
‘உரலுக்கு ஒரு பக்கம் இடி! மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி!’ என்ற முதுமொழியை மெய்ப்பிப்பதாக அமைந்துள்ள மெகாசீரியல், ‘லட்சுமி’!
நடுத்தரக் குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்து, தந்தையைச் சிறு வயதிலேயே இழந்து, இருந்த அண்ணனும் உருப்படியாகயில்லாமல் ஓடிப்போக, தாயையும், தன் இரண்டு தங்கைகளையும் கௌரவமாகக் காப்பாற்றி வரும் மஹா (லட்சுமி), தன் திருமணத்தையே தள்ளிப்போட்டு வர, தாயின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாலும், மணமகன் வீட்டாரிடம் சில கண்டிஷன்களைப் போடுகிறார்.
மணமகன் செல்வத்தின் தாய், அதீத பண ஆசை கொண்டவராக இருக்கிறார். தன் மருமகள் மஹா, தன் முழுச் சம்பளத்தையும் தன்னிடமே கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். ஆனால் மஹாவோ, தன் தாய் குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பில் இருப்பதைக் கூறி, தன் சம்பளத்தின் ஒரு பகுதி அவர்களுக்கும் செல்லும் என்று கூற வருகிறாள்.
அப்படிச் சொன்னால், தன் தாய் ஒத்துக்கொள்ள மாட்டாள் என்றுணர்ந்த செல்வம், அதனைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாமென்றும், தக்க சமயத்தில் தன் தாயிடம் கூறிக் கொள்வதாகவும் கூறுவதோடு, பெண் வீட்டுச் செலவுகளையும் தானே ஏற்றுச் செய்கிறான்-கடன் வாங்கி. அதனால் வரும் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறான்.
புது மருமகளின் முதல் மாதச் சம்பளத்தை முழுதாக எதிர்பார்த்துக் காத்திருந்த செல்வத்தின் தாய், அதன் ஒரு பகுதி குறைவதை ஏற்றுக் கொள்ளாது, முன்பே கூறாததற்காகக் கோபிக்கிறாள். கணவனையும் விட்டுக்கொடுக்க முடியாமல், தான் செய்யாத குற்றத்தையும் ஒப்புக் கொள்ள முடியாமல், தவிக்கிறாள்!
பணவரவு குறைந்ததால், சொந்த மாமியாரே மஹாவுக்கு எதிரியாகி விடுகிறார்.
வீட்டிலிருக்கும் நாத்தனார் வெண்ணிலா, பொறாமை காரணமாக அவளுக்குச் சிக்கல் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். மஹா சூபர்வைசராக இருந்த கார்மெண்ட் கம்பனியின் முதலாளி, தனக்குப் பிறகு அவள்தான் கம்பனியை நடத்த வேண்டுமென்று ஆசைப்பட, சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வரும் மகன், கம்பனியை வேறு ஒருவருக்கு விற்க முயற்சிக்க, தானே கம்பனியை வாங்கிக் கொள்வதாகக்கூறி, பல சிரங்களுக்குப் பிறகு, செல்வத்தின் வாலண்டரி ரிடையர்மெண்ட் பணம் 10 லட்சத்தைக் கொடுக்க, பணத்துடன் அவரை அவர் மகன் அஸ்வினி கடத்தி விட, பணத்தையும் இழந்து பரிதவிக்கிறாள் மஹா!
பல சிரமங்களுக்குப் பிறகு கார்மெண்டைத் தனதாக்கிக் கொண்டு, ப்ரொடக்ஷனை ஆரம்பித்தாலும், அஸ்வின் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே வருகிறான்.
பணத்தாசையிலும், படாடோபத்திலும் விருப்புக் கொண்ட வெண்ணிலா, அஸ்வினுடன் சேர்ந்து கொள்கிறாள். ஒவ்வொரு நிகழ்விலும் அஸ்வின் தோற்றாலும், மீண்டும்…மீண்டும் மஹாவைச் சீண்டுவதையே வாடிக்கையாக்கிக் கொள்கிறான். அவளை நேரடியாக வெற்றி கொள்வது கடினம் என்பதை உணர்கிறான் அவன். இந்த நேரத்தில் மீண்டும் அஸ்வினுடன் சேர்ந்த வெண்ணிலா, மஹாவின் தாய், தங்கைகளுக்குப் பிரச்னை கொடுத்தால் அவள் துடித்துப் போவாள் என்று கூறி, ஓர் ஐடியாவையும் கொடுக்கிறாள்.
அவர்கள் கான்ட்ராக்ட் எடுத்துச் செய்த லட்டைச் சாப்பிட்டவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு ஊசலாடுவதாகவும், கம்ப்ளைண்ட் வந்திருப்பதாகவும் கூறி, ஏரியா இன்ஸ்பெக்டர் துணையுடன், மஹாவின் தாயையும், இரண்டு தங்கைகளையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு வர வற்புறுத்தி, வேண்டுமென்றே தெருவில் நடத்தி அழைத்துச் செல்கிறார்கள். அவள் தாயாரை அடிக்கவும் செய்கிறார்கள்.
அனைத்துக்கும் காரணம் அஸ்வினே என்பதை அறிந்த மஹா, அவர் வீட்டிற்குள்ளேயே ஒயிட் சுகரை வைத்துக் கிலி ஏற்படுத்துகிறார். ’ஆயுள் முழுவதும் ஜெயிலில்தானோ?’
என அரண்டு போன அவனை, அரெஸ்ட் செய்த அதிகாரியிடம் பக்குவமாகப் பேசி, காப்பாற்றியும் விடுகிறார்.
கார்மெண்டில் ஏற்படும் பிரச்னைகளானாலும் சரி, வீட்டில் ஏற்படும் சிக்கல்களானாலும் சரி, தன் பொறுமையாலும், நிதானமான சிந்தனையாலும் எல்லாவற்றையுங் கடந்து முன்னேறி வருகிறார்.
லட்சுமி சீரியலைப் பார்க்கும் பெண்கள், மஹாவைப்போலவே பிறந்த வீட்டையும், புகுந்த வீட்டையும் எப்பொழுதும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் காப்பார்களானால் குடும்பங்களில் நிம்மதி நிலவும். குறிப்பாக ஆண்களுக்கு அமைதி கிடைக்கும்!
தொடரட்டும் மஹாவின் மகத்தான தியாகங்களும், மதிநுட்ப நடவடிக்கைகளும்!