
நாட்டில், தன் வீடு மட்டுமே சொர்க்கமாக இருப்பது போலவும், அடுத்தவர் வீடுகளிலேயே அத்தனை பிரச்னைகளும் நிகழ்வதாகவும் எண்ணிக் கொண்டு புரளி பேசி வந்தவர்களின் பேச்சைக் குறைத்த பெருமை, நமது சானல்களின் மெகா சீரியல்களுக்கு உண்டு.
தங்களுக்குப் பிடித்த சீரியல்கள் வருகின்ற நேரத்தில், வேறெந்தக் குறுக்கீடும் இல்லாமல் பார்த்துக் கொள்வதும், உறவினர்கள் வருகை மற்றும் அவர்கள் கால்களைக் கட் செய்துவிடுவதும் கூட தற்போது நடந்து வருகிறது. ஓடியுழைத்து, ஓடாகத் தேய்ந்து, வீட்டுக்குள் ஒடுங்கி விட்ட பல பேரின் பொழுது போக்கு, இந்த மெகா சீரியல்கள் தான் என்றால் அது மிகையில்லை!
மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு, ஓய்வாக அமர்ந்து பார்க்கப்படும் இலக்கியா சீரியல், எல்லோர் மனதிலும் நிற்கும் ஒன்று.
ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நல்ல பெண். அப்பா இல்லாமல், தாய் மாமன் நிழலில் வளர்கிறார். மாமன் சாதகம் என்றால், மாமியும் அவர் மகளும் பாதகமோ பாதகம்!
நல்ல குணம் மற்றும் நன்றியுணர்வு மிக்க இலக்கியா எந்த விதத்திலும் சிறப்படையாமல் பார்த்துக் கொள்வதையே, தங்கள் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள் அவர்கள்.
மாமன் மீது கொண்ட மதிப்பாலும், மாமி மற்றும் அவர் மகளின் குணத்தை நன்கு அறிந்ததாலும், அவர்கள் தோண்டும் அத்தனை குழிகளையும் எளிதாகத் தாண்டி வந்து விடுகிறார் இலக்கியா!வசதியான குடும்பத்தில் வாக்கப்படும் (வாழ்க்கைப்படுமோ!) வரம் கிடைத்து, ஓர் இளம் தொழிலதிபர் கௌதமைக் கைப் பிடிக்கிறார் இலக்கியா.
நல்ல மாமனார்- மாமியார் கிடைத்தாலும், நாயகனின் அத்தைக்கு மட்டும் ஆரம்பத்திலிருந்தே இலக்கியாவைப் பிடிக்கவில்லை. ’சிலரைப் பார்த்ததும் பிடிக்கும்; சிலரைப் பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்; சிலரைப் பிடிக்கவே பிடிக்காது!-அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும். அந்த மூன்றாவது ரகத்தில் இலக்கியாவை அத்தை ஒதுக்க,அந்த அத்தையையும் சமாளிக்கிறார் இலக்கியா!
கௌதமும், கார்த்திக்கும் ஜானுவின் இரண்டு பிள்ளைகள் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு, இடையில் குதிக்கிறது இனிய சஸ்பென்ஸ். கௌதம், ஜானுவுக்கோ, தானும் அவரின் தாய் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் அத்தைக்கோ இல்லாமல், வேறு யாரோ ஒரு ஜோடியின் மகன்! யார் அந்த கப்பிள் என்று அறியும் உத்வேகத்தை நமது உள்ளத்தில் தோற்றுவித்து, மெல்ல மெல்ல விடையைத் தருகிறார்கள். முதலில், அம்மாவை அறிமுகப்படுத்தி, பின்னர் அப்பாவை, ரசிகர்களாகிய நமக்கு யாரென்று உணர்த்திவிட்டு, இன்னும் கௌதமக்குத் தெரியாமல் காப்பாற்றப்படும் ரகசியமாக உள்ளதாலேயே, இது இனிய சஸ்பென்ஸ்.
