீங்களா? அது என் அப்பா தன் உழைப்பால் உருவாக்குன கடை. அங்கே ஏதாவது தப்பு நடந்தா சும்மா இருக்க மாட்டேன்" என்று கடும் எச்சரிக்கை விடுக்கிறான்.
மேலும், "உன் அப்பா கடைக்கு வரக்கூடாது. அதுக்கு நீதான் பொறுப்பு. அதையும் மீறி அவர் வந்தா, அதுக்கப்புறம் நடக்கிற விஷயங்களுக்கு நான் பொறுப்பல்ல" என்றும் கூறுகிறான். இதனால் மயில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறாள்.
மறுபுறம், மீனாவுக்கு அலுவலகத்தில் இருந்து புதிய குவார்ட்டர்ஸ் கிடைத்திருக்கிறது. ஆனால், அவள் அதை வேண்டாம் என்று சொல்லப்போவதாக செந்திலிடம் கூறுகிறாள். செந்தில் தனியாகச் செல்வதற்காக, "நம்ம அங்க போகலாம். இந்த வீட்ல ஒரு பேர்ஸ்னல் ஸ்பேஸ் இல்லை" என்கிறான். ஆனால், மீனா, "இங்கே இருக்குற தனிமையே போதும். நான் குவார்ட்டர்ஸ் வேண்டாம்னு சொல்லிடுறேன்" என்று உறுதியாகக் கூறுகிறாள்.
செந்தில், தனது மாமனாரிடம் வந்து, மீனா குவார்ட்டரை மறுப்பதாகச் சொல்லி, அவளிடம் பேசுமாறு கேட்டுக்கொள்கிறான். "என் குடும்பத்தில் எல்லோரும் நல்லவங்க, பாசமானவங்கதான். ஆனால் நான் தனியா இருக்க விரும்பறேன். அதான் வந்தேன்" என்றும் சொல்கிறான். மீனாவின் அப்பா, அவளிடம் பேசுவதாக வாக்குறுதி அளிக்கிறார்.
வீட்டில், பாண்டியன், சரவணனை வங்கிக்கும், பழனியை குடோனுக்கும் வேலைக்கு அனுப்புகிறான். இதைப் பார்க்கும் சுகன்யா, பழனியிடம், "உங்களை எடுபிடி மாதிரி வச்சிருக்கார். தன் பசங்க மாதிரி உங்களை நடத்தலை" என்று அவமானப்படுத்துகிறாள். இதைக் கேட்டு பழனி மிகவும் மனமுடைந்து போகிறான்.
சரவணன் கொடுத்த எச்சரிக்கையால், மயில் தனது பெற்றோரிடம் பேசலாம் என்று கிளம்பி வரும்போது, கடன்காரர்கள் அவளது தாயான பார்வதியை அவமானப்படுத்துகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மயில் என்ன செய்யப் போகிறாள் என்பதை நாளைய எபிசோடில் காணலாம்.