தொழிலில் போட்டி போடும் எஸ்எஸ்கே(SSK)தான் தன் தந்தை என்பது தெரியாமல்,அவருக்கு அனைத்து விதத்திலும் டப் பைட் (tough fight)கொடுக்கிறார் கௌதம்! தன்னால் தொழில் ரீதியாகக் கௌதமை எதிர்க்க முடியாமல் தோற்றுப் போகும் எஸ்எஸ்கே, அவரைக் கொல்லவும் திட்டம் தீட்டுகிறார். ஆனால், இலக்கியாவின் உதவியால் ஒவ்வொரு இக்கட்டிலுமிருந்தும் தப்பித்து வருகிறார் கௌதம்.
உயர்தர தொழில் அதிபர்கள் கூட்டத்தில், கௌதமைக் கேவலப்படுத்த எண்ணும் எஸ்எஸ்கே, ’அப்பன் பெயர் தெரியாத அவன், என்னிடம் போட்டியிடத் தகுதியே இல்லாதவன்!’ என்று இழித்துப் பேச, கௌதம் தலை குனிந்து நிற்கிறார். அதற்குப் பதிலடியாக, எஸ்எஸ்கேயின் பிறந்த நாளில் கௌதமை அவர் வாயாலேயே கூப்பிட வைத்து, அனைவர் முன்னிலையிலும் மன்னிப்பும் கேட்க வைக்கிறார் நாயகி இலக்கியா! கௌதமைப் பழி வாங்க,கார்த்திக்-அஞ்சலியைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு, அவர்களுக்குத் தெரியாமலேயே கார்த்திக்கைக் கடத்தித் துன்புறுத்துகின்றனர் எஸ்எஸ்கே தம்பதியினர்.
அதைப் புரிந்து கொள்ளாத அவர்கள், அதனைத் தெரிந்து கொண்டு இலக்கியா-கௌதம் தம்பதியினர் அத்தாட்சியுடன் சொல்லிய போதும், நம்ப மறுத்து, தாட்சாயணி வீட்டிலேயே அடைக்கலம் ஆகி விடுகின்றனர். ’நுணலும் தன் வாயால் கெடும்’என்பதற்கிணங்க, எஸ்எஸ்கே தன் வாயாலேயே தன் குற்றங்களை அடுக்கியதை வீடியோவாக எடுத்து, அவரைச் சிறைக்கு அனுப்பி வைக்கிறாள் இலக்கியா!
இருந்தும் தாட்சாயணி, கார்த்திக்-அஞ்சலி துணையுடன் கௌதமின் சொத்துக்களைக் கார்த்திக் பெயருக்கு மாற்றி, பின்னர் தாங்கள் சுருட்டத் திட்டம் போடுகின்றார்.பெரிய கான்ட்ராக்ட் என்று கூறி,அதற்குக் கையெழுத்து வாங்குவதாகக் கூறி ஏமாற்றி, கௌதமிடம் கையெழுத்து வாங்கி விடுகின்றனர். கௌதமின் தந்தை எஸ்எஸ்கேதான் என்பதும்,எஸ்எஸ்கேவின் மகன்தான் கௌதம் என்பதும் இருவருக்கும் தெரியாமலே, இனிய சஸ்பென்ஸ் தொடர்கிறது!
நல்ல மனைவி வாய்த்தவர்கள் எந்தச் சந்தர்ப்பத்தையும் எதிர்கொண்டு, எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது இலக்கியா-கௌதம் ஜோடி!நல்ல எண்ணங்களும்,நன்றியுணர்வும் இல்லாதிருந்தால் எப்பொழுதும் சிரமமே என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது அஞ்சலி கார்த்திக் ஜோடி.
இனிய சஸ்பென்ஸ் எப்பொழுது உடையப்போகிறது? கார்த்திக்-அஞ்சலி, உண்மையை எப்போது உணரப் போகிறார்கள்? விடை சொல்ல வருகிறது சின்னத்திரை! பார்த்திருப்போம் காத்திருப்போம்!